Published:Updated:

`தளர்த்தப்பட்ட விதிமுறை; நள்ளிரவில் அறுவடை' - கேரட் சுத்திகரிப்பில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கேரட் சுத்திகரிப்பு இயந்திரம்
கேரட் சுத்திகரிப்பு இயந்திரம்

நள்ளிரவில் கேரட் அறுவடையை முடித்து, இயந்திரத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஒருவர், இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டத்தில், மலைக் காய்கறி வகைகளில் கேரட் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட், மேட்டுப்பாளையம், சென்னை, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. அரசு சார்பில் முறையான கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக விவசாயிகள் பல ஆண்டுகளாக முறையிட்டுவருகின்றனர்.

கேரட் சுத்திகரிப்பு இயந்திரம்
கேரட் சுத்திகரிப்பு இயந்திரம்

தற்போது கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மற்ற பணிகள் முடங்கினாலும் விவசாயப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதை சாதகமாக்கிக்கொண்ட சில முதலாளிகளும், இடைத்தரகர்களும் இரவு பகல் பாராமல் நள்ளிரவிலும் அறுவடை செய்யுமாறு நிர்பந்திப்பதாக கூலித்தொழிலாளர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்
இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்

இந்த நிலையில், கேத்தி பாலாடா அருகில் உள்ள எதுமைக்கண்டி கிராமத்திலிருந்து கேரட் அறுவடைக்கு சில தொழிலாளர்கள் அதிகாலை 3 மணியளவில் ஊட்டி அருகில் உள்ள எப்பநாடு பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அறுவடையை முடித்துவிட்டு, பின்னர் கேரட்டை சுத்திகரிக்க கேத்தி பாலாடாவில் உள்ள கேரட் சுத்திகரிப்பு மையத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். பத்துக்கும் அதிகமானவர்கள் இயந்திரத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், இளம்பெண் ஒருவர் இயந்திரத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலாளர்கள் கண்முன்னே நடைபெற்ற இந்தத் துயரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த தொழிலாளி ஒருவர் பேசுகையில், ``வழக்கமான வேலைதான் என்றாலும் கடந்த சில நாள்களாக நேரம் குறித்த எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கரடி உட்பட எல்லா விலங்குகள்கிட்ட இருந்து தப்பி நள்ளிரவுல வேலைக்குப் போறோம். இந்தப் பொண்ணு‌ கொஞ்ச நாளாதான் வேலைக்கு வருது. கூடவே இருந்தோம், கண் இமைக்கிற நேரத்துல என்ன நடந்ததோ தெரியல மிஷினில் சிக்கி இறந்து போயிட்டாங்க. நெனச்சாலே குலைநடுங்குது" என்றார் கண்ணீருடன்.

விபத்தில் இறந்த பெண்
விபத்தில் இறந்த பெண்

இந்தச் சம்பவம் குறித்து கேத்தி காவல்துறையினர், " இறந்த பெண்ணின் பெயர் நந்தினி, 18 வயது இருக்கும். இந்தப் பகுதியில் பத்துக்கும் அதிகமான கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. இன்று காலை பணியில் ஈடுபட்டிந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

சிலரது லாபத்திற்காக தொழிலாளர்களிடம் இரவு பகலாக வேலை வாங்குவதாகவும், கேரட் சுத்திகரிப்பு இயந்திர மையங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர் தினக்கூலித் தொழிலாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு