வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (12/01/2018)

கடைசி தொடர்பு:15:01 (16/01/2018)

`எங்க...தொடுங்க பார்ப்போம்..!' ஜல்லிக்கட்டில் கெத்துக்காட்டும் காரி காளை!

'ஜல்லிக்கட்டு' தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகளில் முதன்மையானது. மிக முக்கியமானதும் கூட. கடந்த 2014-ம் வருடம் 7-ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 2015 மற்றும் 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவர்களும், பொதுமக்களும் எழுப்பிய குரலால் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ள அனுமதியளித்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்க மேற்கொண்ட போராட்டம் உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்தது என்றாலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அவசரகதியில் நடத்தப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு பொங்கலையொட்டி நடக்கப்போகும் ஜல்லிக்கட்டுக்கு எந்தத் தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து காளைகளைத் தயார்படுத்தி வருகிறார்கள், காளைப் பிரியர்கள். காளைப் பிரியர்களுக்கு எல்லாம் ஒரே நோக்கம்தான், தன் காளையின் பெயரை அந்தக் களம் முழுவதும் சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான். 

காரி காளை

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்ட காளைகளில் முக்கிய இடம் மதுரையைச் சேர்ந்த அப்பு காளைக்கு உண்டு. இந்தக் காளை பெயர் சொன்னவுடன் மாடுபிடி கூட்டம் விலகி ஓடும். இந்தக் காளையை 'ஜல்லிக்கட்டின் சத்ரியன்', 'ஆடுகளத்தின் ஆட்ட நாயகன்' என வர்ணனையாளர்கள் வர்ணிப்பது வழக்கம். அப்புவின் இறப்பிற்குப் பின்னர் களத்தில் மற்ற காளைகளின் ஆட்டம் சுவாரஸ்மாக இல்லை. அடுத்த அப்புவின் வருகைக்காக அனைவரும் காத்திருந்த நேரம் கம்பீரமாக வந்து நின்றது அந்தக் காளை. அதற்கு வர்ணனையாளர்கள் வர்ணித்த பெயர்'அடுத்த அப்பு'. அக்காளையின் நிஜப்பெயர் 'காரி'. அதன் சொந்தக்காரர் ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் ராஜசேகரன். முந்தைய அப்பு காளைக்கும் அவர்தான் சொந்தக்காரர். காரியை அப்பு போலவே தயார் செய்தார். காரி காளையும் அப்பு போலவே தீவிரமாக பயிற்சி எடுத்தது. அந்தக் காளை கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே அனைவரையும் கவனிக்க வைத்தது. அதன் பின்னர் காரி களத்தில் இறங்கினாலே மாடுபிடி வீரர்கள் ஒதுங்கி வழிவிடுவர். அந்த அளவுக்குக் காரியின் மீது ஒருவித பயம் இருந்தது என்றுகூடச் சொல்லலாம். அதையும் மீறி காரியைப் பிடிக்க நினைப்பவர்கள் அந்தரத்தில் பறப்பது வேறு கதை. 

 

 

வாடிவாசலில் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் பத்தடி தூரம் வரைக்கும் மெதுவாக நடைபோடும். அதன் பின்னர் நான்குபுறமும் சுற்றிப்பார்க்கும். அது பார்க்கும் பார்வை 'எங்க... வந்து தொடு பார்ப்போம்' என்று சொல்வதைப் போல இருக்கும். ஆனால் பக்கத்தில் கூட யாரும் வரமாட்டார்கள். ஆறடி உயரத்தில் அஜானுபாகுவான உடலமைப்புடன் காரி காட்சியளிக்கும். சாதாரண காளைகளுக்கு உள்ள திமில், சிறிய கொம்பு எனப் பார்க்க சாதாரண காளையைப் போலவே தோற்றமளிக்கும். கட்டவிழ்க்கப்பட்டவுடன் வாசல் அருகில் சுற்றிலும் ஒரு வட்டமடிப்பது காரியின் வாடிக்கை. காரி, ஓடி வரும்போது காட்டெருமை நம்மை நோக்கி ஓடி வருவது போன்ற கிலி ஏற்படும். வாடியில் 'குத்து வாங்குறவன் மட்டும் முன்னால வா' என்று சொல்வது இன்று வரை காரி களத்தில் இறங்கும்போது உச்சரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்