வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (14/09/2017)

கடைசி தொடர்பு:11:17 (15/09/2017)

"மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தும் திறந்து விட மறுக்கிறார்கள்!" - டெல்டா வேதனை

டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு கடுமையான வறட்சியால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதியும், 2013-ம் ஆண்டில் ஆகஸ்ட் 2-ம் தேதியும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியும், 2015-ம் ஆண்டில் ஆகஸ்ட் 9-ம் தேதியும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதியிலும் அணை திறக்கப்பட்டது. மேற்கண்ட வருடங்களில் 2013, 2014, 2015-ம் ஆண்டுகளில் அணைக்கு ஜூன் மாதத்தில் வரத்து இல்லாவிட்டாலும் ஜூலை மாதத்தில் உபரி நீரைப்பெற்று ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு நாள்கள் நிலவரப்படி, மேட்டூர் அணையில் சுமார் 75 அடி தண்ணீர் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டாவது தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். ஆனால், நேற்று நடந்த காவிரி புஷ்கர விழாவுக்கு மேட்டூர் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

மேட்டூர்

சம்பா சாகுபடி பணிகளை ஆரம்பிக்க இதுதான் பொருத்தமான காலம். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் தேதியைத் தமிழக அரசு அறிவித்தால் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணியை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இதற்கு மேலும் காலதாமதம் செய்தால் அந்தத் தண்ணீர் விவசாயத்துக்கு எந்த விதத்திலும் நன்மை அளிக்காது. 

இதுபற்றி பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், பெ.மணியரசன், "கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்துவருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஜூன் மாதம் 10 டி.எம்.சி, ஜூலை மாதம் 34 டி.எம்.சி, ஆகஸ்ட் 50 டி.எம்.சி, செப்டம்பர் மாதம் 50 டி.எம்.சி, அக்டோபர் 22 டி.எம்.சி, நவம்பர் 15 , டிசம்பர் 8, ஜனவரி 3, பிப்ரவரி 2.5, மார்ச் 2.5, ஏப்ரல் 2.5, மே 2.5 தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். இதில் 10 டி.எம்.சி கடலில் கலப்பதாக கழித்துக்கொள்ள வேண்டும். இப்போது 192 டி.எம்.சி தண்ணீர் வருடத்துக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை கணக்கிட்டால் இதுவரை 114 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்க பெ.மணியரசன்வேண்டும். ஆனால், 36.8 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்திருக்கிறது. கர்நாடகத்துக்குத் தண்ணீர் தட்டுப்பாடு இப்போதைக்கு இல்லை. பருவமழை சரியாக பொழிந்து தண்ணீர் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கர்நாடகா நிரம்பி வழிந்தால் மட்டுமே தண்ணீர் விடுவோம் எனச் சொல்கிறது. இதை கர்நாடகா சொன்னால், நடுவர் மன்றமே இங்குத் தேவை இல்லை என்ற நிலையே ஏற்படுகிறது. கர்நாடகா நமக்குத் தர வேண்டிய பங்குத் தண்ணீரைத்தான் கொடுக்க வேண்டும். காவிரி என்ற நதியில் நமக்கும் பங்கு உண்டு. உலக நாடுகளிடையே ஓடும் மிகப்பெரிய நதிகளும் இங்கு உண்டு. ஆனால், அந்நாடுகளுக்குள் எந்தச் சட்டங்களையும் வகுத்துக்கொள்ளாமல் தண்ணீரை பிரித்துக்கொள்கின்றன. நதிநீர் பங்கீட்டில் பிரச்னை என்றால், ஐ.நா சபைக்குச் சென்று தீர்த்துக்கொள்வார்கள். ஆனால், நம் நாட்டில் உச்ச நீதிமன்றம் தாண்டி எங்கும் செல்ல முடியாது. நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் மத்திய அரசின் துணையோடு கர்நாடக அரசு தண்ணீர் விடாமல் தடுக்கிறது. காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க.வாக இருந்தாலும் ஒரே நிலைப்பாடுதான். காவிரியில் வரவேண்டிய தண்ணீரை தமிழ்நாட்டிலும் கேட்க ஆளில்லை. முன்னால் இருந்த முதல்வர்களும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இப்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் காவிரியைப் பற்றி பேசப்போவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக இதே நிலைதான் காவிரியில் நீடித்து வருகிறது. இதற்கு பொதுப் பணித்துறையும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் சரியான பதிலையும் தீர்ப்பையும் சொல்லாமல் இருந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாகச் சம்பா சாகுபடி நடைபெறவில்லை. விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது" என்றார். 

காவிரி டெல்டா விவசாயிகள் கடந்த 6 ஆண்டுகளாகச் சம்பா சாகுபடியைச் செய்யவில்லை. முழுமையாக விவசாயம் செய்யும் வகையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீரும் வரவில்லை. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்துவிடவும் முயற்சிகள் இங்கு யாரும் எடுக்கவில்லை.


டிரெண்டிங் @ விகடன்