இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி... கூடவே இயற்கை விவசாயப் பயிற்சியும்... கலக்கும் குருகுலம்!

இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி... கூடவே இயற்கை விவசாயப் பயிற்சியும்... கலக்கும் குருகுலம்!

கரங்களில் இருக்கும் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டும்தான் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்றுதான் பலரும் நம்பிப் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். பல லட்சம் மாணவர்கள் அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதி வந்தாலும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்வாகின்றனர். அதனால், மீதமுள்ள மாணவர்கள் சொந்த ஊர் சென்று விடுகின்றனர். அதற்குப் பின்னர்தான் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள பழகுகின்றனர். அதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், கிராமப்புறத்தில் குருகுலக் கல்வி முறையில் பயிற்சி மையத்தை அமைத்து அவர்களுக்குக் குறைந்த செலவில் அரசுத் தேர்வுக்குப் பயிற்சியும், இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும் வழங்கி வருகிறது, `சபர்மதி ஆப் சவூத்' என்ற குருகுலம். அரசுப் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்தால் போதும். ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பஸ் டிப்போவிற்கு எதிரில் உள்ள பெரிய வேளிய நல்லூர் சாலையில் இருக்கிறது, `சபர்மதி ஆஃப் சவுத்’ பயிற்சி மையம். 

விவசாயம் பயிற்றுவிக்கும் குருகுலம்

இந்த மையத்தில் பயிலும் மாணவர்கள், தங்களால் முடிந்த பணத்தை நிதியாக உண்டியலில் செலுத்தலாம். அவர்களுக்குத் தங்கும் இடம் மற்றும் உணவுக்காக மட்டும் மாதம் 2,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த 2,000 ரூபாயையும், சபர்மதி குருகுலத்துக்குச்  சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தும், சுற்றியுள்ள மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுத்தும் கழித்துக் கொள்ளலாம். புதுவிதமான யுத்திகளைக் கையாளும் மையத்தின் விவசாயப் பொறுப்பாளர், ராஜவேந்தனைச் சந்தித்துப் பேசினேன். 

``இந்த மையம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிடுச்சு. என் அண்ணன் குணசேகரன் கடந்த வருடம் இந்தக் குருகுலத்தை ஆரம்பிச்சார். மொத்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. பின்தங்கின சூழல்ல இருந்து வர்ற மாணவர்கள் எங்க மையத்துல தங்கிப் படிக்குறதுக்கு அடிப்படை வசதிகளை முறையா செய்து கொடுத்திருக்கோம். யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., வங்கித் தேர்வு, நீட் தேர்வு எனப் பலவகைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் இலவசமா கொடுக்கிறோம். எங்களோட மையத்துல தங்கிப் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்குறவங்க சாப்பாட்டுக்கும், தங்கும் இடத்துக்கும் மாசம் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கணும். மற்றபடியான எல்லாப் பயிற்சிகளும் இலவசம்தான். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகத்தையும் இம்மையத்துல அமைச்சிருக்கோம்.

இந்த வசதிகளை மாணவர்கள் முழுக்க முழுக்க இலவசமா பயன்படுத்திக்கிட்டு வர்றாங்க. சாப்பாட்டுக்கும், தங்குற இடத்துக்கும் குறைந்தபட்ச கட்டணத்தையும் கட்ட வசதி இல்லாதவங்களுக்கு மாற்று வழி இருக்கு. ஒண்ணு, இயற்கை விவசாயம் பார்க்கணும், இரண்டாவது சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் போய் குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்கணும். இந்த மையத்துல இருக்குற ஒவ்வொரு குடிலுக்கும் காவிரி, நொய்யல்னு நதிகள் பெயர்களைத்தான் வெச்சிருக்கோம். இங்க இருக்குற குடில்கள் எல்லாமே பனை ஓலை வைச்சு, செம்மண் உபயோகப்படுத்திக் கட்டியிருக்கோம். இங்க மொத்தம் 60 மாணவர்கள் இருக்காங்க. அவங்களுக்குத் தேவையான பயிற்சி வகுப்புகள் எடுத்துக்கிட்டிருக்கோம். பயிற்சி நேரம் போக மீத நேரம் மாணவர்கள் இங்க இருக்குற நிலத்துல இயற்கை விவசாயத்துல ஈடுபடுவாங்க. நெல் பயிர் செஞ்சா விதைக்குறதுக்கு மட்டும்தான் வேலையாட்களைக் கூப்பிடுவோம். மீத வேலையெல்லாம் மாணவர்கள்தான் பார்க்குறாங்க. நாங்க இங்க வேலை செய்யணும்னு யாரையும் கட்டாயப்படுத்தலை. அவங்களுக்குப் பிடிச்சுதான் வேலை செய்யுறாங்க. அரசுத் தேர்வுக்குப் படிக்கும்போதே அவங்களுக்கு இயற்கை விவசாய அனுபவமும் சேர்ந்து கிடைக்குது. அரசுத் தேர்வுக்குப் படிக்கிற எல்லோரும் வேலை கிடைச்சுப் போறது இல்லை. அவங்களும் அரசு வேலை இல்லைனா, விவசாய வேலைனு தன்னோட பொருளாதாரத்தை வலுவா கட்டமைக்க முடியும். 

குருகுலம்

இயற்கை உணவுதான் எப்பவும்:

காலை வேளை முழுக்க கஞ்சி, மூணு வேளையும் மூலிகைத் தேநீர், மதியம், இரவுனு இயற்கையில விளைஞ்ச உணவைத்தான் கொடுக்கிறோம். சமைக்கப் பயன்படுத்துற எண்ணெய்க்காக உள்ளேயே மரச்செக்கு வெச்சு அதில இருந்து கிடைக்குற எண்ணெயைத்தான் பயன்படுத்திட்டு வர்றோம். இதுபோக மரச்செக்குல இருந்து எண்ணெய்யை எடுக்க வாரம் இரண்டு மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். குருகுலத்துல வளர்க்குற ஒவ்வொரு மரங்களுக்கும், ஒவ்வொருத்தரை நியமிச்சிருக்கோம். பத்திரமா பாத்துக்கிறது அவங்களோட வேலைதான். பண்ணையில 12 மாடுகள் இருக்கு. உம்பளாச்சேரி, சூணாம்பேடுனு எல்லாமே நாட்டு வகைகள்தாம். வாத்துகளையும், கோழிகளையும் வளர்த்துக்கிட்டு வர்றோம். அதையும் வளர்த்து, பராமரிக்குறதும் பயிற்சி மாணவர்கள்தாம்" என்றவர் மாணவர்கள் வளர்த்திருந்த நெல் வயலைக் காட்டி பேசினார். 

``2013-ம் ஆண்டில் வானகத்தில் எட்டு மாசம் பயிற்சி எடுத்தேன். அப்புறம் என்னோட கிராமத்துல வந்து விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்புறம் என் அண்ணன் இந்த மையம் யோசனை பத்தி சொன்னதுக்கு அப்புறமா, இங்க வந்து பயிற்சி கொடுத்திட்டிருக்கேன். எனக்குத் தெரிஞ்ச இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்குறதுதான் என்னோட வேலை. இங்க நெல்லுக்கு அமிர்தகரைசல், பஞ்சகவ்யானு எல்லாத்தையும் தயார் செஞ்சு கொடுக்குறது, களை எடுக்குறது, அறுவடைங்குறது எல்லாமே மாணவர்கள்தாம். இதனால மாணவர்களுக்குப் பயிற்சி பாதிக்கப்படும்னு நினைக்கக் கூடாது. எல்லாப் பயிற்சிகளும் இரண்டு மணிநேரத்துல முடிஞ்சிடும். மாணவர்களும் அதிகமான ஆர்வத்தோட கலந்துக்குறாங்க. 

வயலில் மாணவர்கள்

40 சென்ட்ல மேட்டுப்பாத்தியும், 5 சென்ட்ல வட்டப்பாத்தியும், 1 ஏக்கர்ல நிலக்கடலையும் விதைச்சிருக்கேன். நிலக்கடலை இன்னும் 20 நாள்ல பறிப்புக்கு வந்திடும். இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பை மாணவர்களே நேரடியா செய்யுறாங்க. அதனால எதிர்காலத்துல அவங்க வேலை கிடைச்சுப் போனாலும், விவசாயமும் செய்யணும்னு சொல்றாங்க. அப்படி வேலை கிடைக்கலைனாலும் எங்களுக்கு இயற்கை விவசாயம் வாழ முடியும்ங்குற நம்பிக்கையைக் கொடுத்துருக்கு. விவசாயம்ங்குறது வெறும் எழுதிப்பார்க்குற விஷயம் இல்லை. அது ஓர் அனுபவம், அதை இளைஞர்கள் இந்த வயசுல சரியா கத்துக்கிட்டா அவங்களோட வாழ்க்கை நல்லா இருக்கும். இதுபோக ஒருங்கிணைந்த விவசாயப் பயிற்சிகளும் அதிகமா நடத்திக்கிட்டு வர்றோம். அந்தப் பயிற்சியை மொத்தமா இரண்டு நாள்கள் நடத்துவோம். அப்போ எல்லாமே நேரடியான களப்பயிற்சியாகத்தான் கொடுப்போம். இப்போ அதிகமான மாணவர்கள் பயிற்சிக்கு வர ஆரம்பிச்சிருக்காங்க. வெறும் படிப்பை மட்டும் கத்துக்கிட்டுப் போயிடாம, ஒரு தொழிலையும் முழுசா கத்துக்கிட்டுப் போற மாதிரி இருக்கணும்" என்கிறார், ராஜவேந்தன்.

நம்மாழ்வார் சொன்ன மாதிரி தனக்கான உணவைத் தானே தயாரிக்க வேண்டும் என்ற கொள்கையைப் பரப்பும் ராஜவேந்தனுக்கும், குணசேகரனுக்கும் வாழ்த்துகள்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!