வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (10/11/2017)

கடைசி தொடர்பு:11:25 (10/11/2017)

’1026 கிலோ பூசணிக்காய் எப்படி வளர்த்தேன்?’ விவசாயியின் டிப்ஸ்

தொழில்நுட்பத்தைப் பின்பற்றி உணவுப் பொருள்களை சாதாரண அளவை விடப் பெரிய அளவில் உற்பத்தி செய்வது உலகமெங்கும் நடப்பதுதான். இதற்கான போட்டிகள் கூட நடைபெறுவது உண்டு. 1970-களின் தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவிலான காய்கறிகளுக்கான போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 1,000 பவுண்ட் அளவிலான பெரிய பூசணிக்காய் கலந்து கொண்டது. 2005-ம் ஆண்டு வூல்ஃப் என்பவர் உற்பத்தி செய்த 1407 பவுண்ட் அளவுள்ள பூசணிக்காய் கலந்து கொண்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற பெரிய அளவிலான பூசணிக்காய் போட்டியில் ஸ்னைடர் என்பவரின் 2,264 பவுண்ட் எடையுள்ள பூசணிக்காய் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனை உற்பத்தி செய்த ஸ்னைடர் அனைத்து விவசாயிகளும் எப்படி உற்பத்தி செய்யலாம் என வழி சொல்கிறார். 

பெரிய அளவிலான பூசணிக்காய்

"மரபணுதான் எடையையும், அளவினையும் தீர்மானிக்கும். சில மரபணுக்கள் மட்டும் குடும்பப் பண்புகளைக் கொண்டிருக்கும். சாதாரணமாக உள்ளூரில் உள்ள கடைகளில் கிடைக்கும் விதைகளிலிருந்து பெரிய அளவு பூசணிக்காய் கிடைக்காது. வெறும் விதைத் தேர்வுடன் மட்டும் நின்றுவிடாமல் அதற்கான பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் நன்றாகக் கவனித்து வர வேண்டும். சிறிய முயற்சி எடுத்தாலே 400 முதல் 500 பவுண்ட் எடை வரையிலான பூசணிக்காயைப் பெற முடியும். அதற்காக நீங்கள் விடுமுறையின்போதும் கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.

பூசணிக்காயை எவ்வாறு வளர்க்கப்போகிறோம் என்ற திட்டமிடல் மிக முக்கியம். பூசணிக்காய் வளர 100 நாள்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால், வழக்கமான உருவத்தை விட அதிகமான அளவு வளர்வதற்கு மேலும் அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளும். பூசணிக்காய் தர்பூசணி குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் உருவத்தில் பெரிதாக வளர்ப்பது எளிது. ஏப்ரல் மாதத்தில் உட்புறத் தொட்டிகளில் இலை, உரங்கள் மற்றும் மக்கும் குப்பைகளைப் போட்டு மண்ணை நிரப்பிவிட வேண்டும். அதன் தொடர்ச்சியாக விதைகளை விதைக்க வேண்டும். தொட்டியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வர வேண்டும். மே மாதத்தில் செடியானது முளைத்து வெளியே வரும். அப்போது தொட்டியிலிருந்து வெளியில் மாற்ற வேண்டும். மாற்றும் முன்னர் நடப்படும் குழியில் எரு, உரம், குப்பைகள் உள்ளிட்ட அனைத்தையும் மண்ணுடன் கலக்க வேண்டும். பூசணிச் செடியானது கிட்டத்தட்ட ஜூன் மாதத்தில் தனது அதீத வளர்ச்சியை நோக்கிச் செல்லும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் விவசாயிகள் மண்ணில் சத்துக்களை அளவுக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். 

 பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதலிலிருந்து பூசணிச் செடியைப் பாதுகாக்க வேண்டும். பூச்சி அல்லது நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூசணிக்காயின் வளர்ச்சியில் தடை ஏற்படும். பூசணிச்செடிக்கு ஒரு நாளைக்கு 370 லிட்டர் தண்ணீரில் உயிர் உரங்கள் கலந்து மூன்று அல்லது நான்கு வேளைகளில் பிரித்துக்கொடுக்க வேண்டும். அதிக எடை கொண்ட பூசணிக்காயை செடியின் காம்புகள் தாங்காது. அதனால் பராமரிப்பின்போது கவனமாகக் கையாள வேண்டும். சிறிது கவனக்குறைவாகக் கையாண்டாலும் பூசணிக்காய் காம்பிலிருந்து முறிந்துவிடும். அதேபோல அளவில் பெரிதாகிக் கொண்டே வரும் பழத்தை சுற்றியும் இட வசதி அதிகமாக இருக்க வேண்டும். பூசணிக்காய் அதிகமாக வளர்வதற்கு ஏதாவது ஊசி போட்டால் பூசணிக்காய் விரைவில் அழுகி விடும். 

பரிசு பெற்ற பூசணிக்காய்

இவ்வளவு பெரிய பூசணிக்காயை விளைய வைப்பதை விட அதை எடுத்துக்கொண்டு வருவதுதான் சற்று கடினமாக இருக்கும். பெரிய பூசணிக்காய்களைப் பெரிய டிரக்குகளில் அல்லது ட்ரைலர்களில்தான் கொண்டுவர முடியும். சில மக்கள் பூசணிக்காய்களை எடுப்பதற்காக கிரேன்களைப் பயன்படுத்துவார்கள். கிரேன்களைப் பயன்படுத்தினால் பூசணிக்காய் சிதையும். போட்டிகளில் கலந்துகொள்ள பூசணிக்காய்களின் மீது கரும்புள்ளிகள்கூட இருக்கக் கூடாது. இந்தப் பூசணிக்காய் வெறும் போட்டிக்காக மட்டும் உருவாவது கிடையாது. இது அதிகத் தண்ணீரைக் கொண்டதால் மெல்லியதாகவும், அதிக சுவையாகவும் இருக்கும்" என்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும், பெரிய பூசணிகளுக்கான போட்டி நியூயார்க் நகரத்தில் நியூயார்க் பொட்டானிக்கல் கார்டனில் நடைபெறும். இரண்டாம் நிலை பொருள்களுக்கான கண்காட்சிகள் மற்றும் பிற காட்சிகளும் அதில் இடம்பெறும். அதில் அதிக பூசணிக்காய்களையும் விற்றுத் தள்ளியிருக்கிறார், ஸ்னைடர்.


டிரெண்டிங் @ விகடன்