தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில், ஏற்பட்ட மின் விபத்தில் மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், ``குருவி விழுற மாதிரி கரன்ட் ஷாக் அடிச்ச எல்லாரும் சுருண்டு விழுந்துட்டாங்க. கண்ணிமைக்கும் நேரத்துல எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு’’ எனக் கதறினார்.

தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள களிமேடு கிராமத்தில் திருநாவுக்கரசு அப்பர் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் திருநாவுக்கரசர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தன்று அந்தக் கிராம மக்கள் குருபூஜை விழா நடத்துவது வழக்கம். அதன்படி 94-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று தொடங்கியது. காலை பொதுமக்கள் பால் குடம் எடுத்ததுடன் தொடங்கிய விழா உற்சாகமாக நடைபெற்றுவந்தது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கியது. தேரின் பீடத்தில் திருநாவுக்கரசு உற்சவர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். சப்பரம் எனப்படும் தேர் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மின் விளக்குகள் எரிவதற்காக தேரின் பின் பகுதியில் ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர்.

மின் கம்பிகள் வரும் இடத்தில் மடக்கி நிமிர்த்திக்கொள்ளும் வகையில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் தேரைப் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் பூசாரி உள்ளிட்ட சிலர் தேரின் மேல் பகுதியில் இருந்தனர். தேர் வரும்போது திருநாவுக்கரசரை வரவேற்கும்விதமாக பெண்கள் சாலையில் தண்ணீர் ஊற்றினர். ஒவ்வொரு வீடாக தேர் நின்று செல்ல அந்த வீட்டுப் பெண்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இரவு மூன்று மணியளவில் கிட்டத்தட்ட தேர் அப்பர் மண்டபத்தை அடையும் நிலைக்கு வந்துவிட்டது. சுமார் 30 அடி அளவில் உள்ள அப்பர் மண்டபத்துக்கு முன்னரே சாலையில் வளைவான பகுதியில் தேரின் சக்கரம் இறங்கிவிட்டது. அப்போது தேரின் மேல் பகுதி அந்த வழியாகச் சென்ற உயர் மின்அழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதனால் தீப்பொறி கிளம்பியதுடன் தேரில் மின்சாரமும் பாய்ந்திருக்கிறது.

இதையடுத்து தேரில் இருந்த கோயில் பூசாரி உள்ளிட்டவர்கள் அப்படியே சரிந்து விழுந்துள்ளனர். இரவு நேரம் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் தேர் தீப்பிடித்து எரியத் தொடங்கியிருக்கிறது. ஜெனரேட்டர் மற்றும் மின் அலங்கார விளக்குகளுக்காகப் பொருத்தப்பட்டிருந்த மின் ஒயர்கள் தீயில் அறுந்து சாலையில் விழுந்துள்ளன. சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டு ஈரமாக இருந்ததால், சாலையிலும் மின்சாரம் பாய்ந்ததாகச் சொல்கிறார்கள் விபத்தை நேரில் கண்டவர்கள்.
இதை தொடர்ந்து சிறுவர்கள், பெரியவர்கள் என பலர் மீது மின்சாரம் பாய்ந்தது. சாலையின் பக்கவாட்டில் நின்றவர்கள் ஆபத்து ஏதுமின்றி தப்பினர். உடனடியாக மின் நிறுத்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரையும் மீட்டுள்ளனர். அதிகாரிகள், போலீஸ், தீயணைப்புத்துறையினர் எனப் பலரும் களிமேட்டுக்கு விரைந்து சென்றனர்.

தேரிலேயே சிலர் உயிரிழந்து கிடந்துள்ளனர். பெரியவர்கள், சிறுவர்கள் என 10 பேர் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். விபத்து நடந்த இடத்துக்கு எதிரே உள்ள வீட்டைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்... அவரிடம் பேசினோம்.
``தேர் மேல் பகுதி கரன்ட் கம்பியில உரசியதுமே கம்பியில இருந்து நெருப்பு கொட்டிச்சு. அடுத்து தேருல இருந்தவங்க அப்படியே சாய்ந்தனர். எல்லாருக்கும் என்ன நடக்குதுன்னே தெரியலை. கரன்ட் ஷாக் அடிச்சுத்தான் விழுறாங்கன்னு சுதாரிக்கறதுக்கே சில நிமிடங்கள் ஆனது. அதற்குள் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலரும் குருவி விழுற மாதிரி சுருண்டு விழுந்து இறந்துட்டாங்க.

சாலை ஓரத்தில் கிடந்த தண்ணீர், சாலை என எல்லா இடத்திலும் மின்சாரம் பாய்ந்தது. தரையில கால்வெக்கவே நடுக்கமாக இருந்துச்சு. கண்மூடி கண் திறக்குறதுக்குள்ள எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துவிட்டனர் என்கிற செய்தி எங்க ஊரை மட்டுமல்ல, சொந்த பந்தங்கள் எனப் பலரையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதிலிருந்து நாங்க எப்படி மீளப்போறோம்னு தெரியலை” என்று கதறினார்.