வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (31/08/2017)

கடைசி தொடர்பு:12:15 (31/08/2017)

வீட்டுத்தோட்ட உபகரணங்கள் முதல் நவீன தொழில்நுட்பங்கள் வரை... இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு ஒரு 360* அனுபவம்..! #PasumaiAgriExpo

விவசாயிகளுக்குப் புதிய கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், விகடன் குழுமம் நடத்தும் 'பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2017' நாளை (வெள்ளி) 1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை 4 நாள்கள் திருச்சியில் நடைபெறவுள்ளது.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2017 நடைபெறும் இடம்

இந்தக் கண்காட்சிக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்தியப் பயிர் பதன தொழில்நுட்ப மையம், தேசிய விதைக் கழகம், உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. திருச்சி சாரதாஸ் நிறுவனமும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

உலக அளவில் விவசாயத்துறையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள், கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது 'பசுமை விகடன்’ இதழ்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ

கடந்த 10 ஆண்டுகளாக ஒற்றை நாற்று நடவு, ஜீரோ பட்ஜெட், இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு என மாவட்டம் தோறும் 500 முதல் 2,000 பேர் வரை கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டிருக்கிறது. எப்போதும் பசுமை விகடன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மாபெரும் வரவேற்பு அளித்துவரும் விவசாயிகளுக்கு, இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 2015, செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கி 4 நாள்கள் ஈரோடு மாநகரில் முதன்முதலாக பிரமாண்ட வேளாண் கண்காட்சியை நடத்தியது பசுமை விகடன். நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண்மை, கால்நடை சம்பந்தப்பட்ட அரங்குகளோடு, வேளாண் வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகளின் கருத்தரங்குகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. வெற்றிகரமாக அமைந்த கண்காட்சியில், சுமார் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து, தமிழக விவசாயிகளுக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் பணியின் அடுத்தகட்டமாக, இரண்டாவது முறையாக திருச்சியிலும், மூன்றாவது முறையாக ஈரோட்டிலும் வேளாண் கண்காட்சியை நடத்தியது, பசுமை விகடன். அடுத்து, நான்காம் முறையாக திருச்சியில் வேளாண் கண்காட்சியை நடத்தும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது. விவசாயம் சம்பந்தப்பட்ட துறைகளின் அத்தனை தகவல்களையும் தொழில்நுட்பங்களையும் இந்தக் கண்காட்சியின் மூலமும் அளிக்க முடியும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் பல அமைப்புகள் வேளாண் கண்காட்சியை நடத்திவருகின்றன. இதில், பசுமை விகடன் தனித்ததொரு முயற்சியோடு களத்தில் செயல்பட்டுவருகிறது. பாரம்பர்யம் மற்றும் நவீனம் இரண்டும் கலந்ததாக இந்தக் கண்காட்சி இருக்கும். மற்ற கண்காட்சிகளை விட விவசாயிகள், பார்வையாளர்கள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியதாக இந்தக் கண்காட்சியும் அமையும் என்று நம்புகிறோம்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2017

விவசாயத்தில் நடைமுறைத் தொழில்நுட்பங்கள், இன்னும் பார்வைக்கு வராத பல கருவிகள், மகசூலைப் பெருக்கும் எளிமையான கருவிகள், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள், மதிப்புக் கூட்டும் கருவிகள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

வாழை சாகுபடிக்குப் பேர்போன திருச்சியில், இந்த மாபெரும் வேளாண் கண்காட்சி, நாளை தொடங்கப்பட உள்ளது. திருச்சி, மத்தியப் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி வளாக மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், கார் பார்க்கிங் வசதிகளுடன் அனைவரும் வந்துசெல்லும் வண்ணம் தாராள வசதியுடன் கண்காட்சி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ மைதானம்

நாளை 1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை 4 நாள்களும் வெவ்வேறு தலைப்புகளில் வேளாண் வல்லுநர்கள், நிபுணர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உரையாற்றும் கருத்தரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. செவிக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் கண்காட்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி, மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில், இந்தப் பள்ளி மைதானம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை 10 மணிக்கு விவசாயியும் நடிகருமான திரு.கிஷோர் அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுகிறார். முதல்நாளில் சிறப்பு விருந்தினர்களாக, நபார்டு வங்கியின் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, சத்தீஸ்கர் மாநில தம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரசன்னா ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் அனைவரையும் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

-பசுமைக் குழு