கருத்துகளை மேடையில் அல்ல... கழனிகளில் விதைத்தவர்..! நம்மாழ்வார் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு | Let us know about Nammalvar on his anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (30/12/2017)

கடைசி தொடர்பு:10:57 (30/12/2017)

கருத்துகளை மேடையில் அல்ல... கழனிகளில் விதைத்தவர்..! நம்மாழ்வார் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

வர் ஒரு விவசாயப் பட்டதாரி... பட்டம் முடித்து 1960-ம் ஆண்டு பட்டம் முடித்த கையோடு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்கிறார். சில ஆண்டுகள் கழிகின்றன. வேலையில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து மேலாளரிடம் "வேலையை விட்டுப் போகிறேன்" என்கிறார். அந்தத் தவற்றுக்குக் காரணம், அப்போது விவசாயத்தில் நடந்துகொண்டிருந்த பசுமைப் புரட்சிதான். அதற்கு மேலாளர் "நீங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள்" என்று ஊக்கம் கொடுக்கிறார். மேலும் சில காலம் பணி தொடர்கிறது. இம்முறை மீண்டும் வேலை மீது வெறுப்பு வருகிறது. இப்போது அவர் யாரின் பதிலுக்காகவும் காத்திருக்காமல் வேலையை உதறித் தள்ளுகிறார். அவர்தான் நம்மாழ்வார் எனும் விவசாய விடிவெள்ளி. இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புஉணர்வைப் பரப்பும் அரிய பணிகளுக்காவும், பசுமைப் புரட்சியின் மோசமான விளைவையும் எடுத்துச் சொல்லும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஜப்பானிய சிந்தனையாளர் மசானபு புகோகாவின் சிந்தனையால் பெரிதும் நாட்டம் கொண்டவராக விளங்கினார். பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தைப் பற்றிய அவசியத்தை உணர்த்தியவர். இப்படி விவசாயத்திற்காகத் தொடங்கிய பயணம் அவரது இறுதி மூச்சு நிற்கும் வரை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவரிடமிருந்து விவசாய ஆலோசனைகளைப் பெற்ற விவசாயிகளும், அவருடன் பயணித்த இயற்கை முன்னோடி விவசாயிகளும் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 

நம்மாழ்வார் நினைவு தினம்

அவர்கள் செல்லும் இடமெல்லாம், நம்மாழ்வாருடைய தொழில்நுட்பங்களை,  தங்களுடைய அனுபவங்களைப் பிறருக்குப் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பின்னர், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டன. அதன் விளைவு கரும்புகை நிரம்பிய அறைக்குள் மாட்டிக்கொண்ட மனிதன்போல மண்ணிலிருந்த நுண்ணுயிர்கள் இறப்பைச் சந்தித்து மண் மலடாகியது. இத்தனைக்கும் காரணம் அதிக மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகளுக்கு ஆசை வார்த்தை காட்டியதுதான். ரசாயன உரங்களை உபயோகிக்க ஆரம்பித்த காலகட்டங்களில் எந்தப் பின்விளைவுகளும் பெரிதாக ஏற்படவில்லை. அதன் பின்னர், மண் ரசாயன உரங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு மாறியது. இதன் விளைவு இன்னும் அதிக அளவில் ரசாயன உரங்கள் கொட்டப்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணம், விவசாயிகளுக்கு லாபம் அதிக அளவில் கிடைக்கும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் முற்றிலுமாக விதைத்ததுதான். இரசாயன உரங்கள் வந்த பின்னர் பூச்சிகளும் அதிகமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தன. அதன் காரணமாக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகளும் தெளிக்கப்பட்டன. இதனால் தீமை செய்யும் பூச்சிகளுடன் சேர்ந்து நன்மை செய்யும் பூச்சிகளும் அழியத் தொடங்கின. மேற்கண்ட பாதிப்புகளை முன்னரே உணர்ந்திருந்த நம்மாழ்வார், இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அத்தனை அத்தியாயங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கி கிராமந்தோறும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் ரசாயன உரங்கள் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளையும், மண் மலடாவதைப் பற்றியும் பிரசாரம் செய்தார்.

நம்மாழ்வார்

கம்பெனி விதைகள், பல்கலைக்கழகங்களின் ஒட்டு விதைகளின் வருகையால் அழிவு நிலையில் இருந்த நம்முடைய பாரம்பர்ய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், கவுனி என நூற்றுக்கணக்கணக்கான விதை நெல் ரகங்களை மீட்டு மீண்டும் விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரைத்தான் சேரும். ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேம்புக்கான காப்புரிமையைப் பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர். இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250-க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார். இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினர் இவரின் பின்னால் நடந்தனர். இவர் காட்டிய வழியில் விவசாயம் செய்து வரக்கூடிய ஏராளமானோர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இயற்கை விவசாயம் வேரூன்றிட முக்கியமான காரணகர்த்தாவாக திகழ்ந்தவர். விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குப் புரியும்படி இருக்க வேண்டும் என்று கொள்கை உடையவர். அழகான கதை சொல்லி; அதன் முடிவிலும் விவசாயத்தைப் பற்றிய உண்மையை நெற்றிப் பொட்டில் அறையும்படி எடுத்துச் சொன்னவர். இவர் இல்லையெனில் இன்றைக்கு இயற்கை விவசாயம் மீண்டும் உயிர் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். இன்று நாம் உண்ணும் இயற்கை விவசாய உணவுகளில் நம்மாழ்வார் பெயர் மறைந்துள்ளது என்றாலும் அது மிகையல்ல.

இறுதி மூச்சுவரைக்கும் விவசாயத்துக்காக ஒருவர் வாழ்வை முழுவதுமாக அர்ப்பணிக்க முடியுமா?முடியும் என நிரூபித்தவர்தான் நம்மாழ்வார். வாழ்நாளெல்லாம் இயற்கைக்காகப் போராடிய, இயற்கையைக் காத்த, இயற்கை ஜோதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று. ஏதேனும் ஓர் இடத்தில் நம்மாழ்வார் நிச்சயம் உங்களையும் ஈர்த்திருப்பார். அவருடைய ஏதேனும் ஒரு கொள்கை உங்களையும் மாற்றியிருக்கும். அந்த நினைவுகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்களேன்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close