Published:Updated:

`மதுபோதையில் சவால்; வேடிக்கை பார்த்த நண்பர்கள்!’- கர்நாடகாவில் நீரில் மூழ்கிய இளைஞர் #Video

நீரில் மூழ்கும் இளைஞர்
நீரில் மூழ்கும் இளைஞர்

கர்நாடகாவில் குட்டையில் மூழ்கிய தன் நண்பரைக் காப்பாற்றாமல், அவர் இறக்கும் வரை இருவர் வேடிக்கை பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுராகி (Kalaburagi) மாவட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட ஒரு வீடியோ மொத்த இணையத்தையும் ஆக்கிரமித்துள்ளது. ஒரு வித பதற்றத்தையும் கோபத்தையும் வரவழைக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது. வீடியோவில் தொடக்கத்தில் மூன்று நண்பர்கள் இணைந்து ஒரு குட்டையில் குளித்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு அருகில் சில பெண்கள் துணி துவைத்துக்கொண்டுள்ளனர். மூன்று நண்பர்களில் இருவர் கரையில் இருந்தபடியே தண்ணீரில் விளையாட ஒருவர் மட்டும் கரையில் நின்றபடி அங்கு நடக்கும் முழுச் சம்பவத்தையும் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஜாஃபர்
ஜாஃபர்

அதில் ஒருவர் கரையிலிருந்து தண்ணீரில் குதித்து சிறிது தூரம் செல்கிறார். பின்னர் கரைக்கு மிகவும் அருகில் வந்து தண்ணீரிலேயே நீச்சல் அடிக்க முயல்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. நீண்ட நேரம் நீச்சல் அடிக்க முயன்றும் முடியாமல் போக அந்த இளைஞர் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்.

நீரில் மூழ்கும் நண்பன் கைக்கு எட்டும் தூரத்திலிருந்தும் அவரைக் காப்பாற்றாமல் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் ஒரு நண்பர், மற்றொருவர் தன் நண்பர் மூழ்குவதை மிகவும் சாதாரணமாக வீடியோ எடுத்துக்கொண்டுள்ளார். இறுதியில் தண்ணீரில் மூழ்கியவர் நீண்ட நேரம் வெளியில் வராமல் போனபோதுதான் அந்த இருவருக்கும், அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இந்த மொத்தச் சம்பவங்கள் அடங்கிய வீடியோதான் வேகமாகப் பரவி வருகிறது.

நீரில் மூழ்கும் இளைஞர்
நீரில் மூழ்கும் இளைஞர்

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம், மிஜ்குரி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஜாஃபர். இவர் நேற்று தன் நண்பர்களுடன் ஒரு கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிப் பேசியுள்ள கர்நாடக மாநில போலீஸார், “ஜாஃபர் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்று கல்குவாரியில் மது அருந்திவிட்டுக் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிக மது போதையிலிருந்த ஜாஃபர் தண்ணீரில் இருந்ததால் களைத்துப்போயுள்ளார்.

`என் கணவர் தற்கொலைக்கு 12 பேர்தான் காரணம்!'- உறவினர்களால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய், மகன்

இந்நிலையில் நீச்சல் தெரியாத ஜாஃபரை அவரது நண்பர் நீந்தும் படியும் தண்ணீருக்குள் மூச்சு அடக்க வேண்டும் என்றும் சவால் விட்டதாகக் கூறப்படுகிறது. அதை முயற்சி செய்த ஜாஃபர் சிறிது நேரத்திலேயே சுய நினைவை இழந்து தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரது நண்பர் அருகிலிருந்தும் ஜாஃபரைக் காப்பாற்றாமல் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துள்ளார். மற்றொருவர் கவலையில்லாமல் வீடியோ எடுத்துள்ளார்.

ஜாஃபர் முழுவதும் மூழ்கி நீண்ட நேரம் வெளியில் வராமல் இருந்தபோதுதான் பயந்த அவர்கள், எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து வந்த நாங்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஜாஃபரின் உடலைக் கைப்பற்றினோம். பின்னர் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்து ஜாஃபரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு