Published:Updated:

ஊரையே சோகத்தில் ஆழ்த்திய ஆலமரத்தின் `மரணம்'... அஞ்சலி செலுத்திய மக்கள்!

ஆலமரத்தோடு ஊர்மக்கள்
ஆலமரத்தோடு ஊர்மக்கள்

இந்த ஊர் மக்கள் மட்டுமல்ல, இந்தக் கிராமத்து வழியாகப் போகக்கூடிய எல்லாருமே இதை ஒரு நேசத்தோடுதான் பார்த்துக்கிட்டுப் போவோம்.

ஒரு மரத்தின் மரணம், ஊர் மக்களை இந்தளவுக்குத் துயரத்தில் ஆழ்த்துமா? ஆல மரத்துக்கும் ஊர் மக்களுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு பந்தம் இழையோடிக்கொண்டே இருக்கும். ஆனால், அம்மரம் உயிரோடு இருக்கும்போது அதை யாரும் வாத்தைகளாக வெளிப்படுத்துவதில்லை. மனிதனைப் போலவே அது மரணித்த பிறகுதான் அதன் மகத்துவங்களைச் சொல்லி மக்கள் புலம்பித் தீர்ப்பார்கள். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்த ஆலமரம், பலத்த காற்றில் கீழே சாய்ந்தது. இதனால் ஊரே சோகத்தில் மூழ்கியது. பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்த இம்மரத்தின் வயது குறித்து துல்லியமான தகவல் இல்லை. இதை ஆயிரங்காலத்து மரம் எனப் பெயர் சூட்டி அன்போடு அடையாளப்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கவிதை வரிகளாகப் பதிவு செய்துள்ளார், மன்னார்குடியைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கபாபு. மனசொடிந்து இவர் எழுதிய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் நம் நெஞ்சை கனமாக்குகிறது.

கீழே சாய்ந்த ஆலமரம்
கீழே சாய்ந்த ஆலமரம்

``நேத்தடிச்ச

பேய்க் காத்துல

ஆயிரங்காலத்து

ஆலமரமொன்னு

அடியோட

சாஞ்சதுங்க!

கிராமத்து

சனங்க

கண்ணுல

கண்ணுத்

தண்ணி வந்து

பாய்ஞ்சதுங்க!

@

மேல நத்தம்

கிராம சனங்க

மொத்தமும்,

சாஞ்சி கிடக்கும்

ஆலமரத்துக்கு

முத்தங்கள

வைக்குது...

கதறியழும்

சத்தங்கள

ஊரின்

காதுக்குள்ள

தைக்குது!

@

வெயிலே

பார்க்காத

ஆல மரத் தரை

ஒப்பாரி வைக்கிது

ஊருக்குள்ள!

பெரிய

வீடொண்ணும்

உணவுக்

கிடங்ண்ணும்

போச்சுதேன்னு

குருவிங்க கதறுது

மாருக்குள்ளே!

@

எத்தன கூட்டம்

நடந்திருக்கும்...

எவ்வளவு சனங்க

படுத்திருக்கும்...

ஆயிரங் குருவிக

அமர்ந்திருக்கும்...

கதவில்லா வீடாட்டம்

படர்ந்திருக்கும்...

@

மாஞ்சி... மாஞ்சி

நெழலு தந்தது

நூறு யானையாட்டம்

சாஞ்சி இப்ப

கெடக்குது!

அதைத்

தூக்கி நிறுத்த

பஞ்சாயத்துக் கூட்டம்

ஆல மரத்து

நெழலு இன்றி

மொத முறையா

நடக்குது!

@

யாராரோ

வந்தாங்க...

எப்படியெல்லாமோ

பார்த்தாங்க...

கொஞ்ச நஞ்ச

வருசமில்ல

ஆயிரங்காலத்து

மரமிதுங்க...

புயலு மழை

காத்துகளுன்னு

கண்ணுக் கொட்டாம

பாத்ததுங்க...

அடி தூரு

மடிச்சதுங்க...

அதனால

ஆலமரம்

மரிச்சதுங்க...

நிமிர்த்து வைக்க

முடியாதுன்னு

சொன்னாங்க...

எங்க நம்பிக்கையை

அடியோட

கொன்னாங்க!

@

அய்யய்யோ இப்படி

ஆயிறிச்சே!

எங்க ஊரு

அடையாளமொன்னு

போயிருச்சே!

அது

ஆலமரம்

இல்லீங்க...

எங்க ஊரில்

ஒரு ஆளா நின்ன

குல தெய்வ

சாமீங்க!

தங்கபாபு
தங்கபாபு

இந்த நினைவஞ்சலியை எழுதிய தலைமை ஆசிரியர் தங்கபாபுவிடம் நாம் பேசியபோது, ``இதை ஆயிரங்காலத்து ஆலமரம்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க. மேலநத்தம் ஊருக்கே இந்த மரம் ஒரு அழகிய அடையாளமா இருந்துச்சு. இந்த ஊர் மக்கள் மட்டுமல்ல, இந்தக் கிராமத்து வழியாகப் போகக்கூடிய எல்லாருமே இதை ஒரு நேசத்தோடுதான் பார்த்துக்கிட்டுப் போவோம். கஜா புயல் நேரத்துலகூட, தாக்குப்புடிச்சி நின்னுச்சு. இப்ப சாஞ்சிடுச்சேனு ஊர் மக்கள் மனசு உடைஞ்சி புலம்புனாங்க. இந்த மரத்தைப் பத்தி பலரும் பலவிதமான நினைவுகளைப் பகிர்ந்துக்கிட்டாங்க. எனக்கும் மனசு ரொம்ப பாதிச்சிடுச்சி. ஊர் மக்களின் உணர்வுகளைத்தான் கவிதையாகப் பதிவு செஞ்சேன். இது என் அடி மனசுல இருந்து எழுதின கவிதை’’ என்ற தங்கபாபுவின் வார்த்தைகளில் வலி நிறைந்திருந்நது.

அடுத்த கட்டுரைக்கு