Published:Updated:

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய மதுரைப் பெண்!- தூக்க கலக்கத்தில் இறங்கியபோது விபரீதம்!

செ.சல்மான் பாரிஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

நடைமேடையை சிறிது உடைத்து ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின் அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பிளாட்பாரத்தில் சிக்கிய பெண்
பிளாட்பாரத்தில் சிக்கிய பெண்

ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலில் இருந்து கவனக்குறைவாக இறங்கிய பெண், ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை ரயில் பிளாட்பாரம்
மதுரை ரயில் பிளாட்பாரம்

சென்னையிலிருந்து புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில் இன்று காலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா என்ற பெண் ரயில் பெட்டியிலிருந்து நடைமேடையில் இறங்கியுள்ளார். ரயில் அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் கவனக்குறைவாக இறங்கியதால் தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

இதைப்பார்த்து பயணிகள் சத்தம் போடவே, ரயில் நிறுத்தப்பட்டது. உடனே அந்த இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாரும், பொதுமக்களும் அவரை மீட்க முயன்றனர். நடைமேடையை சிறிது உடைத்து ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின் அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். சிறிது காயமடைந்துள்ள அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிளாட்பாரத்தில் சிக்கிக்கொண்ட கால்
பிளாட்பாரத்தில் சிக்கிக்கொண்ட கால்

தூக்க கலக்கத்தில் இருந்தபடியே இறங்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் மதுரை வழியாக செல்லும் பல்வேறு ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. ரயில்வே போலீஸ் மற்றும் மீட்புப்படையினரின் உதவியால் இப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டதை அனைவரும் பாராட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை உடனே ஏற்பாடு செய்துள்ளது மதுரை ரயில்வே நிர்வாகம்.

பயணிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில், ``தண்டவாளப்பகுதிகள் ரயில்கள் செல்வதற்கு மட்டுமே. மனிதர்கள் செல்வதற்கு அல்ல. ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்ல நடைமேம்பாலம் நமக்காக (ரயில் பயணிகளுக்காக) தான் கட்டப்பட்டுள்ளது என்பதை மறந்துவிட்டோம். விரைவாக செல்ல ரயில் வண்டிகளில் விரைவு வண்டிகளைத் தேடும் நாம் வாழ்வை விரைவாக இழக்கலாமா. நடைமேடைகளைச் சென்றடைய தானாக நகரும் படிக்கட்டுகள் மற்றும் தன் காலால் கடந்து செல்லும் படிக்கட்டுகள் இருந்தும் தண்டவாளத்தைக் கடந்து தடுமாறி விழலாமா.

ஆயிரக்கணக்கானோரை ஏற்றிக்கொண்டு தன் வழித்தடத்தில் செல்லும் ரயில் வண்டிக்கு ரயில் வராத டிராக் என புறமுதுகைக் காட்டி புனித உயிரை இழக்கலாமா. நவநாகரிக உலகில் கைப்பேசி அவசியம்தான். ஆனால், காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரயில் வராது என்ற நினைப்பில் தண்டவாளத்தில் நீ நடந்தால் வாழ்க்கையை இழக்க வேண்டியதுதான். ரயிலில் இருக்கை நிறைந்துவிட்டால் படிக்கட்டில் பயணம் செய்ய யார் சொன்னார்கள். சிந்திப்பீர். தாய், தந்தை, மனைவி, குழந்தைகளை எண்ணிப்பாருங்கள். சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வார்களா. படிக்கட்டில் காலைத் தொங்க விட்டுக்கொண்டு சென்று பாதி காலை இழக்கலாமா.

ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு நோட்டீஸ்
ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு நோட்டீஸ்

யானை வழித்தடம், நீர் வழித்தடம் மற்றும் ரயில் வழித்தடம் என தனித்தனியே இருக்கும்போது மனிதா நீ மட்டும் ஏன் தடம் மாறுகின்றாய். கல்லூரி மாணவர்களே, பள்ளி மாணவர்களே உங்களது பகுதிகளில் தண்டவாளப் பகுதியைக் கடக்காதீர்கள். திட்டமிடுங்கள். சிறிது நேரம் முன்னரே புறப்படுங்கள். முறையான பாலம், நடைபாதை, வழித்தடத்தைப் பின்பற்றுங்கள். தண்டவாளத்தைக் கடக்கும்முன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்யும்முன் ஒரு நொடி உங்களை நம்பி உங்களின் வாழ்வை வளமாக மாற்ற உழைக்கும் உங்களது பெற்றோரை எண்ணிப்பாருங்கள். இது அவசியமா? பாதுகாப்பாகத்தான் பயணம் செய்கின்றோமா என்பது உங்களுக்கே தெரியும். கனி இருக்க காயைத் தின்போமா? பகட்டான இருக்கை இருக்க பாதுகாப்பற்ற படிக்கட்டுப் பயணம் தேவையா?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.