Published:Updated:

`சாக்கடை தெருவில் ஓடுதுன்னு கவலைப்பட்டார்!' -கும்பகோணத்தைப் பதறவைத்த துப்புரவுத் தொழிலாளி மரணம்

அடைப்பைச் சரி செய்வதற்காக சாலையில் படுத்துக்கொண்டே பாதாளசாக்கடைக்குள் தலையை நுழைத்திருக்கிறார் கமல் பாஷா. அப்போது, விஷவாயு தாக்கியதால் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார்.

கமல் பாஷா
கமல் பாஷா

கும்பகோணத்தில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கமல்பாஷா
உயிரிழந்த கமல்பாஷா

கும்பகோணம் பகுதியில் கடந்த பல நாள்களாக பாதாளச் சாக்கடை நிரம்பி, சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் பலவித நோய் பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். `பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ எங்கே போனது எனவும் தெரியவில்லை' என சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

Vikatan

இந்த நிலையில், நேற்றிரவு கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. இதை சரிசெய்வதற்காக கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அவர்களும் இயந்திர லாரியின் உதவியுடன் பாதாளச் சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது உயிர்ப்பலியில் போய் முடியும் எனக் கடந்த மாதமே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
சமூக ஆர்வலர்

குடிதாங்கி பகுதியைச் சேர்ந்த ராஜா, வீரமணி, மேலக்காவிரி தங்கையா நகரைச் சேர்ந்த கமல்பாஷா உள்ளிட்ட நான்கு பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் அடைப்பை சரிசெய்யும் குழாய் அதற்குள் செல்லவில்லை. இதையடுத்து, அடைப்பைச் சரிசெய்வதற்காக சாலையில் படுத்துக்கொண்டே பாதாளச் சாக்கடைக்குள் தலையை நுழைத்திருக்கிறார் கமல் பாஷா. அப்போது, விஷவாயு வெளியேறியதால் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். இதைக் கண்ட மற்ற பணியாளர்கள், அதிர்ச்சியுடன் கமல்பாஷாவைத் தூக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவரை வெளியே எடுக்க முடியவில்லை.

இந்தத் தகவலை நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். ஆனால், கமல் பாஷாவை வெளியே எடுப்பதற்கு அதிகாரிகளும் எவ்வித முயற்சியையும் துரிதமாக எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் நகராட்சி
கும்பகோணம் நகராட்சி

அதன்பின்னர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு கமல்பாஷாவை இறந்த நிலையில் வெளியே எடுத்தனர். அவரது உடலைப் பார்த்து மற்ற பணியாளர்கள் கதறி அழுதனர். ` ரோட்டுல கழிவுநீர் ஓடுதுன்னு வேதனைப்பட்டு அடைப்பை சரிசெய்யணும்னு நினைச்சார். அவர் உயிர் இப்படிப் போகும்னு நினைக்கலையே' என அருகில் இருந்தவர்கள் கதறியழுதனர். அதன்பிறகு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

கமல் பாஷா மரணம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சத்யநாராயணன், `` பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பணி செய்கிறார்கள். நகராட்சி நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டுவது உயிர்ப்பலியில் போய் முடியும் எனக் கடந்த மாதமே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் அகற்றுவதில் நீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கூறியிருக்கிறது. குறிப்பாக, மனிதர்கள் மேன்ஹோலில் இறங்கி வேலை செய்யக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது.

மகாமகம் குளம்
மகாமகம் குளம்

இதுபோன்ற பணிகளில் ஈடுபடும்போது சாக்கடைக்குள் விஷவாயு இருக்கிறதா என்று அறிந்துகொண்ட பிறகு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். ஆனால், ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனமும் நகராட்சி நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததே கமல்பாஷாவின் மரணத்துக்குக் காரணம். இனி அவரது குடும்பத்தை யார் கவனிப்பார்கள்?" என்றார் வேதனையுடன்.