Published:Updated:

கால்நடை: மாதம் 1,00,000 ரூபாய்! பட்டையைக் கிளப்பும் பால், முட்டை, கோழி!

நாட்டுக்கோழிகளுடன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுக்கோழிகளுடன்

ராமநாதபுரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துல பயிற்சி எடுத்துகிட்டேன்.

மீப காலமாகக் கால்நடை வளர்ப்பு அதிகமாகி வருகிறது. குறிப்பாக நாட்டுக்கோழி வளர்ப்பைப் பலரும் முன்னெடுத்து வருகிறார்கள்.

ஊரடங்கு காரணமாக, ஆட்டு இறைச்சியின் விலை கிலோ 1,000 ரூபாய் தாண்டிய நிலையில், நாட்டுக்கோழி இறைச்சியை நோக்கி மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நஷ்டம் ஏற்படுத்தாத தொழிலான நாட்டுக்கோழி வளர்ப்பைக் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி.

ஒரு காலைவேளையில் கருங்கோழிகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். “எனக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் பக்கத்துல கொழுவூர் கிராமம். சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல கோழி, மாடு எல்லாமே இருந்துச்சு. பிறகு, அந்த ஊர்லயே கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு பால் பண்ணை வெச்சிருந்தேன். மகளிர் குழுக்கள் மூலமா பண்ணையில பால் எடுத்துச் சொசைட்டில ஊத்தினேன். அதுல ஓரளவு வருமானம் வந்துகிட்டு இருந்துச்சு. எங்களுக்கு மூணு பசங்க. அவங்க படிப்புக்காகக் கிராமத்துல இருந்து, பரமக்குடி டவுனுக்கு வந்துட்டோம். என் வீட்டுக்காரரு தச்சு ஆசாரி. டவுனுக்கு வந்தபிறகு அவரோட சம்பாத்தியம் மட்டும் வெச்சு சமாளிக்க முடியலை. கால்நடை வளர்க்கலாம்னு முடிவு செஞ்சு, ஊருக்கு வெளியில கொஞ்சம் நிலத்தை வாங்கி, அங்கயே வீடு கட்டி குடிவந்துட்டோம். இங்கே வந்தபிறகு கறவை மாடு வளர்க்க ஆரம்பிச்சேன். பிறகு நாட்டுக்கோழிகளைக் கொஞ்சம் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். சில நாள்கள்ல நிறைய கோழிகள் உருவாகிடுச்சு. பக்கத்துல டவுன் இருக்கிறதால முட்டை, கறி வேணும்னு மக்கள் தேடி வர ஆரம்பிச்சுட்டாங்க. மார்க்கெட்டிங் பிரச்னை இல்லைன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பிறகு இதுல முழுசா இறங்க ஆரம்பிச்சேன்

. ராமநாதபுரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகப் பெண்கள் கூட்டமைப்புனு ஓர் அமைப்பு இருக்குது. அதுல இருந்து நிறைய பயிற்சி கொடுத்தாங்க. இப்ப நான் அந்த அமைப்புல மாநில தலைவியா இருக்குறேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிராய்லர் கோழி, பால் பாக்கெட் மூலமாதான் நிறைய நோய் வருது. அதைத் தடுக்கணும்னுதான் பால், நாட்டுக்கோழி வளர்ப்புல இறங்குனேன்’’ என முன்னுரை கொடுத்தவர் தனது விவசாயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

கருங்கோழிகளுடன் ராமலட்சுமி
கருங்கோழிகளுடன் ராமலட்சுமி

“எங்களுக்கு 12 ஏக்கர் நிலமிருக்கு. மழையை நம்பி இருக்க மானாவாரி பூமி. ஆடி 18-க்குப் பிறகுதான் விதைப்போம். தை மாசம் அறுவடை முடிச்சுட்டு, வயலைக் காய விட்டுடுவோம். மாசி, பங்குனியில உழவு ஓட்டி விடுவோம். மறுபடியும் ஆடிப் பட்டத்துல விதைப்போம். எங்க பக்கத்துல மானாவாரியில நெல் விதைப்பாங்க. நாங்க 3 ஏக்கர்ல நெல் விதைப்போம். கர்நாடக பொன்னி, கோ-51 ரகங்களைத்தான் விதைப்போம். தை மாசம் அறுப்போம். நெல் வயல்ல அறுவடைக்குப் பிறகு எள் விதைச்சிடுவோம். குண்டு மிளகாயை மட்டும் புரட்டாசி மாசம் விதைப்போம். வருஷம் 2 ஏக்கர்ல மிளகாய், 2 ஏக்கர்ல பூசணி, 2 ஏக்கர்ல சோளம், 2 ஏக்கர்ல குதிரைவாலி விதைப்போம். நெல்லை வீட்டுத்தேவைக்கு வெச்சிக்குவோம். சிறுதானியங்களைச் சாப்பாட்டுக்கும், கோழித் தீவனத்துக்கும் வெச்சிக்குவோம். வைக்கோல், தட்டை எல்லாம் மாடுகளுக்குத் தீவனமாகிடும்’’ என்றவர் பண்ணையில் இருக்கும் கால்நடைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இப்ப கருங்கோழி வேணும்னு தேடி வர்றவங்க தான் அதிகம்.

“இப்ப எங்ககிட்ட 400 கருங்கோழிகள், 100 சிறுவிடைக்கோழிகள், 50 பெருவிடைக் கோழிகள், 70 புறாக்கள், 7 ஜோடி கூஸ் வாத்துகள் இருக்கு. ஒரு ஜோடி கூஸ் வாத்து 6,000 ரூபாய். முட்டை 150 ரூபாய். பெரும்பாலும் முட்டைகளை விற்கமாட்டோம். அதை வெச்சு குஞ்சுகள் எடுத்துடுவோம். பக்கத்துல நண்பர் தோட்டம் இருக்குது. அங்க தொட்டி கட்டி வாத்துகள வளர்க்குறோம். வீட்டுத் தேவைக்காக 10 வெள்ளாடுகள் வெச்சிருக்கோம். 4 பால் மாடுகள் இருக்குது. இப்ப கிர், தார்பார்க்கர் ரகத்துல 3 நாட்டு மாடுகளை வாங்கியிருக்கோம். நான் சிறுவிடைக்கோழிகளைத்தான் முதல்ல வளர்க்க ஆரம்பிச்சேன். அது மூலமா கோழிக பெருகிச்சு. அப்பத்தான் கடக்நாத் கோழிகளைப் பத்தி எல்லோரும் பேச ஆரம்பிச்சாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்தியப் பிரதேசத்துல அந்த கோழிக்குப் புவிசார் குறியீடு கொடுத்திருக்காங்க. அதோட கறி, ரத்தம், முட்டை எல்லாம் கறுப்பா இருக்கும்னு சொன்னாங்க. அப்படி என்ன அந்தக் கோழியில விசேஷம்னு ஆர்வமாகிடுச்சு. அப்ப நாமக்கல்ல போய் 4 கோழிகள வாங்கிட்டு வந்தேன். ராமநாதபுரம் தட்பவெப்பநிலைக்குத் தாக்குபிடிச்சு வளர்ந்துச்சு. பிறகு படிப்படியா எண்ணிக்கையை அதிகமாக்கினேன். ஒரு கட்டத்துல எங்க நட்பு வட்டாரத்துல கருங்கோழிக் கறி, முட்டை வாங்கிச் சாப்பிட்டு பார்த்தவுக திரும்பத் திரும்பக் கேக்க ஆரம்பிச்சாக. இப்ப கடக்நாத் முட்டை அதிகமா விற்பனையாகுது. நாட்டுக்கோழியைவிடக் கருங்கோழி வேணும்னு தேடி வர்றவங்கதான் அதிகம்.

கால்நடை: மாதம் 1,00,000 ரூபாய்! பட்டையைக் கிளப்பும் பால், முட்டை, கோழி!

கருங்கோழிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்

சாதாரணமா நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல், சளி மாதிரியான நோய்கள் வரும். ஆனா, கடக்நாத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்குறதால, பெரும்பாலும் நோய்கள் தாக்குறதில்லை. கடக்நாத் அடைக்கு உக்காரும். வருஷத்துக்கு 200 முட்டைகள் இடும். சென்னையில ஒரு ஹோட்டல்ல இருந்து மாசாமாசம் கிலோ 600 ரூபாய் விலையில கறி அனுப்பிகிட்டு இருக்கோம். இதை வளர்க்குறது ரொம்பச் சுலபம். அதனாலதான் நான் பெண்கள்கிட்ட கடக்நாத் வளர்க்கச் சொல்லிட்டு இருக்கேன். இப்ப ராமநாதபுரத்துல பல பகுதியில கடக்நாத் கிடைக்குற அளவுக்கு நிலைமை உருவாகிடுச்சு. 50 கடக்நாத் கோழிகளை வெச்சு, சரியா பராமரிச்சா போதும். முட்டை விற்பனை மூலமா மட்டும் மாசம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம். கோழிகளை விற்க முடியலைன்னு நினைக்குறவங்க எங்ககிட்ட கொடுத்தா நாங்க வாங்கிக்கத் தயாரா இருக்கோம்’’ என்றவர் வருமானம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

பால், முட்டை தினமும் வருமானம்

“பால், முட்டை தினமும் விற்பனையாகும். ரெண்டு வேளையும் சேர்த்து தினமும் 40 லிட்டர் பால் விற்பனையாகும். லிட்டர் 45 ரூபாய். வீட்டுக்கே வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. அது மூலமா 1,800 ரூபாய் கிடைக்கும். கருங்கோழி முட்டை 25 ரூபாய், வாத்து முட்டை 25 ரூபாய், நாட்டுக்கோழி முட்டை 15 ரூபாய்க்கு கொடுக்குறோம். தினமும் 150-200 முட்டைகள்வரை விற்பனையாகும். குறைந்தபட்சம் 100 முட்டைகள்னு வெச்சுகிட்டாலும் 1,500 ரூபாய் கிடைக்கும். பால், முட்டை மூலமா சராசரியா தினமும் 3,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும்.

நாட்டுக்கோழிகளுடன்
நாட்டுக்கோழிகளுடன்

கடக்நாத் கோழி உயிர் எடை ஒரு கிலோ 800 ரூபாய். கறி ஒரு கிலோ 1,000 ரூபாய். நாட்டுக்கோழி உயிர் எடை கிலோ 500 ரூபாய். கறி ஒரு கிலோ 600 ரூபாய். கடக்நாத் ஒருநாள் குஞ்சு 70 ரூபாய். கோழியா கொடுத்தா 800 ரூபாய், சேவல் 1,000 ரூபாய் விலையில கொடுக்குறோம்.

சிறுவிடைக் கோழிக்கு நல்ல தேவை இருக்கும். முட்டை 12 முதல் 15 ரூபாய் வரைக்கும் போகும். ஒருநாள் குஞ்சு 60 ரூபாய், ஒரு மாதக் குஞ்சு 160 ரூபாய், 3 மாத குஞ்சு 250 ரூபாய், ஒரு கிலோ உயிர் எடை 450 ரூபாய் விலையில விற்பனை செய்றோம். சிறுவிடை 1 முதல் ஒன்னேகால் கிலோதான் எடை வரும்.

கால்நடை: மாதம் 1,00,000 ரூபாய்! பட்டையைக் கிளப்பும் பால், முட்டை, கோழி!

மாதம் ரூ.50,000 லாபம்

வாத்து முட்டை 25 ரூபாய். பங்களா வாத்து ஒரு ஜோடி 6,000 ரூபாய். அதோட முட்டை 150 ரூபாய். முட்டையைப் பெரும்பாலும் விக்கமாட்டோம். குஞ்சு பொறிக்க வெச்சு, ஒரு மாசம் வளர்த்து ஜோடி 500 ரூபாய்க்கு விற்பனை செய்வோம். வாத்து ஒரு மாத குஞ்சு ஒரு ஜோடி 250 ரூபாய். மணி வாத்துப் பெருசு ஒரு ஜோடி 1,500 ரூபாய் விலையில கொடுக்குறோம். ஆக மொத்தம் கோழிக்கறி, குஞ்சு, வாத்து விற்பனை மூலமா மாசம் 20,000 ரூபாய். பால், முட்டை மூலமா சராசரியா 80,000 ரூபாய். ஆக 1,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனம், மருந்து, மத்த செலவுனு மாசம் 50,000 ரூபாய் போயிடும். 50,000 ரூபாய் மாசம் நிகர லாபமாகக் கையில் நிக்கும். அதுபோக, பூசணி மூலம் வருஷத்துக்கு ரூ.40,000. மிளகாய் மூலம் ரூ.50,000 கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அரிசி, கோழி, மாட்டுத் தீவனங்கள் எல்லாமே போனஸ்’’ என்றவர் நிறைவாக,“கோழிப்பண்ணை நல்ல லாபகரமான தொழில். என் பசங்க சாப்ட்வேர் இன்ஜினீயர், பிசியோதெரபிஸ்ட், சிவில் இன்ஜினீயர் வேலையில இருக்காங்க. விவசாயத்துல ரொம்ப ஆர்வமா இருக்காங்க. சாப்ட்வேர் இன்ஜினீயர் கோயம்புத்தூர்ல நாய் பண்ணை வெச்சிருக்கார். கோழிகளை வளர்த்து விற்பனை செய்ய முடியாதவங்ககிட்ட நாங்க வாங்கிக்கிறோம். எங்களுக்குச் சமூக வலைதளம் மூலமா நிறைய வாடிக்கையாளர்கள் கிடைக்குறாங்க. அம்மா, மருமக, மகன்கள் எல்லோரும் பார்த்துக்குறோம். அதனால கோழி வளர்ப்பு ஒரு தற்சார்பு வாழ்க்கைதான்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ராமலட்சுமி,

செல்போன்: 74020 12019

சனிக்கிழமை தடுப்பூசி இலவசம்

“கோழிகளைத் தாக்குற நோய்கள்ல முக்கியமானது வெள்ளைக்க கழிச்சல். இதுக்குத் தடுப்பூசி இருக்கு. 3 மாசத்துக்கு ஒரு தடவை அதைக் கோழிகளுக்குப் போட்டே ஆகணும். அரசுக் கால்நடை மருத்துவமனைகள்ல வாரந்தோறும் சனிக்கிழமை அன்னிக்கு போடுவாங்க. அங்க போய்ப் போட்டுக்கலாம். புறக்கடையில வளர்ற கோழிகளுக்குத் தடுப்பூசி தேவையில்லை.” என்கிறார் ராமலட்சுமி.

சிறப்பான வருமானம் கொடுக்கும் சிறுவிடை!

“பண்டைய காலத்துல சிறுவிடைக் கோழி மட்டும்தான் புழக்கத்துல இருந்துச்சு. கறி, முட்டை எல்லாத்துக்கும் சிறுவிடைதான். நாளடைவிலதான் பல ரகக் கோழிகள் உருவாகிடுச்சு. பெருவிடை 10 முட்டைகள்தான் வைக்கும். ஆனா, சிறுவிடை 15 முதல் 22 முட்டைகள் வரைக்கும் வைக்கும். சில நேரங்கள்ல புறக்கடையில வளக்குற சிறுவிடைக் கோழிகள் 30 முட்டைகள் வரைக்கும் வைக்கும். அடைகாக்கும் திறன் நல்லா இருக்கும். குஞ்சுகளைப் பத்திரமா பாதுகாத்து வளர்க்கும். பருந்தைக்கூட அடிச்சு விரட்டும். தாய்மை உணர்வு அதிகம். அதுக்கு இடவசதி அதிகமா தேவையில்லை. பெரும்பாலும் கோழிகள் கீழே நிற்க விரும்பாது. சின்னக் குச்சி, மேல இருக்கக் கம்பு, மரத்து மேலதான் நிற்க விரும்பும். பெண் குழந்தைகள், பெரிய பொண்ணானதும் சிறுவிடைக் கோழி முட்டைதான் கொடுப்பாங்க. அது மருத்துவக் குணம் உள்ளது. சிறுவிடை கோழிக்கு எப்பவும் நல்ல தேவை இருக்கும்.

சிறுவிடையைப் புறக்கடையில வளர்க்கும்போது தீவனச் செலவு இருக்காது. காலையில திறந்துவிட்டா, மேய்ச்சலுக்குப் போகும். புல்லு, புழு, கறையான்னு தேவையானதைக் கொத்தித் திங்கும். குப்பைகளைக் கிளறி சாப்பிடும். இப்படிப் பலதையும் திங்குறதால அதுக்குத் தேவையான சத்துகள் கிடைச்சிடும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமா கிடைக்கும். பண்ணை முறையில வளர்க்கும் கோழிகளுக்குத் தடுப்பூசிகள் போடணும். தீவனம், தண்ணீர் முறையா கொடுக்கணும். கழிவுகளைத் தினமும் சுத்தம் செய்யணும். பெரும்பாலும் பண்ணை முறையில வளக்குறவங்க நஷ்டமடையக் காரணம், முறையான பராமரிப்பு இல்லாததுதான். இதுக்கு அதிக இடவசதி தேவையில்லை. ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி இடமிருந்தாப் போதும்” என்கிறார் ராமலட்சுமி.

கோழியைவிட வாத்து வளர்க்கிறது சுலபம்!

வாத்து வளர்ப்பு பற்றிப் பேசும் ராமலட்சுமி, “வாத்து வளர்ப்புல நல்ல லாபம் இருக்குது. நாட்டுக்கோழிகளோட ஒப்பிடும்போது வாத்து வளர்க்குறது ரொம்பச் சுலபம். அதுக்கு 2 சென்ட் இடமும், கொஞ்சம் தண்ணீரும் இருந்தாக்கூடப் போதும். தனியா தீவனத்துக்குச் செலவு செய்ய வேண்டியதில்லை. பழைய சோறு போட்டாலும் சாப்பிட்டுக்கும். எந்த மருந்தும் தேவையில்லை. நாங்க நாட்டு வாத்து, மணி வாத்து, கூஸ் வாத்துனு பல ரகங்கள் வளர்க்குறோம். வாத்துக்கறி குளிர்ச்சினு ரொம்ப பேர் கேக்குறாங்க. நாட்டுக்கோழியைவிட வாத்து கறிக்கு டிமாண்ட் இருக்குது. எங்களால கேக்குறவங்களுக்கு வளர்த்துக் கொடுக்க முடியலை. மழை நேரத்துல முட்டையிடும் திறன் அதிகம். கோழியில கூடக் கூமுட்டை இருக்கும். வாத்து முட்டையில எல்லா முட்டையும் பொறிக்கும். இதுல புரோட்டீன் அதிகம் இருக்குறதால, வயசானவங்க சாப்பிடக்கூடாதுன்னு சொல்றங்க. குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்குறாங்க’’ என்றார்.

குஞ்சுகள் இறப்பைத் தவிர்க்க!

குஞ்சுகள் இறப்பு, கோழி வளர்ப்பில் தவிர்க்க முடியாதது. அதைத் தடுக்கச் சில வழிமுறைகளைச் சொல்கிறார் ராமலட்சுமி. “தரமான முட்டை 20 நாள்லயே பொறிச்சுடும். சில முட்டை 21 நாள்கள்ல பொறிக்கும். பொறிச்ச குஞ்சுகளை இறக்கி விட்டவுடனே அந்தக் குஞ்சுகளுக்குக் கருப்பட்டி, மஞ்சள்தூள் கலந்த தண்ணீர் வைக்கணும். அந்தத் தண்ணியை 3 மணி நேரத்துக்கு ஒரு தடவை மாத்திடணும். இதை முதல் 3 நாள்கள் கொடுக்கணும். குளுக்கோஸ் கலந்த தண்ணியும் கொடுக்கலாம். தண்ணியைச் சூடுபண்ணி ஆறவெச்சுதான் வைக்கணும். அந்த 3 நாள்கள் தண்ணீர் முறையா கொடுத்தாலே குஞ்சுகள் இழப்பைத் தவிர்க்கலாம். அதுக்கு பிறகு, பச்சை அரிசி குருணை, உடைச்ச பொட்டுக்கடலை, கம்பங்கூழ் கொடுக்கலாம்.

நாட்டுக்கோழி வளர்ப்பு லாபகரமான தொழில்!

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் குமரவேலிடம் பேசினோம். “நாட்டுக்கோழி வளர்ப்பு லாபகரமான தொழில்தான். குறிப்பிட்ட ரக கோழிகளைத் தேர்வு செய்து வளர்க்க வேண்டும். கடக்நாத் கோழிகளின் சந்தை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு வளர்ப்பது நல்லது. முதலில் குறைந்த அளவிலான கோழிகளை வளர்த்து அனுபவம் பெற்ற பிறகு, படிப்படியாக அதிகரிக்கலாம். முட்டைக்காக கிராமப்பிரியா எனும் ரகத்தை வளர்க்கலாம். கறிக்காக தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான மேம்படுத்தப்பட்ட அசில் ரக கோழிகளை வளர்க்கலாம். மொத்தத்தில் கோழி வளர்ப்பில் சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, முறையான பராமரிப்புகளை மேற்கொண்டால் நல்ல லாபம் ஈட்டலாம்” என்றார்.

நோயிலிருந்து காப்பாற்றும் பப்பாளி இலை!

“நோய் முற்றி காப்பத்தவே முடியாத நிலையில இருந்த கோழிகளைக்கூட நாட்டு மருந்துல காப்பாத்தி இருக்கோம். பப்பாளி இலை, 2 வெற்றிலை, கொஞ்சம் சீரகம், மிளகு, மஞ்சள் எல்லாத்தையும் அரைச்சு, அதை ஒரு நெல்லிக்காய் அளவு கோழிக்குக் கொடுக்கணும். அந்தக் கோழியைத் தனிமைப்படுத்தணும். சாயந்தரம் கொடுத்தா ராத்திரி முழுக்கத் தண்ணிக் கொடுக்கக் கூடாது. காலை வேளையில கொடுத்தா 3 மணி நேரம் தண்ணிக் கொடுக்கக் கூடாது. மருந்தை 3 நாள் தொடர்ச்சியாக் கொடுத்தா எவ்வளவு பெரிய நோயா இருந்தாலும், அந்தத் தாக்கத்திலிருந்து காப்பாத்திடலாம். என் அனுபவத்துல, பப்பாளி இலையை அரைச்சு, அதை மிளகு அளவு 7 உருண்டை உருட்டி, கோழி வாயில போட்டு, ஒருமணி நேரம் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்றதுனால கழிச்சல் நோய் மட்டுப்படும். நோய் முத்துறதுக்கு முன்னாடி இதைக் கொடுக்கணும்’’ என்கிறார் ராமலட்சுமி.