Published:Updated:

பிரமிக்க வைக்கும் பாரம்பர்ய நெல் ரகங்கள்! - 5 ஏக்கர்... 111 விதமான பயிர்கள்...

பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்

மகசூல்

படங்கள்: பிரசன்னா

பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்து, பயிர் செய்து, விதைநெல்லைப் பரவலாக்குவதைச் சிலர் செய்துவருகிறார்கள். போற்றுதலுக்குரிய அந்தப் பணிக்காக, தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் 111 விதமான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து அசத்திவருகிறார் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், மேல காசாகுடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கர். அணிவகுக்கும் பாரம்பர்ய நெற்பயிர்களைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்ல எந்த ஊர்ல நெல் திருவிழா நடந்தாலும் போயிடுவேன்.

மழை தூறிக்கொண்டிருந்த ஒரு பகல்பொழுதில் பாஸ்கரின் வயலுக்குச் சென்றோம். அழகாக அணிவகுத்து நின்ற நெற்பயிர்களுக்குப் பெயர்ப் பதாகை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி பாஸ்கர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘நம் முன்னோர்கள் மிகப்பெரிய தீர்க்கதரிசியா இருந்திருக்காங்க. பழங்காலத் தமிழ் இலக்கியங்கள்லயே பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவங்களைப் பத்தி ஏராளமான குறிப்புகள் இருக்கு. அகத்தியர் குணபாடத்துல,

‘கல்லுண்டைச் சம்பாவைக் கண்டருந்தி, நின்றவர் முன்,

மல்லுண்ட பேரெதிர்க்க வாய்க்குமோ...

வில்லுண்ட போலுரையாம், நல்ல புசபலமாம், இன்சுவையாம்,

பாலனைய மென்மொழியே பார்’னு சொல்லப்பட்டிருக்கு. `கல்லுண்டைச் சம்பா அரிசியைச் சாப்பிடுறவங்களை குத்துச்சண்டை வீரர்களாலகூட எதிர்க்க முடியாது. இது நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது. சுவையானது. பேசும் திறமையையும் கொடுக்கும்’னு அந்தப் பாட்டு சொல்லுது. இப்படிப் பல பாடல்கள்ல பாரம்பர்ய நெல் ரகங்களைப் பத்திப் பாடிவெச்சிருக்காங்க’’ என்றவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“பி.காம் படிச்சிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோட ஆன்மிக குருவான பரஞ்சோதி சுவாமிகள், ‘மனித வாழ்வியல்ல விவசாயம் மிக முக்கியமானது’னு எனக்கு உணர்த்தினார். ‘சொந்த ஊருக்குப் போய், விவசாயத்தைப் பாரு’னு அவர் சொன்னதுனால, 1998-ம் வருஷம் சொந்த ஊருக்கு வந்து விவசாயத்துல இறங்கினேன். ரசாயன இடுபொருள்கள் பயன்படுத்தி விவசாயம் செஞ்சேன். 2007-ம் வருஷம் பாண்டிச்சேரி ஆத்மா குழு வழிகாட்டுதல்ல, அரை ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்ச பிறகு நம்மாழ்வார் கருத்துகள் எனக்குள்ள மாற்றத்தை உண்டாக்கிச்சு. அடுத்தடுத்த வருஷங்கள்ல இயற்கை விவசாயச் சாகுபடி பரப்பை அதிகமாக்கினேன். ஆனா, நவீன ரக நெல்தான் சாகுபடி செஞ்சேன்.

 பாஸ்கர்
பாஸ்கர்

இதுக்கிடையில பசுமை விகடன்ல வெளியான பாரம்பர்ய நெல் ரகங்கள் பத்தின கட்டுரைகளால எனக்கு பாரம்பர்ய நெல் சாகுபடியில ஆர்வம் அதிகமானது. 2013-ம் வருஷம் ஆறு ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், கல்லுண்டைச் சம்பா சாகுபடி செஞ்சோம். தொடர்ந்து சாகுபடி பண்ணிகிட்டு இருக்கோம். எங்ககிட்ட சொந்தமா மாடு கிடையாது. அக்கம்பக்க விவசாயிகள்கிட்ட இருந்துதான் சாணம், கோமியம் வாங்கிக்கிறோம்.

பரஞ்சோதி சுவாமிகள், ‘மனித வாழ்வியல்ல விவசாயம் மிக முக்கியமானது’னு எனக்கு உணர்த்தினார்.

போன வருஷம் சோதனை முயற்சியா, ‘விதைப்போம்... அறுப்போம்’ங்கற கோட்பாட்டின்படி, மூணு ஏக்கர்ல மட்டும் எந்தவொரு இடுபொருள்களுமே கொடுக்காம மாப்பிள்ளைச் சம்பா, ஒட்டடையான், காட்டுயானம் ரகங்களைச் சாகுபடி செஞ்சோம். பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாததால மூலிகைப் பூச்சிவிரட்டிகூடத் தேவைப்படலை. ஏக்கருக்கு 24 மூட்டை மகசூல் கிடைச்சுது. `உரம் போடலைன்னா சரியா விளையாது’ங்கறது தவறான கருத்து. மண்ணை வளப்படுத்திட்டா எருகூடத் தேவையில்லை. நல்லா உழவு ஓட்டி, நிலத்தைத் தயார்ப்படுத்தினால் மட்டும் போதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடுபொருள்கள் கொடுத்து பராமரிச்ச நிலத்துல ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல் கிடைச்சுது. ரெண்டுக்கும் பெருசா வித்தியாசம் இல்லை. இந்த வருஷம் 10 ஏக்கர்ல ‘விதைப்போம்... அறுப்போம்’ முறையில எந்த இடுபொருள்களுமே கொடுக்காம ஒட்டடையான், காட்டுயானம் ரகங்களைச் சாகுபடி செஞ்சிருக்கோம். மீதியுள்ள அஞ்சு ஏக்கர்ல பாரம்பர்ய விதைநெல் உற்பத்திக்காக 111 விதமான நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சிருக்கோம். இது விதைநெல் உற்பத்திங்கறதுனால இயற்கை இடுபொருள்கள் கொடுத்துதான் சாகுபடி செய்யறோம்” என்று சொன்னவர், பாரம்பர்ய நெல் ரகங்கள் தேடல் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

 பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்
பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்

“தமிழ்நாட்ல எந்த ஊர்ல நெல் திருவிழா நடந்தாலும் போயிடுவேன். அரிதான விதைநெல் 50 கிராம், 100 கிராம் கிடைச்சாலும் வாங்கிடுவேன். ‘மெல்லப் பசியளிக்கும், நல்ல மணிச்சம்பா’னு அகத்தியர் குணபாடத்துல ஒரு குறிப்புப் பார்த்தேன். அதைச் சாப்பிட்டால் மெள்ள ஜீரணம் ஆகும். உடல்ல கொழுப்பு, சர்க்கரை சேராது. இது சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது. ஆனா, `அந்த மணிச்சம்பா எங்கேயுமே கிடைக்கலை’னு ஒரு பிரபல சித்த மருத்துவர், மேடைக்கு மேடை பேசிக்கிட்டு இருந்தார். அதனால் அதைத் தீவிரமாகத் தேடினேன். என் நண்பர் மூலமா செங்கல்பட்டுல விதைநெல் கிடைச்சுது. இது மாதிரி தேடி அலைஞ்சுதான் பிசினி, தீகார், வாழைப்பூ சம்பா, கம்பன் சம்பா, பொலி நெல், மரத்தொண்டி, செம்புளிச் சம்பா, கல்லுண்டைச் சம்பா, கலர் பாலைனு பல ரகங்களைச் சேகரிச்சேன்.

நம்ம பாரம்பர்ய நெல் ரகங்கள் மட்டுமில்லாம மணிப்பூர், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களோட பாரம்பர்ய நெல் ரகங்களையும் சேகரிச்சிருக்கேன். மொத்தம் 111 நெல் ரகங்களை அஞ்சு ஏக்கர்ல பயிர் செஞ்சிருக்கேன்” என்று சொன்ன பாஸ்கர், அதைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

‘‘ `இடுபொருள் கொடுக்கலைனா சரியா விளையாது’ங்கறது தவறான கருத்து. மண்ணை வளப்படுத்திட்டா, எருகூடத் தேவையில்லை. நான் எதுவுமே போடாம 24 மூட்டை மகசூல் எடுத்திருக்கேன்.’’
 பெயர்களுடன் அணிவகுக்கும் பாரம்பர்ய நெல் ரகங்கள்
பெயர்களுடன் அணிவகுக்கும் பாரம்பர்ய நெல் ரகங்கள்

“111 ரகங்களையும் அஞ்சு ஏக்கர்ல உள்ளடக்கியிருக்கேன். ஒவ்வொரு ரகமும் 2-5 சென்ட்ல பயிர் பண்ணியிருக்கோம். ஒரு ரகத்துக்கும் இன்னொரு ரகத்துக்கும் இடையில தலா மூணடி இடைவெளி விட்டிருக்கோம். இதனால் ஒவ்வொரு ரகத்தையுமே பக்கத்துல நடந்து போய் கண்காணிக்க வசதியா இருக்கு. ஒவ்வொரு ரகத்துக்கும் 100 கிராம் முதல் ஒரு கிலோ விதைநெல் வரை பயன்படுத்தியிருக்கோம். 111 ரகங்களையும் ஒரே நேரத்துல நாற்று உற்பத்தி செஞ்சு நடவு செய்யறது சிரமம். அதனால 70-120 நாள்கள் வயதுடைய நெல் ரகங்களை முதல்கட்டமாவும், 20 நாள்கள் கழித்து 125-145 நாள்கள் வயதுடைய மத்திய கால ரகங்களையும், அடுத்த 20 நாள்கள் கழித்து 150-180 நாள்கள் வயதுடைய நீண்டகால ரகங்களையும் நடவு செஞ்சோம்’’ என்றவர் நெல் பயிர்களைக் காட்டினார்.

நிறைவாகப் பேசியவர், ‘‘தரமான விதைநெல்லை உற்பத்தி செஞ்சு, பரவலாக்கணுங்கறதுதான் என்னோட நோக்கம். இதுல நான் வருமானத்தை எதிர்பார்க்கலை. பாரம்பர்ய விதைநெல்லை அதிக விலைக்குச் சிலர் விற்பனை செய்றாங்க. ஆனால் நான் உற்பத்தி செய்யக்கூடிய விதைநெல்லை ஒரு கிலோ 40-50 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இந்த அஞ்சு ஏக்கர்ல 111 நெல் ரகங்கள்ல இருந்து மொத்தம் 80-90 மூட்டை விதைநெல் தேறும். அதைப் பரவலாக்கப் போறேன்’’ என்றபடி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

பாஸ்கர்,

செல்போன்: 94435 73530.

சாகுபடி முறை!

ழவு ஓட்டி, ஏக்கருக்கு 15 கிலோ வீதம் தேஜா (தக்கைப் பூண்டு) தெளிக்க வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ய வேண்டும். 35-ம் நாள் பூப்பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது, தண்ணீர் கட்டி, ஒரு வாரம் கழித்து, நன்கு உழவு ஓட்டி நிலத்தைச் சமப்படுத்தி, நாற்று நடவு செய்ய வேண்டும். குத்துக்குக் குத்து 25 இடைவெளிவிட்டு தலா 3-5 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும்.

சாகுபடி முறை!
சாகுபடி முறை!

10-ம் நாள் பாசன நீரில் ஏக்கருக்கு 30 லிட்டர் வீதம் அமுதக்கரைசல் கலந்துவிட வேண்டும். 12-ம் நாள் 150 லிட்டர் தண்ணீரில் நான்கு லிட்டர் பஞ்சகவ்யா, 750 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் 10 நாள்கள் இடைவெளியில், மூன்று முறை இடுபொருள் கொடுக்க வேண்டும். பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி, நோய்த்தடுப்பு நடவடிக்கையாகவும் நடவிலிருந்து 15 மற்றும் 35-ம் நாள்களில், 150 லிட்டர் தண்ணீரில், ஐந்து லிட்டர் ஐந்திலைக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.

111 ரகங்கள்!

பாஸ்கர் சாகுபடி செய்துள்ள 111 விதமான நெல் ரகங்கள்:

1) ஒட்டடையான்

2) பனங்காட்டுக் குடைவாழை

3) வாடன் சம்பா

4) கிச்சிலிச் சம்பா

5) கொச்சின் சம்பா

6) கலியன் சம்பா

7) சிவப்பு கவுனி

8) கள்ளிமடையான்

9) காட்டுச்சம்பா

10) மாப்பிள்ளைச் சம்பா

11) சிறுகமணி சம்பா

12) சண்டிகார்

13) நீலம் சம்பா

14) மடுமுழுங்கி

15) சேலம் சன்னா

16) பாசுமுகி

17) காலா ஜீரா

18) கைவரச் சம்பா

19) சிங்கார்

20) சித்த சன்னா

21) பாசுமதி

22) வைகுண்டா

23) தீகார்

24) குடைவாழை

25) சன்ன சம்பா

26) முற்றின சம்பா

27) கருப்பு கவுனி

28) ராஜமன்னார்

29) மிளகுச் சம்பா

30) ரத்தசாலி

31) பிசினி

32) கொத்தமல்லிச் சம்பா

33) வாழைப்பூ சம்பா

34) பொலிநெல்

35) பால் குடைவாழை

36) காட்டுப்பொன்னி

37) ராஜயோகம்

38) யானைக் கொம்பன்

39) வெள்ளைக் குடைவாழை

40) கம்பன் சம்பா

41) ஆற்காடு கிச்சிலிச் சம்பா

42) ராம ஜடாலே

43) மரத்தொண்டி

44) செந்நெல்

45) பூங்கார்

46) கரிகஜனவள்ளி

47) வெள்ளைக்கார்

48) கருடன் சம்பா

49) செம்புளிச் சம்பா

50) காலா நமக்

51) குள்ளக்கார்

52) கறுப்பு நெல்

53) நவரா

54) இலுப்பைப்பூ சம்பா

55) தேங்காய்ப்பூ சம்பா

56) சூரக்குறுவை

57) கருங்குறுவை

58) வாலன் சம்பா

59) இரவைப்பாண்டி

60) ரசகடம்

61) மரநெல்

62) துளசி வாசனை சம்பா

63) சீரகச் சம்பா

64) காட்டுயானம்

65) தூயமல்லி

66) கல்லுண்டைச் சம்பா

67) கண்டசாலி

68) கந்தசாலா

69) சிவன்சம்பா

70) கலர்பாலை

71) சீரகச் சன்னா

72) ஒட்டடம்

73) அனந்தனூர் சன்னம்

74) பச்சை பெருமாள்

75) கருத்தகார்

76) கட்டச்சம்பா

77) கருப்பு சீரகச்சம்பா

78) ராமஹல்லி

79) குருவா

80) கேரள சுந்தரி

81) வெள்ளசீரா

82) பாராபாங்க்

83) காலாபத்தி பிளாக்

84) மாலாபத்தி

85) வடக்கன் சீரா

86) தோடா பெருநெல்லு

87) ஜீமாய்நாடு

88) ஜீரக சாலா

89) அரிமோடன்

90) ஆனமோடன்

91) பாளியாறல்

92) குரியாகயாமா

93) காலாச்சி பிட்

94) ரக்தாசுடி

95) ராணிசால்

96) நாசர்பாத்

97) புல்பாப்ரி

98) தங்கச் சம்பா

99) மஞ்சள் பொன்னி

100) அறுபதாம் குறுவை

101) கொடகுவிளையான்

102) துளுநாடான்

103) சன்ன நெல்

104) விஷ்ணுபோகம்

105) ஆத்தூர் கிச்சிலிச் சம்பா

106) சௌபாக்கி

107) ஆம்பிமோகர்

108) ஹரித்திகத்தி

109) எளாய்ச்சி

110) பாசுபதி

111) தில்கஸ்தூரி

நாற்று உற்பத்தி

நாற்று உற்பத்தி
நாற்று உற்பத்தி

நெல்லில் அதிக ரகங்களை விதைத்து, நாற்று தயார்செய்ய நினைப்பவர்கள், பிளாஸ்டிக் டிரேக்களில் நாற்று உற்பத்தி செய்யலாம். ஓரடி அகலம், இரண்டடி நீளம்கொண்ட பிளாஸ்டிக் டிரேயில் வளமான ஈரமண்ணைப் பரப்பி தலா 50 கிராம் எரு, மண்புழு உரம் கலந்து தூவ வேண்டும். இதில் 50-80 கிராம் விதைநெல் தூவலாம். இதுபோல் தேவைக்கேற்ப நூற்றுக்கணக்கான டிரேக்களில் நாற்று உற்பத்தி செய்யலாம். விதைநேர்த்தி செய்யப்பட்ட மூன்றாம் கொம்பு விதையைப் பரவலாகத் தூவி, மேலே தென்னங்கீற்றுகளைப் போட்டு மூடிவைக்க வேண்டும். மறுநாள் காலை, மாலை பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். மூன்று நாள்கள் வரை இதுபோல் தண்ணீர் தெளிக்க வேண்டும். அதன் பிறகு தென்னங்கீற்றுகளை நீக்கிவிட்டு, பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஏழாம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 12-ம் நாள் மீண்டும் அதேபோல் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். குறுகியகால நெல் ரக நாற்றுகள் 15-17 நாள்களிலும், மத்தியகால நெல் ரக நாற்றுகள் 18-20 நாள்களிலும், நீண்டகால நெல் ரக நாற்றுகள் 25-30 நாள்களிலும் நடவுக்குத் தயாராகும்.