Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்திலே சுவையான தண்ணீர்... தாரளமாய் தந்து உதவும் கூடலூர் மக்கள்!

தேனி மாவட்டம் கூடலூரைக் கடந்து குமுளி மலைப்பாதைக்கு முன்பு, சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. அரசுப் பேருந்து முதல் பள்ளி வாகனங்கள் வரை வரிசையாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த நாம் அங்கே சென்றோம். சாலையோர குழாய் ஒன்றில் எல்லோரும் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர். அரசுப்பேருந்து கண்டக்டர் முதல், ஆட்டோ டிரைவர் வரை எல்லோரும் கையிலும் காலி வாட்டர் பாட்டில்.”குழாயில் தண்ணீர் பிடிக்கவா இவ்வளவு கூட்டம்?” என்ற சந்தேகத்தோடு அங்கிருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்.

கையில் நான்கு வாட்டர் பாட்டிலுடன் நின்றுகொண்டிருந்த அரசு பஸ் கண்டக்டர் ஒருவரிடம் பேசினோம். “நான் தேனி -  குமுளி பேருந்தில் கடந்த இரண்டு வருடமாக கண்டக்டராக இருக்கிறேன். பேருந்து, கூடலூரை தாண்டியதும் காலி வாட்டர் பாட்டிலை தயாராக எடுத்துவைத்துவிடுவோம். சில நிமிடங்கள் பேருந்தை இங்கே நிறுத்தி பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு தான் குமுளி மலைப் பாதைக்குள் நுழைவோம். நான் பல ஊர்களில் வேலை பார்த்திருக்கிறேன். இப்படி ஒரு சுவையான தண்ணீரை நான் எங்கும் குடித்ததில்லை. நாங்கள் தண்ணீர் பிடிப்பதைப் பார்த்து பேருந்தில் இருக்கும் பயணிகளும் இறங்கி வந்து தண்ணீர் பிடித்துக்கொள்வார்கள். இதற்கு முன் இந்தப் பேருந்தில் கண்டக்டராக வேலைப் பார்த்தவர் தான் இப்படி ஒரு சுவையான தண்ணீர் இருப்பதை அடையாளம் காட்டினார். இந்தப் பகுதியை கடக்கும் பெரும்பாலான வாகனங்கள் இங்கே சில நிமிடங்கள் நின்று தண்ணீர் பிடித்துக்கொண்டு தான் குமுளிக்குச் செல்வார்கள். இந்த நாலு பாட்டிலில் ஒரு பாட்டில் என் வீட்டுக்கு…’’ என்றார் புன்னகையோடு.

தண்ணீர்

ஆட்டோ நிறைய காலிக்குடங்களுடன் காத்திருந்த ஆட்டோக்காரரிடம் பேசினோம், “ நான் தேனி முழுவதும் சுற்றிவந்திருக்கிறேன். எல்லா ஊர் தண்ணீரையும் குடித்திருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு சுவையான தண்ணீரை எங்கேயும் குடித்ததில்லை. இந்தத் தண்ணீரில் சமைத்தால் சுவையாக இருக்கும். அதனால், கூடலூரில் இருக்கும் ஹோட்டல்கள் அனைத்தும் இந்தக் குழாய் தண்ணீரைத் தான் பயன்படுத்துகிறார்கள். நான்தான் அவர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்கிறேன். ஒரு நாளைக்கு ஐம்பது குடம் தண்ணீரை அனைத்து ஹோட்டல்களுக்கு கொடுக்கிறேன். மேலும், சில தெருக்களில் இருக்கும்  மக்களும் இந்தத் தண்ணீரை வீட்டில் சமைப்பதற்காக கேட்பார்கள். அவர்களுக்காகவும் தண்ணீரை பிடித்துக்கொடுப்பேன். என் வீட்டுக்குக் கூட நான்கு குடம் தண்ணீரை தினமும் கொண்டு சென்றுவிடுவேன்’’ என்றார் புன்னகையோடு.

தண்ணீர்

அருகில் இருந்த ஊர்காரர்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம், ‘’மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் முல்லைப்பெரியார் ஆற்றில் இருந்துதான் இந்த தண்ணீர் வருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த தெருக்குழாய், கூடலூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதேபோல் தெருவுக்கு இரண்டு குழாய்கள் இருக்கின்றன. ஆனால், இந்தக் குழாய் தண்ணீர் மட்டுமே சுவையாக இருக்கும். ஏன் என்று யாருக்கும் தெரியாது. தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருக்கலாம். தாகத்தோடு வந்து இந்த தண்ணீரை ஒரு முறை குடித்தால் வாழ்நாளில் என்றுமே மறக்கமாட்டார்கள். அதனாலோ என்னவோ, எங்களைவிட மற்றவர்கள் தான் அதிகமாக இந்தத் தண்ணீரை பிடித்துக்கொள்வார்கள். பெரும்பாலும் வாகனங்களில் வருபவர்கள்தான் அதிகமாக தண்ணீர் பிடித்துக்கொள்வார்கள். நாங்களும் எதுவும் சொல்வதில்லை. தண்ணீர் தானே பிடித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவோம்…’’ என்றனர்.

வரிசையில் நின்று காத்திருந்து நாமும், அந்த குழாய்த் தண்ணீரைக் குடித்துப்பார்த்தோம். சிறுவாணித் தண்ணீர் தோற்றுவிடும். குமுளி வழியாக தேக்கடிக்கு சுற்றுலா சென்றால் கூடலூரை தண்டி மலைப்பாதைக்கு முன்பு இருக்கும் இந்தச் சாலையோர குழாய் தண்ணீரை ஒருமுறை சுவைத்துவிட்டுச் செல்லுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement