Published:Updated:

600 கோழிகள்... மாதம் 1,00,000 ரூபாய்... நிறைவான வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு!

ஆடு மாடுகளைவிடக் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுப்பது நாட்டுக்கோழிகளே. அதனால், இன்றைக்குப் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

விவசாயத்தில் நஷ்டம் அடைவதைத் தவிர்க்க, பெரும்பாலும் வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுவது, `கால்நடை வளர்ப்புதான்'. அதிலும், ஆடு மாடுகளைவிடக் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுப்பது நாட்டுக்கோழிகளே. அதனால், இன்றைக்குப் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள். விவசாயிகள் மட்டுமல்லாமல், வேறு தொழிலில் இருப்பவர்களும் இதில் ஈடுபட்டு நிறைவான வருமானம் பார்க்கிறார்கள்

. சென்னை, திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த ஜெஷ்வின் வின்சென்ட், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். இன்றைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டுகிறார்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

``படிச்சு முடிச்சுட்டு நான் செய்யாத வேலையே இல்லை. சின்ன வயசிலிருந்தே பார்ட் டைமாக கம்பெனி வேலை, ஹெச்.சி.எல் வேலை, இங்கிலாந்துல படிக்கும்போது சமையல் வேலை எனப் பல வேலைகள் பார்த்திருக்கேன். அப்புறம் நண்பர்களோடு சென்னையில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். வீட்டுல அம்மா மாடித்தோட்டம் வெச்சிருந்தாங்க. அவங்களுக்கு உதவியா போவேன். அங்கிருந்து ஐந்து பெட்டைக்கோழி, ஒரு சேவல் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். அதுக நல்லா வளர்ந்துச்சு. ஒருகட்டத்துல பண்ணையா வைக்க முடிவுசெஞ்சேன். அப்பாவின் ஒத்துழைப்போடு இந்தப் பண்ணையை ஆரம்பிச்சேன்'' என்று முன்கதையுடன் தொடர்கிறார்.

``இது 57 சென்ட் நிலம். இந்தப் பண்ணையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல பண்ணகளை நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்தேன். சிறுவிடை கோழிகள்தான், தமிழ்நாட்டின் பூர்விக நாட்டுக்கோழிகள்னு தெரிஞ்சுக்கிட்டு, அதையே வளர்க்க முடிவுசெஞ்சேன். ஆனா, வியாபாரரீதியா இதைச் செய்ய முடியாதுனு பலரும் சொன்னாங்க. அந்தச் சவாலைச் செஞ்சுப் பார்க்கலாம்னு முடிவுபண்ணினேன். ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். குஞ்சுகளா வாங்குவேன். கொஞ்சம் பெருசான பிறகுதான் அது சிறுவிடை இல்லைன்னு தெரியும். இதுமாதிரி பலமுறை ஏமாந்திருக்கேன். இதிலேயே ரெண்டு வருசம் வீணாகிடுச்சு. கஷ்டப்பட்டு இப்போதான் 100 சிறுவிடை தாய் கோழிகளைச் சேர்த்திருக்கேன்'' என்கிறார் ஜெஷ்வின் வின்சென்ட்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

கோழிகள் பராமரிப்பு பற்றிச் சொல்லும்போது, ``20 அடி நீளம், 15 அடி அகலத்துல கோழிகளுக்கு கூலிங் ஷீட்ல கொட்டகை அமைச்சிருக்கேன். 3 ஷெட் இருக்கு. ஒவ்வொரு ஷெட்லேயும் ரகம் பிரிச்சு தனித்தனியா வளர்க்கிறேன். நானே சொந்தமா இங்குபெட்டர் தயாரிச்சு வெச்சிருக்கேன். கோழி முட்டை வெச்சதும் அதைச் சேகரிச்சு, இன்குபேட்டர் மூலமாகப் பொரிக்க வைக்கிறேன். குஞ்சு பொரிச்சு ஈரம் காயுற வரை இன்குபேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அப்பறம், அதைப் புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டை பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா தகரத்தை சுத்திவெச்சு வெப்பத்துக்காக விளக்குகளை எரியவிடணும். இதுக்கு பெயர் புரூடர்.

15 நாளான கோழிக்குஞ்சுகளுக்கு சுமார் 5 முதல் 8 கிராம் வரையான தீவனம் கொடுக்கலாம். இருபதாம் நாளுல குஞ்சுகளைப் பண்ணைக்கு மாத்திடணும். முப்பது நாளான கோழிக்குஞ்சுகளுக்கு 10 முதல் 15 கிராம் வரை தீவனம் கொடுக்கலாம். பண்ணையின் நாலு பக்கமும் காற்றோட்டத்தோடு இருக்கணும். பண்ணையில இருக்க கூண்டுல கீழ்ப்புறமா நிலக்கடலைத் தோலை ரெண்டு இன்ச் அளவுக்குத் தூவிவிடலாம். இந்தக் கூண்டுல மொத்தம் 60 நாள்கள் கோழியை வளர்க்கணும். அப்புறமா சேவல்களையும் கோழிகளையும் தனியா பிரிச்சுவித்துடலாம்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

கோழிகளுக்குத் தேவையான தீவனத்தைப் பண்ணையிலயே உற்பத்தி செஞ்சுக்குறேன். நேப்பியர், வேலி மசால், முருங்கைக் கீரை, அகத்திகீரைனு பயிர்கள் இருக்கு. அதைத்தான் கோழிகளுக்குத் தீவனமா கொடுத்துட்டு வரேன். நாலு நாளுக்கு ஒருமுறை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து காய்கறிக் கழிவுகளை வாங்கிவந்து கொடுக்கிறேன். பக்கத்துல குன்றத்தூர் சந்தையிலிருந்து மீன் கழிவுகளை எடுத்துவந்து போடுவேன். இதனால செலவும் குறையுது'' என்கிற வின்சென்ட், விற்பனை பற்றிய தகவல்களையும் பகிர்ந்தார்.

``இப்போ பண்ணையில 300 கடக்நாத் கோழிகள், 300 சிறுவிடைக் கோழிகள்னு 600 கோழிகள் இருக்கு. இதுல முட்டை, குஞ்சுகள், கறிக்காகனு மூணு வகையான விற்பனை இருக்கு. கடக்நாத் 1 கிலோ 400 ரூபாய், சிறுவிடை 1 கிலோ 350 ரூபாய்னு விற்பனை செய்றேன். வாரம் 15 கிலோ கடக்நாத் கோழிகளும், 35 கிலோ சிறுவிடைக் கோழிகளையும் விற்பனை செய்யறேன். கடக்நாத் கோழிகள் மூலம் 6,000 ரூபாய், சிறுவிடை மூலம் 12,250 ரூபாய்ன்னு வாரத்துக்கு 18,250 ரூபாய் வருமானம் கிடைக்கும். வாரத்துக்கு 250 முட்டைகள் விற்பனை செய்றேன். ஒரு முட்டை 20 ரூபாய்க்கு என 5,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். கோழிக்குஞ்சுகளையும் விற்பனை செய்யறேன். ஒரு குஞ்சு 55 ரூபாய்னு வாரத்துக்கு 32 குஞ்சுகள் விற்பனையாகும். இதில் 1,760 ரூபாய் கிடைக்குது. இப்படி எல்லாம் சேர்த்து வாரத்துக்கு 25,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். மாசத்துக்கு ஒரு லட்சம். இதுல மின்சாரம், ஆள் கூலி, போக்குவரத்து என மாசம் 20,000 ரூபாய் செலவாகிடும். லாபமாக 80,000 ரூபாய் கிடைக்கும். ஆனா, இந்த வருமான கிடைக்க ரெண்டு வருஷம் காத்திருக்கணும். பண்ணை வெச்சதுமே லாபம் பார்த்துற முடியாது" என்று நிறைவாகப் புன்னகைக்கிறார் வின்சென்ட்.

இருபது ரூபாயில் இயற்கை விவசாயம்… அசத்தும் வேஸ்ட் டீகம்போஸர்!