வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (04/01/2018)

கடைசி தொடர்பு:18:14 (04/01/2018)

நாணல் புல், கற்றாழைக்குருத்து, தாமிரபரணி நீர்... பத்தமடை பாயின் சக்சஸ் ஃபார்முலா!

பாய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பத்தமடை பாய்தான். தமிழ்நாட்டில் பரவலாக பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும் பத்தமடை பாய்க்கு மார்கெட்டில் இருக்கும் மவுசு தனிதான். திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை எனும் ஊரில் தாமிரபரணியின் கரையோரத்தில் வளரும் கோரைப்புற்களால் இது நெய்யப்படுகிறது. இந்தச் சிறிய ஊரில் தயாராகும் பத்தமடை பாயை ரஷ்ய ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும், விக்டோரியா மகாராணியும்கூட பாராட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கோ ஓர் ஊரில் தயாராகும் பத்தமடை பாய் பற்றி இவர்கள் புகழ பத்தமடை பாயின் சிறப்புகளே காரணம். இன்றைக்கு நாற்கரசாலை வந்த பின்பு பத்தமடையை கடக்கும் வாகனங்களுக்கு அவ்வூரின் சிறப்புகள் பற்றி அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்குக் காரணம், இந்த ஊரின் சிறப்பை சொல்லும் எந்த அமைப்பும் இப்போது இல்லை. நம்மில் பாய் என்பதே வெறும் கோரைப்புல்லில் தயாராகிறது என்பது மட்டுமே சிலருக்குத் தெரியும். அதற்கான சிரமங்கள் என்ன என்பது பற்றி அதிகமானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  

பத்தமடை பாய்

புல் இனத்தில் ஒரு வகை நாணல். நாணலானது தண்ணீர் அதிகம் இருக்கும் இடங்களில்தான் அதிகமாக வளரும். இதனால் இயற்கையாகவே நாணலுக்கு குளிர்ச்சித் தன்மை உண்டு. அந்த நாணலின் ஒருபகுதிதான் கோரைப்புல். இதிலிருந்துதான் பாய் தயாரிக்கப்படுகிறது. கோரைப்புல்லில் இருந்து தயாரிக்கும் பாய்களால் மட்டும்தான் உடலுக்கு நன்மை சேர்கிறதா என்றால் முழுமையாக இல்லை. இப்போது பாயை சாதாரண பருத்தி நூலில் நெய்கிறார்கள். முன்னர் செய்யும் பாய்களும் அதை நெய்யப் பயன்படுத்தும் நூலும் கூட மருத்துவ குணம் கொண்டதாகத்தான் இருந்தன. கற்றாழை குருத்துகளை எடுத்து இருபுறமும் கைப்பிடியுள்ள தரஸ்கு என்ற கருவி மற்றும் பலகையை வைத்து அதில் இருந்து 'மறல்' எடுப்பார்கள். அதை மூட்டையாகக் கட்டி கதிர் என்ற கருவி மூலம் நூல் தயாரிக்கப்படும். அந்த நூலைத்தான் கோரைப்புற்களை நெய்யப் பயன்படுத்துவர். இதன் மூலம் இரண்டுமே சேர்ந்து உடலுக்கு அதிக மருத்துவக்குணத்தைக் கொடுக்கிறது.  

பத்தமடை பாய் தயாரிப்பதற்கான கோரை தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து எடுத்து வரப்படுகிறது. பொதுவாகவே தாமிரபரணி தண்ணீருக்கு சில மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் இந்தத் தண்ணீர் பாயும் கோரையில் செய்யப்படும் பாய்களில் படுத்தால் நோய் தீருவதாக சொல்கிறார்கள். இதனால்தான் அந்தக் காலத்தில் பத்தமடையில் செய்யும் பாய்கள் பிரபலமானதாகச் சொல்லப்படுகிறது. பத்தமடை பாய் செய்யும் கோரைப்புற்களை மிக மெலிதாக வெட்டி எடுக்கப்படுகிறது. சாதாரணமாக நமது வீட்டில் இருக்கும் பாய்கள் தடிமனாக இருக்கும். பத்தமடை தயாரிப்பாளர்கள் கோரைகளை மிக மெல்லியதாக வெட்டி எடுப்பர். அதுதான் அந்த ஊரில் தயாராகும் பாயின் சிறப்பு. இந்தக் கோரைகளை எவ்வளவு மெல்லியதாக பிரித்து எடுக்கின்றனரோ, அதைப் பொறுத்து விலை அதிகமாக இருக்கும்.       

பத்தமடை பாய்

பத்தமடைப் பாயின் நெசவுமுறை மிகவும் அரியது. இதுதவிர அதிகமான நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். இதை நெய்யும் கைத்தொழிலும் கலையும் மிக நுட்பமான வடிவமைப்பு மற்றும் நெய்யும் முறை பத்தமடைக்கே உள்ள தனிச் சிறப்பு. பச்சையாக அறுத்த கோரைப்புல்லை உலர்த்திய பிறகு நனைய வைத்து வண்ணம் கொடுக்கப்படுகிறது. புல் அறுவடைப் பருவம் செப்டம்பர்/அக்டோபர் மற்றும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் அமையும். பச்சையாக அறுத்த புல்லை எப்போதும் ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்தப்படும். இல்லாவிடில் புல் கறுத்துப் போய்விடும். உலர்ந்த புல் மஞ்சள் கலந்த பசுமை நிறத்தை அடைந்ததும் பனை நீரில் கொதிக்க வைத்து மீண்டும் உலர்த்தப்படும். உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீரில் மூன்று முதல் ஏழு நாள்கள் வரை மூழ்கச் செய்ய வேண்டும். அப்போது மெல்லிய கோரையானது பருமனாகக் காட்சியளிக்கும். பின்னர் மீண்டும் உலர்த்தப்பட்டு நெசவுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கே மீண்டும் உலர்த்தி பின்னர் மெருகூட்டி நெசவு செய்யப்படும். பத்தமடையில் செய்யப்படும் பாய்களில் முரட்டு நெசவு பாய், நடுத்தர நெசவு பாய், நுண் நெசவு பாய் என மூன்று வகை உண்டு. அவ்வளவு பெருமைக்குரிய ஊரானது நீங்கள் நினைப்பதுபோல பிரமாண்டமான நெரிசல் உள்ள ஊர் கிடையாது. இந்த ஊரில் இருக்கும் சொசைட்டியில் பாய் தயாரிப்பவர்கள் பதிந்து வைத்துக்கொண்டால், ஆர்டர் கிடைக்கும்போது பாய் தயாரித்துக் கொடுக்கலாம். இன்று பெரும்பாலான வீடுகளில் பாய் என்பதே அரிதாகத்தான் காண வேண்டியிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்