வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/01/2018)

கடைசி தொடர்பு:15:00 (11/01/2018)

பாரம்பர்யத்தை பறைசாற்றிய கால்நடைத் திருவிழா... படையெடுத்த இளைஞர்கள்!

பாரம்பர்ய நெல் திருவிழா, சிறுதானிய உணவுத் திருவிழா வரிசையில் பாரம்பர்ய கால்நடைத் திருவிழாவும் தமிழகமெங்கும் அடிக்கடி கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுவரைக்கும் நகரங்களுக்கு வெளியேதான் இதுபோன்ற பாரம்பர்ய கண்காட்சிகள் நடைபெற்றுவந்தன. ஆனால், இந்தமுறை சென்னை மாநகரிலேயே நடத்தப்பட்டது செம்புலம் அமைப்பின் கால்நடை கண்காட்சி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தக் கண்காட்சியில் திரளான இளைஞர்கள் பங்கேற்று தங்கள் பாரம்பர்ய கால்நடை இனங்கள் குறித்து அறிந்துகொண்டனர். சென்னை, ஒ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது.

கால்நடை கண்காட்சி

இந்தத் திருவிழாவில் ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் புலிக்குளம், காங்கேயம் உள்ளிட்ட மாடுகள், உழவுக்குப் பயன்படும்  மணப்பாறை, மலை மாடுகள் எனத் தமிழ்நாட்டின் பூர்வீக மாடுகள் இடம் பெற்றிருந்தன. இதோடு, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல்களும் இடம் பெற்றிருந்தன. 

நாட்டு மாடுகள்

“இந்த சிட்டி லைஃப்ல தினமும் மெஷின் கூடவே இருக்க வேண்டியிருக்கு. அப்பார்ட்மென்ட் வாழ்க்கை, ரோபோ வேலைனு தினமும் கால்ல சக்கரம் கட்டி ஓடி ஓடி உழைக்கிறோம். இந்த கால்நடைகள பாக்கும்போது சின்ன வயசுல ஊர்ல மாடுகளோடு இருந்தது நினைவுக்கு வருது. ஏதோ நம்ம உறவுக்காரங்கள பாத்த சந்தோஷம் வருது” என்றார் குடும்பத்துடன் வந்திருந்த ஐ.டி ஊழியர். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு சிறுமி ஆட்டுக்குட்டியை  ஆர்வத்தோடு கைகளில் தூக்கி கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தார். அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தபோது, “எனக்கு பெட் அனிமல்ஸ்னா (செல்லப் பிராணிகள்) ரொம்ப புடிக்கும். ஆனா, எங்க அப்பார்ட்மென்ட்ல செல்லப் பிராணிகள வளர்க்க அனுமதி இல்ல. இந்த ஆட்டுக்குட்டியைக் கொடுத்தா எங்க வீட்டுக்கு கூட்டிட்டுபோக ஆசையா இருக்கு” என்றார் ஆட்டுக்குட்டியைத் தடவியவாறு.

கால்நடை கண்காட்சி

இதேபோன்று மக்கள் அனைவரும் காளைகளுக்கு அருகே நின்றுகொண்டு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான உறியடி, சிலம்பம் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.  தெருக்கூத்து கலைஞர்கள், கரகாட்டக் கலைஞர்கள் ஆஜானுபாகுவான உடைகளில் திருவிழாவில் வலம் வந்தனர். மக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியில் சிறுவர் சிறுமியர் அமர்ந்துகொண்டு மைதானத்தைச் சுற்றி வந்தனர். பல வகையான பாரம்பர்ய உணவுகள், இயற்கை காய்கறிகள், சிறுதானியங்கள் அடங்கிய கடைகளும் இத்திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் குடும்பத்தினரோடு வந்திருந்தனர். இதனால் குழந்தைகளும் அதிகளவில் காணப்பட்டனர். கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள், கால்நடை கண்காட்சி என மொத்த அரங்குகளும் நம் பாரம்பர்யத்தை பிரதிபலித்தன. இது இளைஞர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.


டிரெண்டிங் @ விகடன்