100 ஏக்கர் பண்ணை... எப்போதும் 33 லட்சம் லிட்டர் நீரிருக்கும் குட்டை... திருச்சியில் ஒரு பிக்னிக் ஸ்பாட்!

விவசாயப் பண்ணை

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார், விவசாயி நவீன். இவர் விவசாயம் செய்யும் நிலம் மட்டும் 100 ஏக்கர் பரப்பளவு இருக்கிறது. அங்கே காய்கறிகள், கோழி, மீன், கால்நடை என ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு விருப்பப்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் அழைத்துச் செல்வது வாடிக்கை. அதேபோல நாம் இவரது பண்ணைக்குச் சென்றபோதும் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களை அழைத்து வந்திருந்தது. நாமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பண்ணையை அலசினோம். 

அந்தப் பண்ணையே பள்ளி மைதானம்போல் பள்ளி மாணவர்களால் நிரம்பியிருந்தது. "இந்த நாய் பெயர்தான் லேப்ரடார்" என ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் அந்த நாயைப் போட்டிபோட்டுத் தூக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பண்ணை உரிமையாளர் நவீன் பள்ளி மாணவர்களிடம் நாய் பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். நம்மை  அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினோம். 

"என்னோட பண்ணையைச் சுற்றிப் பார்க்க  இந்த மாணவர்கள் வந்திருக்காங்க. இதுபோல பல பள்ளிகளில் இருந்தும் அதிகமான மாணவர்கள் வருவாங்க. அவங்க வந்தா இங்கே சூழ்நிலையே வேற மாதிரி இருக்கும். என் சின்ன வயசுல இருந்தே விவசாயம் சார்ந்த விஷயங்கள் மேல ஆர்வம் அதிகம். அதுக்குக் காரணம் என்னோட தாத்தா. அவர்கிட்ட இருந்துதான் விவசாயம் பற்றி அதிகமா கத்துக்கிட்டேன். சின்ன வயசுல ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருக்கும்போது கொஞ்ச நாள் லீவு கிடைச்சாலும் தாத்தாகிட்ட போயிடுவேன். என் தாத்தாவோட சேர்ந்து ஆடு, மாடு, கோழினு கவனிச்சுக்குவேன். இப்படித்தான் எனக்குள்ள விவசாய ஆர்வம் ஆழமா வேர்விட்டது. அதோட முதல் பரிசோதனையா வீட்டுல மாடித்தோட்டம் அமைச்சேன். எம்.ஃபில் பயோடெக்னாலஜி படிப்பு முடிஞ்ச பிறகு, 2005-ல எங்க அப்பாவோட நிலத்துல விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நெல், மக்காச்சோளம், சூரியகாந்தினு சாகுபடி செஞ்சேன். அந்த நேரத்துல போதுமான நீர் வசதி இல்லை. அதனால ஆரம்பத்துல நாலு தடவை என் நிலத்திலேயே போர்வெல் அமைச்சேன். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரலை. அப்புறம் இறுதிக்கட்ட சோதனையா ஒரு போர்வெல் அமைச்சேன். அங்கதான் அதிகமான தண்ணீர் கிடைச்சது. அதுதான் எனக்கு விவசாயத்துமேல நம்பிக்கை கொடுத்துச்சுனுகூட சொல்லலாம். இதுபோகத் தண்ணீரை சேமிச்சுப் பயன்படுத்துறதுக்காக 15 இலட்சம் ரூபாய் செலவுல 140 அடி நீளம் 70 அடி அகலம் 12 அடி ஆழம் அளவுகள்ல பிரமாண்டமான பண்ணைக்குட்டை அமைச்சேன். இந்த குட்டையில எப்பவுமே 33 இலட்சம் லிட்டர் தண்ணீர் இருந்துக்கிட்டே இருக்கும்" என்றவர் தொடர்ந்தார்.

இயற்கை பண்ணை

 "திருச்சி மாவட்டத்துல வேற எங்குமே இல்லாத வகையில மாதுளை, கொய்யாச் செடிகளை அடர் நடவு முறையில நட்டு, சொட்டு நீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன். மழை இல்லாத காலத்துலகூட பண்ணைக்குட்டையில் தண்ணீர் இருக்கும். அங்க இருக்கிற தண்ணீரை வச்சுக்கிட்டு 5 மாசம் கூட பாசனம் செய்வேன். பசுமை குடில் அமைச்சு நாற்று உற்பத்தி, மண்புழு உரம், பஞ்சகவ்யா மூலம் இயற்கை உரத்தை உற்பத்தி செஞ்சு தெளிப்பு நீர் பாசனம் மூலம் வயலுக்கு தினமும் பயன்படுத்துவேன். பண்ணையில கிளிகள், நாய்கள், மாடுகள், கழுதைகள், ஆடுகள், கோழிகள், புறாக்கள்னு வளர்த்துக்கிட்டு வர்றேன். இந்தச் செல்லப்பிராணிகளோட வளர்ப்பையும், தோட்டத்தையும் பார்க்க தினமும் ஆட்கள் வந்துக்கிட்டே இருப்பாங்க. இதுமாதிரி இயற்கையான சூழலுடன் இருக்கும் இடத்தை நிறைய பேர் விரும்பறதால, இந்தப் பண்ணையில ஒருநாள் தங்க ஒரு ஆளுக்கு 200 ரூபாய் வசூலிக்கிறேன். அவங்களுக்கு மரவீடு, கிராமத்து உணவு, வயல்கள்ல சேற்றுக்குளியல், செல்லப்பிராணிகள் என தரமான கிராமத்து அனுபவங்களை கொடுக்கிறேன். விவசாயிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இலவசம்தான். விவசாய நிலத்துக்குள்ள வர்றதுக்கு காசு வாங்குறது இதுதான் முதல் தடவை. 2011-ம் ஆண்டு குளோபல் நேச்சர் பவுண்டேஷன் அமைப்பைத் தொடங்கி சிட்டுக்குருவி வளர்ப்பு, மரக்கன்றுகள் வளர்ப்பு, இயற்கை பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புனு பல விஷயங்களை செய்துக்கிட்டு வர்றேன்" என்றவர் பாம்புகள் பிடிப்பதிலும் கில்லாடி. இவரது கிராமங்களைச் சுற்றி இருக்கும் மக்கள் பாம்பு வந்தால் முதலில் அழைப்பதும் இவரைத்தான். இதுவரை நூற்றுக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார். இதுதவிர, கிணற்றுக்குள் விழும் ஆடுகள், மாடுகளையும் மீட்க முதலில் அழைப்பதும் நவீனைத்தான். 

இயற்கை விவசாயம்

பட்டதாரியான நவீன் விவசாயியாக மாறியது மட்டுமல்லாமல் அதை கமர்ஷியலாக செய்து மாணவர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!