Published:Updated:

``அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது?”- காதல் மனைவி திரும்பாததால் விபரீத முடிவெடுத்த வாலிபர்!

காதல் மனைவியைத் தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் புதுமாப்பிள்ளை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை
தற்கொலை ( தே.சிலம்பரசன் )

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் தனுஷ்கோடி, வயது 19. இவருக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த ஃபென்னி என்ற பெண்ணுக்கும் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. அதையடுத்து கடந்த மாதம் நாமக்கல் சென்ற தனுஷ்கோடி பெண் வீட்டாரின் சம்மதத்துடன் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் ஃபென்னியைத் திருமணம் செய்துகொண்டார்.

தற்கொலை
தற்கொலை
தே.சிலம்பரசன்

ஒரு வாரம் அங்கு தங்கியிருந்த தனுஷ்கோடி தனது காதல் மனைவியுடன் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார். 2 வாரங்கள் அங்கு தங்கியிருந்த புதுமணத் தம்பதி, கடந்த வாரம் மீண்டும் நாமக்கல் சென்றிருக்கிறார்கள்.

மறுநாளே அங்கிருந்து திரும்பும்படி பயணத்திட்டத்தை அமைத்திருந்த நிலையில் அங்கு ஃபென்னிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்கேயே தங்கிவிட்ட தனுஷ்கோடி, ஒரு வாரம் கழித்து தனது காதல் மனைவியுடன் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார்.

வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை

ஆனால் ”ஃபென்னிக்கு உடல்நிலை சரியானதும் நாங்களே அழைத்துவருகிறோம். நீங்கள் ஊருக்குச் செல்லுங்கள்” என்று தனுஷ்கோடியிடம் கூறியிருக்கின்றனர் ஃபென்னியின் பெற்றோர்கள். தனது மனைவியும் அதையே கூறியதால் மனமில்லாமல் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவெடுத்தார் தனுஷ்கோடி.

நேற்று முன் தினம் சின்னசேலத்துக்குத் திரும்பிய தனுஷ்கோடி தனது தந்தை காளியப்பனை செல்போனில் தொடர்புகொண்டு, “அப்பா ஃபென்னி என்னுடன் வரவில்லை. அவர்கள் பெற்றோர்கள் என்னிடம் பேசிய விதத்தை வைத்துப் பார்க்கும்போது என்னையும் ஃபென்னியையும் அவர்கள் பிரித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அவள் மீது என் உயிரையும், நிறைய பாசத்தையும் வைத்துவிட்டேன்.

ரயில்
ரயில்
தே.சிலம்பரசன்

அதனால் அவள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். உங்களை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிறேன்” என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த காளியப்பன் தனது உறவினர்களுடன் சின்னசேலம், கச்சிராப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மகன் தனுஷ்கோடியைத் தேடியிருக்கிறார். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பினார்.

அப்போதுதான் சின்னசேலத்திலிருந்து அம்மையகரம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட்டுக்கு அருகில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்துகிடப்பதாக வந்த தகவலையடுத்து விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், காளியப்பனுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சடலம்
சடலம்
தே.சிலம்பரசன்

உறவினர்களுடன் அங்கு சென்ற காளியப்பன் அது தனது மகன்தான் என்று அடையாளம் காட்டியதோடு கதறி அழுதார். மனைவி வராத சோகத்தில் இருந்த தனுஷ்கோடி திருமணத்திற்குக் கட்டிய பட்டு வேட்டியுடன், சேலத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.