வெளியிடப்பட்ட நேரம்: 21:44 (20/11/2017)

கடைசி தொடர்பு:15:57 (21/11/2017)

"நாராயண சாமிக்குத் தெரிஞ்ச விவசாயத்தின் அருமை எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியலையே!" - 'இயற்கை விவசாயி'யின் குரல்

"படித்த இளைஞர்கள் கைநிறைய சம்பாதிக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் வேலைகளை துச்சமென மதித்து உதறித் தள்ளிவிட்டு, 'விவசாயம் பார்க்கப் போறோம். அதுவும் இயற்கை விவசாயம்'ன்னு சேத்துல காலை வைக்கிறாங்க. ஆனால், தமிழக அரசு விவசாயத்தை அழிக்க பார்க்கிறதே ஒழிய, ஊக்கப்படுத்த பார்க்கலை. ஆனால், புதுச்சேரி அரசு எங்களை வைத்து, 'அந்த மாநிலத்துல உள்ள நாற்பதாயிரம் ஏக்கர் விளைநிலங்களிலும் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய வழிவகை பண்ணுங்க'ன்னு அனுமதிச்சுருக்காங்க. முதல்கட்டமா நூறு ஏக்கர்ல விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய திசைதிருப்பி இருக்கோம். புதுச்சேரி அரசுக்கு அவங்க விவசாயம், விவசாயிகள் மீது இருக்கும் அக்கறை, தமிழக அரசுக்கு இங்க விவசாயத்தை வளர்க்க துளியும் இல்லை" என்று ஆதங்கமாகப் பேசுகிறார் கணேசமூர்த்தி. 

 இயற்கை விவசாயம்

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளைஞரான இவர், சிங்கப்பூரில் ஒன்றரை லட்சம் சம்பளம் கொடுத்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனது ஊரில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இயற்கை விவசாயம் செய்து வெற்றிக்கொடி நாட்டியவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரோடு டெல்டாவில் நடந்த மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்களில் ஆர்வத்தோடு கலந்து கொண்டவர். சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து இயற்கையைக் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் இவர், கிராம திருவிழாக்கள், மாநாடுகள், பல்வேறு நிகழ்ச்சிகள் என்று மக்கள் கூடும் இடங்களில் ஐந்நூறு மரக்கன்றுகளோடு சென்று, மக்கள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார். அதோடு, பாரம்பர்ய விதை சேகரிப்பு மனிதர் நெல் ஜெயராமன் மீதுள்ள ஈடுபட்டால், இப்போது இவரும் இருபதுக்கு மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரித்து நண்பர்களுக்குக் கொடுத்து, அவர்களைப் பாரம்பர்ய / இயற்கை விவசாயத்திற்கு திருப்பி வருகிறார். அதோடு, பல இளைஞர்களை சேர்த்துக் கொண்டு 'டாஸ்மாக்' என்ற இடைத்தரகர்கள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்கி விற்று, இயற்கை விவசாயிகளுக்கு லாபம் தேடி தரும் அமைப்பை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். இவரை வைத்துதான் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்பும் நல்ல காரியத்தை தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் சொல்லி, கணேசமூர்த்தியிடமே பேசினோம்.


 கணேசமூர்த்தி"நம்மாழ்வார் அய்யாவை சந்திச்ச பிறகுதான், விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் விவசாயம் மீது வெறுப்புக் கொண்டிருந்த நான், விவசாயத்தின் மீது குறிப்பா இயற்கை விவசாயம் செய்யணும்ற ஆர்வம் வந்துச்சு. ஆரம்பத்துல வீட்டுலேயே ஏத்துக்கலை. கஷ்டப்பட்டுதான் சக்சஸ் பண்ணினேன். நான்; என்னோட அந்த இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புஉணர்வு/உந்துதல் நின்னுட கூடாதுன்னு நினைச்சேன். அதனால்தான், சமூக வலைதளங்கள் மூலமா என்னைப்போல இயற்கை விவசாயம் செய்ற ஆர்வத்துல இருந்த இளைஞர்களை ஒருங்கிணைச்சேன். அதன்மூலமா இயற்கை விவசாயத்தை பத்தி பெரிய பரப்புரை செய்தோம். அப்புறம், இயற்கை விவசாயம் செய்ய பலரும் தயங்கக் காரணம் விளைச்சல் கம்மியா இருக்கும், மார்க்கெட்டும் இருக்காதுங்கிறதுதான். அதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரோகிணி மேடத்தை வச்சு, புதுச்சேரியில டாஸ்மாக்குங்கிற அமைப்பைத் தொடங்கினோம். அதன்மூலமா, இயற்கை விவசாயம் பார்க்கிறவங்ககிட்ட விளைபொருள்களை இடைத்தரகர்களுக்கு போகாம நாங்களே வாங்கி வித்து, அந்த விவசாயிகள் விரும்புற விலையைக் கொடுக்கிறோம். அதைக் கேள்விபட்டுதான் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எங்களைக் கூப்பிட்டுப் பேசினார். அந்த மாநிலத்துல நாற்பதாயிரம் ஏக்கர்ல நடக்கும் விவசாயத்தை முழுக்க இயற்கை விவசாயம் செய்ய வைக்க வழியுறுத்தினார். சேவை அடிப்படையில்தான் நாங்க இதை செய்றோம்.

 கணேசமூர்த்தி

முதல்ல அந்த மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணனைச் சந்தித்துப் பேசினோம். 'இங்க செயற்கை விவசாயம் செய்து ஏக்கருக்கு விவசாயிகள் 45 மூட்டைகள் வரை மகசூல் பார்க்கிறாங்க. அவர்களை எப்படி இயற்கை விவசாயத்திற்கு திருப்ப முடியும்'ன்னு சந்தேகமா கேட்டார். அதுக்கு நாங்க, 'இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தயங்குவதற்கு காரணம், குறைவான விளைச்சல்தான். அதோட, அதற்குக் கிடைக்கும் குறைவான விலையும்தான். அதனால்,'இப்போது விவசாயிகளுக்கு, நெல்லுக்குக் கிடைக்கும் குவிண்டாலுக்கு இரண்டாயிரம் என்பதை இயற்கை விவசாயத்தில் விளைந்தால், குவிண்டாலுக்கு மூவாயிரம் கொடுத்து நாங்களே வாங்கிக் கொள்கிறோம். அதனால், விவசாயிகள் நம்பி வருவாங்க'ன்னு சொன்னோம். நம்பிக்கை இல்லாமல்தான் ஒத்துக்கிட்டார்.

அதன்பிறகு, முதலமைச்சர் தேதி கொடுக்க, அந்த மாநிலத்துல இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் அமைப்பான ஆத்மா அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண்மை இயக்குநர் ராமமூர்த்தி, அனைத்துப் பகுதி ஏ.ஏ.ஓ-க்கள்ன்னு பலரும் கலந்து கொள்ள, அந்த மாநில முதல்வரால் 'ஆர்கானிக் சோன்'ங்கிற விவசாயத்திற்கான விதை விதைக்கப்பட்டது. அப்போது, பல பகுதி ஏ.ஏ.ஓ-க்கள் தயங்க, சேலியமேடு ஏ.ஏ.ஓ பரந்தாமன் மட்டும்,'எங்க பகுதியில் முதல்ல தொடங்கலாம். எங்க பகுதி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்புவது எளிது'ன்னு சொன்னார். சொன்னபடி அவர் விவசாயிகளை ஒத்துழைக்க வைக்க, இப்போது அந்தப் பகுதியில் 100 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளை மாற்றியிருக்கிறோம். விதைகளையும், இடுபொருள்களையும் நாங்களே கொடுத்து, இயற்கை விவசாயம் பார்க்கும் வழிமுறையையும் சொல்லிவிட்டோம். விவசாயம் பார்த்தது அவங்கதான். நல்லபடியா விவசாயம் வந்திருக்கு. அடுத்த போகத்துல இன்னும் பல விவசாயிகளை மாற்றி, 5000 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயம் பண்ண வைக்கும் முயற்சியில் இருக்கோம். 2020 க்குள் புதுச்சேரி மாநிலத்துல உள்ள மொத்த நிலப்பரப்பான நாற்பதாயிரம் ஏக்கரிலும் விவசாயிகளை இயற்கை விவசாயம் பண்ண வைப்பதுதான் எங்க முழு இலக்கு. அதற்கு ஏதுவாக, இப்போது நடந்திருக்கும் 100 ஏக்கர் நிலத்திலும் அறுவடை நடக்கும் போது முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மாநிலத்துல உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து,பெரிய விழாவாகக் கொண்டாடி விழிப்புஉணர்வு பண்ணலாம்ன்னு இருக்கோம்.

 கணேசமூர்த்தி

அதேபோல், தங்கள் மாநிலங்களிலும் இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளைத் திருப்ப நினைக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள், எங்களுக்கு அந்த புராஜக்டை கொடுத்திருக்காங்க. குறிப்பா தெலங்கானா மாநிலத்துல 76 லட்சம் ஏக்கர் நிலத்தையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற நினைக்குறாங்க. அதுக்கு முன்பு புதுச்சேரியில நாங்க செய்திருக்கும் இந்த புராஜெக்டில் நல்ல விளைச்சலை காட்டணும்னு சொல்லியிருக்காங்க. கட்டாயம் காட்டி அந்த மாநிலங்களிலும் இயற்கை விவசாயம் நடக்க, எங்க கைங்கர்யத்தை கடைபரப்புவோம். ஆனால், எல்லா மாநில முதல்வர்களுக்கும் இயற்கை விவசாயத்தோட வீரியம் உறைக்க ஆரம்பிச்சுருக்கு. ஆனா, நம்ம தமிழ்நாடு அரசுக்கு இயற்கை விவசாயத்து மேல மட்டுமல்ல, பொதுவா விவசாயத்து மேலயும், விவசாயிகளின் மீதும் துளியும்  அக்கறையே இல்லை. இருந்திருந்தால், சோழர் காலத்திலிருந்து விவசாயம் பார்த்து இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு விவசாயம் செய்ய கற்றுக் கொடுத்த டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன்ன்னு கண்டதையும் எடுக்க அனுமதித்து, டெல்டா பகுதியைப் பாலைவனமாக்க பார்க்குமா தமிழக அரசு. தமிழக அரசு அதிகாரிகளைப் பார்த்து, இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளை மாற்ற நாங்க எடுக்கும் முயற்சியைப் பற்றி விளக்க பலமுறை முயன்றும், பார்க்க முடியவில்லை. ஆனால், தி.மு.க கட்சியைச் சேர்ந்த கனிமொழி எம்.பி எங்க புராஜெக்டை ஏற்றுக்கொண்டு, அவர் தத்தெடுத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்துல உள்ள ஒரு கிராமத்தில் 100 சதவிகிதம் விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய திசைதிருப்பும் காரியத்தில் இறங்க அனுமதிச்சுருக்காங்க. 

 இயற்கை விவசாயம்

இப்படி எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி புள்ளிகளுக்கும் இயற்கை விவசாயத்தோட அருமை தெரிஞ்சுருக்கு. ஆனால், தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தி, தங்களை தாங்களே புகழ்ந்துக்க மட்டுமே தெரியுது. ஆனால், தமிழ்நாட்டுல 50 லட்சம் ஹெக்டேர்ல விவசாயம் நடக்குது. அதுல பன்னாட்டு உர கம்பெனிகளும், இன்னும் பலரும் லாபம் பெறும் வகையில் கழைக்கொல்லி உரத்திற்கு மட்டும் தமிழக அரசு ஏக்கருக்கு நானூறு ரூபாய் வரை தருது. வேப்பெண்ணெய், உப்பை கலந்து பதினைந்து ரூபாய் செலவு பண்ணி அடித்தால்,களை வராதுங்கிற உண்மையை விவசாயிகளுக்குச் சொல்வதில்லை. தமிழக அரசு மற்றும் விவசாயிகளோட பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியா வெளிநாட்டு உர கம்பெனிகளுக்குப் போகுது.

திண்டிவனத்துல உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலைய தலைமை அதிகாரி வைத்தியநாதனை சந்தித்துப் பேசினோம். விதவிதமான புதுரக ஹைபிரிட் எள், கடலைகளை உருவாக்கித் தருகிறார்கள். ஆனால், அவர்,'இந்திய அளவில் எள்ளில்கூட இயற்கை விவசாயம் பண்ணிடலாம். ஆனால், கடலையில் யாரும் இயற்கை விவசாயமோ, பாரம்பர்ய ரகத்தையோ விளைவிக்க முடியாது'ன்னு சொன்னார். எங்களுக்கு அதிர்ச்சியா ஆயிட்டு. பாரம்பர்ய கடலை ரகத்தை இயற்கை முறையில் விளைவிக்கும் விவசாயிகள் தமிழகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் சார்பாக இயங்குகிற அதுசம்பந்தமான ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி இப்படிப் பேசியது அதிர்ச்சியா இல்லாமல் வேறு எப்படி இருக்கும். இதிலிருந்தே விவசாயத்தின் மீது, விவசாயிகளின் மீது தமிழக அரசு கொண்டிருக்கும் 'கரிசனத்தை' நீங்கள் புரிந்து கொள்ளலாம். புதுச்சேரி மாநில முதல்வருக்கு இருக்கும் விவசாயத்தின் மீதான அக்கறை தமிழக முதல்வருக்கும் வரலைன்னா அல்லது வரவழைக்கலன்னா, தமிழகம் விரைவில் பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார் அழுத்தமாக!.


டிரெண்டிங் @ விகடன்