வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (10/03/2018)

கடைசி தொடர்பு:19:09 (10/03/2018)

நிலம்.. நீர்.. நீதி... அடுத்த தலைமுறைக்கு தண்ணீரைக் கண்ணில் காட்ட முடியுமா? #RestoreChennai

நீரின் முக்கியத்துவம் குறித்த ஒருநாள் மாநாடு அண்மையில் பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இந்துக் கல்லூரியின் சமூகப்பணி துறை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் மூத்த பொறியாளர்கள், வானிலை இயக்குநர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிலம்.. நீர்.. நீதி...

இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், “மழை எப்போதும் போலத்தான் பெய்கிறது. ஆனால், அதை முறையாக சேமித்துப் பயன்படுத்துவது நம் கைகளில்தான் இருக்கிறது. பெய்கிற மழையைப் பொறுத்துப் பயிர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நெல் மட்டும்தான் விளைவிப்போம் என்று விவசாயிகள் சொல்கிறார்கள். நெல்லுக்குப் பதிலாக பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை விதைத்தால், தண்ணீரின் பயன்பாடு குறையும். பொதுவாக மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் நெல் சாகுபடியை மேற்கொள்ளலாம். இஸ்ரேல் நாட்டில் தெளிப்புநீர்ப் பாசனம் (Sprinkler Irrigation), சொட்டுநீர்ப் பாசனம் (Drip Irrigation) போன்ற முறைகளைப் பயன்படுத்தி நீரைச் சேமிக்கின்றனர். பாலைவன நிலமாக இருந்தாலும் அங்குக் காய்கறி விளைச்சல் பெருக, இஸ்ரேல் நாடு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதைபோன்றே இந்தியாவும் குறைந்த அளவில் நீரை உபயோகித்து, அதிக விளைச்சல் எடுக்கும் முறைக்கு மாற வேண்டும்” என்றார்.

முன்னாள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரப்பன் பேசும்போது, “ஒவ்வொரு வீட்டுக்கும் நீரைப் பற்றிய விழிப்புஉணர்வைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக வீட்டில் காலையில் பல் தேய்க்கும்போது வாஷ்பேசினில் தண்ணீரைத் திறந்து விட்டுவிட்டுக் கொண்டே பல் தேய்த்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். இதேப்போன்று தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டே பாத்திரங்களைக் கழுவும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. இதுபோன்று பல விஷயங்களில் தண்ணீர் வீணாகிறது. இதன் முக்கியத்துவம் நமக்கும் சரி, அடுத்து வரப்போகிற சந்ததிகளுக்கும் சரி தெரிவதில்லை. வருங்காலங்களில் நீர் பற்றாக்குறையை அதிகம் சந்திக்கப்போகும் நம்முடைய சந்ததிகளுக்கு, தண்ணீர் சிக்கனம் குறித்தான வழிகாட்டுதலைக் வழங்க வேண்டும்” என்றார்.

நீரின் முக்கியத்துவம் குறித்த ஒருநாள் மாநாடு

கிராமலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் தாமோதரன் பேசும்போது, “நீர்நிலைகளைப் பாதுகாத்தால் மட்டுமே அடுத்து வருகிற சந்ததிக்கு நாம் நீரைக் கண்ணில் காட்டமுடியும். இந்தியாவின் மிக முக்கியமான பிரச்னை என்னவென்றால், நீர் ஆதாரங்கள் குறைந்து கொண்டு வருவதுதான். சென்னையில் நீர் ஆதாரங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியதால்தான் மழைக்காலத்தில் நீர் தேங்க ஆரம்பித்தது. மக்கள் எல்லோரும் 'என் வீட்டில் தண்ணீர் வந்துவிட்டது' என்று கூறினார்கள். உண்மையில் நீர் இருக்க வேண்டிய இடத்தில்தான் வீடு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். 

இதையெடுத்து சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை சார்பில் பேசிய ஜெயந்த், "வெறுமனே ஆறுகளைத் தூர்வாருதல் என்பதைத் தவிர்த்து, அங்கே வாழும் மற்ற உயிரினங்களுக்கும் வாழ்வளிக்கும் வகையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் கூவம் ஆற்றைக் சீரமைக்கக் களத்தில் இறங்கியிருக்கிறோம்" என்றார்.

பசுமை விகடனின் ஆசிரியர் ச.அறிவழகன் அனுப்பியிருந்த ஆடியோ அங்கே ஒலிபரப்பட்டது. அதில் அவர், “பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மட்டும் இங்கே நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. நம் அரசாங்கமே பல ஆக்கிரமிப்புகள் செய்து, கட்டடங்களைக் கட்டியுள்ளது. சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதுதான். விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடியிருப்புகளும் ஆக்கிரமிப்புகள்தான். இவை எல்லாம் ஆக்கிரமிப்பு என்று கூறி மதுரை உயர் நீதிமன்றத்தை நாடினால், அந்த நீதிமன்றமே ஆக்கிரமிக்கப்பட்டுதான் கட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்தவொரு ஏரிக்கும் தெளிவான வரைபடம் இல்லை. ஏன்? சென்னை கூவம் நதிக்கே வரைபடத்தை, இப்போதுதான் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி எதற்கும் முறையான வரைபடங்கள் இல்லாததால்தான் ஆக்கிரமிப்புகள் அதிகமா நிகழ்கிறது” என்றார்.

நீரின் முக்கியத்துவம் குறித்த ஒருநாள் மாநாடு

இறுதியாக, ஆனந்த விகடன் குழுமம் முன்னெடுத்து வரும் சமூகப் பணிகள் குறித்து வாசன் அறக்கட்டளையின் இணை திட்டப் பணியாளர் மணிகண்டன் பேசியபோது, "2015-ம் ஆண்டின் பெருமழைக்குப் பிறகு ஆனந்த விகடன் முன்னெடுத்த 'நிலம் நீர் நீதி!' திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள சாலமங்கலம் ஏரி, நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி ஆகியவை சீரமைக்கப்பட்டன. இந்த ஏரிகளில் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், நீர்வழிப்பாதைகளைச் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதோடு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. தொடர்ந்து அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம். பொதுவாக ஏரி சீரமைத்தலில், ஏரிக்கு நீரைக் கொண்டுவரும் பாதைகளைச் சீரமைப்பது அரிதானது. ஆனால், ஆனந்த விகடனின் அறத் திட்டத்தில் அதை முழுமையாகச் செய்திருக்கிறோம். ஏரிகளைச் சீரமைத்து அந்தந்த கிராம மக்களிடமே ஒப்படைத்துள்ளோம். வாசகர்களின் நிதி பங்களிப்போடு இந்தப் பணிகள் சாத்தியமாக்கப்பட்டுள்ளன. இதேபோல கல்வி மேம்பாடு, பள்ளிக்கூடங்கள் போன்ற பணிகளிலும் ஆனந்த விகடன் தன்னை இணைத்துக் கொண்டு சேவையாற்றி வருகிறது" என்றார். ஆனந்தவிகடன் நீர்நிலை சார்ந்த பணிகளுக்குப் பாராட்டும், வந்திருந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தது இந்துக் கல்லூரியின் சமூக பணித்துறை.


டிரெண்டிங் @ விகடன்