Published:Updated:

சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணித்த கார் விபத்து! - இளைஞர் படுகாயம்

காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த்தானா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

விபத்தை ஏற்படுத்திய கார்
விபத்தை ஏற்படுத்திய கார்

2016-ம் ஆண்டு `கவலை வேண்டாம்' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து தமிழில் `துருவங்கள்16’ `பாடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், `இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமானார்.

விபத்து
விபத்து

மேலும் `ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில், நேற்று நுங்கம்பாக்கத்தில் அவர் சென்ற கார், இளைஞர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நள்ளிரவு 2 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில், கார் ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது. அங்கு, சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பரத் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது வந்த வேகத்தில் கார் மோதியுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார்.

மேலும், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அருகிலிருந்த கடை ஒன்றும் இதனால் சேதமடைந்தது. உடனே, அங்கிருந்தவர்கள் பரத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். விபத்து நடந்ததையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார் என்கிறார்கள்.

விபத்து
விபத்து

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான சொகுசுக் காரை அப்புறப்படுத்தி பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். காரை யாஷிகா ஆனந்த்தான் ஓட்டிவந்தாரா என்பது குறித்து உறுதியாக தகவல்கள் வெளியாகவில்லை.