வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (18/09/2017)

கடைசி தொடர்பு:12:04 (25/09/2017)

தேனீ கொட்டாமல் தேன் எடுக்க உதவும் ’எந்திரன்’..!

குறிஞ்சி நிலத்தில் வாழும்  மக்கள் தேன் எடுப்பதைத் தங்கள் தொழிலாகவும் தேனை ஓர் உணவாகவும் கொண்டிருந்தனர். நாளடைவில் அவர்களின் இடம்பெயர்ந்த வாழ்க்கையால் தேன் எடுப்பது குறைந்துபோனாலும், இப்போதும் அம்மக்கள் தேன் எடுப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் விவசாயிகளும், தேனீ வளர்ப்பு ஆர்வலர்களும் தேனீகளுக்கு தனியாகப் பெட்டிகளை அமைத்து வளர்க்கத் துவங்கினர். தேனீ வளர்ப்பில் தேனை எடுப்பதுதான் சற்று சிக்கலான விஷயம். பாதுகாப்பாக எடுக்காவிடில் தேனீக்கள் தாக்கத்துக்கு ஆளாக நேரிடும். புகைமூட்டி தேன் எடுத்தால் தேனீக்கள் இறக்கும் வாய்ப்பும் அதிகம். மேலும், எடுக்கப்பட்ட தேனில் புகை மணம் வந்தால் வியாபாரத்துக்கு உகந்ததாக இருக்காது. இத்தகைய சிக்கல்களைத் தீர்க்க தற்போது தேனை எடுக்கும் ரோபோட் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் இந்த உடையை வடிவமைத்துள்ளனர். அக்கல்லூரி மாணவர்கள் தேனீக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ரோபோ ஆடை அணிந்து நவீன முறையில் தேன் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

எந்திரன் உடையில் தேன் சேகரிப்பு

தேனீ வளர்ப்பு வியாபார ரீதியில் பெரும் வரவேற்பு பெற்ற தொழிலாகும். தமிழ்நாட்டில் பல இடங்களில் தேனீ வளர்ப்பு அதிகமாகச் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயக் கல்லூரி மாணவர்களின் இப்புதிய முயற்சி தேனீக்கள் வளர்ப்பு மற்றும் தேன் பொருள்கள் விற்பனையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணவர்களின் இந்தப் புதிய முயற்சியைப் பற்றி மதுரை வேளாண்மைக் கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷிடம் பேசினோம்,

"கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கல்லூரியின் தோட்டக் கலை பண்ணையில் மலைத்தேனீ, இந்தியத் தேனீ, கொசுத் தேனீ மற்றும் இத்தாலியத் தேனீக்களை பரிசோதனை முறையில் பெட்டியில் வளர்க்க ஆரம்பித்தோம். அந்தப் பெட்டியில் தேனீக்கள் கூடு கட்டி தேனைச் சேகரித்து வைத்துள்ளன. பொதுவாக மலைத் தேனீக்களை வளர்ப்பது மிகக் கடினம். கல்லூரி வளாகத்தில் இயற்கையாக அமைந்த பாறை இடுக்குகள் மற்றும் அடர்ந்த மரங்களில் மலைத் தேனீக்கள் வளர்கின்றன. மலைத் தேனீக்கள் பண்ணையில் மகரந்தச் சேர்க்கைக்கு காரணமாகிப் பயிர் மகசூலை அதிகரிக்கச் செய்கின்றன. அதைத் தொடர்ந்துதான் தேனீக்களைக் கலைந்து போக விடாமல் பாதுகாக்கிறோம்" என்றவர் தொடர்ந்தார்.

தேன் சேகரிப்பு

போதிய அளவு தேன், கூடுகளில் சேர்ந்த பின் அதைச் சேகரிக்க 'பி வெயில்' எனும் ரோபோட்டிக் உடையைப் பயன்படுத்துகிறோம். தேனை எடுக்கும்போது கலைந்த தேனீக்கள் சாகாமல் மீண்டும் அதே கூட்டில் தேன் சேகரிப்பில் ஈடுபடும். பூக்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு ஒரு முறை 10 கிலோ தேன் எடுக்கலாம். 1 கிலோ தேனை ரூ.400-க்கு விற்பனை செய்கிறோம். பூக்கள் குறைவாக உள்ள காலங்களில் சேகரிக்கும் தேனை தேனீக்கள் தங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும். இம்முறையில் எடுக்கப்படும் தேன் சுத்தமாக இருப்பதால் சுற்று வட்டார மக்கள் தேன் வேண்டும் என கல்லூரிக்குப் படை எடுக்கிறார்கள். 

மக்களிடையே தேனுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இந்த முறை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையும். விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதால் பயிர் மகசூலும் அதிகமாகும்" என்றார்.