Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"நான் தோத்தா நம்மாழ்வார் அய்யா தோத்த மாதிரி... தோக்கமாட்டேன்!" - இயற்கை விவசாய 'போராளி' ரவி

                          நம்மாழ்வார்

"ஏதாவது புது முயற்சி எடுத்தாலே 'இவன் பொழைக்கத் தெரியாதவன்','இவன் கோமாளி'ன்னு ஊர் தூற்றிப் பேசும். சுண்ணாம்பு மண் கலந்த செம்மண் பொட்டல்காடு பன்னிரண்டு ஏக்கரை இருபது லட்சத்துக்கு வாங்கி, மேற்கொண்டு இருபது லட்சம் செப்பனிட செலவு செஞ்சு, அதுல இயற்கை விவசாயம் செய்றேன். என்னைப் பார்த்து எங்க ஊர் மக்கள், 'தரிசு நிலத்தை இவ்வளவு ரேட்டு கொடுத்து வாங்கி இருக்கான். அதுலயும் இயற்கை விவசாயம் பண்றான். கோமாளிப்பய'ன்னு ஏகத்துக்கும் அவச்சொல் பேசுறாங்க. நான் கலங்கலை. ரசாயன உரங்களை அள்ளித் தெளிச்சு, நோய்கள் வந்து செத்து மடியும் அவங்க அறிவாளிங்கன்னா, நான் கோமாளியாவே இருந்துட்டு போறேன். அதுக்காகதான், என் பண்ணைக்கு 'கோமாளி பண்ணை'ன்னு பேர் வச்சுருக்கேன்" என்று ஆதங்கமாக பேசுகிறார் ரவி.

  ரவி இயற்கை விவசாயம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, குள்ளமாப்பட்டிதான் ரவிக்கு சொந்த ஊர். தஞ்சை மாவட்டம் வரை வியாபாரம் செய்து, அதில் கிடைத்த லட்சங்களைப் போட்டு, தனது ஊரில் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறார். தனது விவசாயப் பண்ணைக்கு முன்புறம் உள்ள கேட்டின் இருபுறமும் பாரதியார், நம்மாழ்வார் உருவங்களை ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார். அதோடு, பண்ணையைச் சுற்றி உள்ள வேலியில் அங்கங்கே காந்தி, காமராஜர், ஐ,ஏ.எஸ் சகாயம், அம்பேத்கர், ஜீரோ பட்ஜெட் புகழ் சுபாஷ் பாலேக்கர், பெரியார், அப்துல்கலாம் என்று இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்களின் படங்களை மாட்டி வைத்திருக்கிறார். அவர்கள் விவசாயம் மற்றும் வாழ்வியல்குறித்து சொன்ன தத்துவங்களையும் கூடவே எழுதி வைத்திருக்கிறார். அதேபோல், தனது காரின் முன் கட்டப்பட்ட கொடியின் ஒருபக்கம் நம்மாழ்வார் படத்தையும் மற்றொருபுறம் பாரதியார் படத்தையும் வைத்திருக்கிறார். காரின் பின்னே ஏரோட்டி என எழுதி, 'உழவுக்கு வந்தனம்' செய்திருக்கிறார். பண்ணையின் நடுவில் உள்ள பிரமாண்ட தண்ணீர் சேமிப்புத் தொட்டியைச் சுற்றி பல ஆயிரம் செலவு செய்து, காடு, மலை என்று இயற்கை வளங்களை; இயற்கை குறித்த கற்பிதங்களை ஓவியங்களாக தீட்டி வைத்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அறச்சீற்றம் கொப்பளிக்கிறது. 

  ரவி

" 'இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்'னு மேடைக்கு மேடை முழங்குறாங்க. ஆனால், 'முன்னத்தி ஏர் எவ்வழியோ, பின்னத்தி ஏர் அவ்வழி' ன்னு செயற்கை விவசாயத்துல விவசாயிகள் ஊறிக் கிடக்குறாங்க. அவங்கள அப்படி மாத்தியது இந்த கட்சிகளும் பன்னாட்டு உரக்கம்பெனிகளும்தான். நம்மோட பாட்டன், பூட்டன் செய்த இயற்கை விவசாயத்தை முன்முயற்சியா செஞ்சா, நம்மை தீண்டத்தகாதவனா பார்க்கிறாங்க. என்ன மக்களோ? என்ன அரசோ? என்ன விவசாயமோ? நான் என் தொழில்ல இன்னும் லட்சம்லட்சமா சம்பாதிக்க முடியும். நம் முன்னோர்கள் செஞ்ச விவசாயத்துக்கு கள்ளிப்பால் ஊத்திட்டு, பணம் மட்டும் சம்பாதித்தோம்னா, வருங்கால சந்ததி நல்ல விவசாய முறையை மியூசியத்துலதான் பார்க்கணும்" என்று வெயில்காலத்து எள்ளுச்செடியாக வெடித்தவர் கொஞ்சநேரத்தில் சாந்தமானார். 

"எங்களுக்கு பூர்வீக நிலம்னு மூணு ஏக்கர்தான் இருந்துச்சு. அதுல எங்கப்பா விவசாயம் பண்ணிட்டிருந்தார். நம்மாழ்வார் மேல உள்ள ஈடுபாட்டால அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த பன்னிரண்டு ஏக்கர் நிலத்தை இருபது லட்சம் கொடுத்து வாங்கினேன். அப்பயே, 'பொழைக்கத் தெரியாதவன், காசை கருமாயம் பண்ணிட்டான்'ன்னு ஊர் மக்கள் அவதூறு பேசுனாங்க. அதை செப்பனிட, கேணி வெட்ட, போர்வெல் போடன்னு மேற்கொண்டு இருபது லட்சம் செலவு பண்ணினேன். 'கோமாளிப்பய'ன்னு கடுஞ்சொல் வீசினாங்க. போன போகத்துல நான் போட்டிருந்த வெங்காய நடவுல அரிச்சுருந்த பூச்சியைக் கொல்ல ரசாயன உரத்தை அடிக்காம இயற்கைப் பூச்சி விரட்டிகளை தெளிச்சத பார்த்துட்டு எங்கப்பாவே கோச்சுகிட்டு பத்துநாள் வீட்டை விட்டுப் போயிட்டார். ஒருகணம் கலங்கிப் போயிட்டேன். இருந்தாலும், என்ன இடர் வரினும், எத்தகைய  தடை வரினும் இயற்கை விவசாயத்தில் இருந்து இம்மியளவுகூட மாறக் கூடாதுன்னு உள்ளுக்குள் வைராக்கியத்தை விதைச்சுகிட்டேன். இல்லை.. இல்லை.. நம்மாழ்வார் அய்யாவை மனசுல உறுதிக் கொடுக்க மாட்டி வச்சுகிட்டேன். அதனால் நான் எதுக்கும் அசரலை. இன்னைக்கு என்னோட இயற்கை விவசாயம் தோத்தாலும், இன்னும் அஞ்சு வருஷத்துல இந்த நிலத்தை பொன்விளையிற பூமியா மாத்தி, லாபத்தை காட்டி மக்களோட முகத்துல கரியைப் பூசணும். 'இயற்கை விவசாயம்தான் நம் விவசாயம்'னு இந்த ஊர் மக்களுக்கு காட்டனும்'ன்னு வைராக்கியமா இருக்கேன். அதுவரைக்கும், நான் அவங்க சொல்ற கோமாளியாவே இருந்துட்டு போறேன். அதுவரை, இந்தப் பண்ணையும் கோமாளிப் பண்ணையாகவே இருக்கட்டும்னுதான், பண்ணைக்கும் கோமாளிப் பண்ணைன்னு பேர் வச்சுருக்கேன்.

 ரவிஅதேபோல், இயற்கையைப் காப்பத்த வலியுறுத்தி தண்ணீர் சேமிப்புத் தொட்டியில் காடுகளையும், மலைகளையும் ஓவியமாக தீட்டி இருக்கேன். இன்னைக்கு எல்லோருமே சுயநலமா மாறிட்டோம். நமக்கு இயற்கை விவசாயத்தைச் சொல்லிகொடுத்த நம்மாழ்வாரை மறந்துட்டோம். நமக்காக போராடிய பெரிய தலைவர்களை மறந்துட்டோம். ரஜினி, கமலை ரோல்மாடலா எடுத்துக்க தெரிஞ்ச நமக்கு, நேர்மையை வாழ்க்கையா வச்சுருக்கிற சகாயம் போன்ற அதிகாரிகளோட அருமை தெரிவதில்லை. விவசாயத்தை எப்படி செய்யணுங்கிறதை உணர்த்துற குறியீடா நம்மாழ்வார் போட்டோவையும், வாழ்வை எப்படி வாழணும்ங்கிறத உணர்த்த தலைவர்களின் போட்டோக்களையும் நம் வாழ்க்கையில் நாம் எப்படி நேர்மையை கடைப்பிடிக்கனும்னு உணர்த்துவதற்காக சகாயம் போட்டோவையும் என் தோட்டத்துல மாட்டி வச்சுருக்கேன். இந்தக் காட்சி நாலு பேரை யோசிக்க வைக்காதா என்ற சின்ன ஏக்கம்தான் என்னை இப்படி பண்ண வச்சுருக்கு. நான் செய்ற விவசாயம் எனக்கு பணம், காச கொட்ட வேண்டாம். பத்து பேரை இயற்கை விவசாயத்துக்குத் திருப்பினுச்சுன்னா போதும். அதுதான், நான் செய்ற முயற்சிகளின் நோக்கம். அதுதான், எனக்கு இயற்கை

 

ரவி

விவசாயத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, கத்துக் கொடுத்த நம்மாழ்வாருக்கு நான் செய்யும் குருகாணிக்கை. அது கண்டிப்பா நடக்கும். நம்மாழ்வார் காத்தா, தண்ணியா, மலையா, காடா இருந்து மாத்துவார். கண்டிப்பா நான் இயற்கை விவசாயத்துல தோக்கமாட்டேன். ஏன்னா, நான் தோத்தா அது நம்மாழ்வார் அய்யா தோத்த மாதிரி. அவர் நல்ல விவசாயத்தை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும், எந்த சூழலிலும் பின்வாங்காத போர்க்குணத்தையும் கத்துக் கொடுத்துட்டு போயிருக்கார். அதனால், நான் ஜெயித்தே தீருவேன். அதுவரை, ஊர் என்ன சொன்னாலும், எனது இந்த அறத்தவம் தொடரும்" என்றார் முத்தாய்ப்பாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement