வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (08/05/2018)

கடைசி தொடர்பு:15:53 (08/05/2018)

தனி ஒருவனாக ஒரு காட்டையே உருவாக்கிப் பாதுகாக்கும் புதுக்கோட்டை பெரியவர்!

தனி ஒருவனாக ஒரு காட்டையே உருவாக்கிப் பாதுகாக்கும் புதுக்கோட்டை பெரியவர்!


'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்கிறது அரசு. அந்த ஒரு மரத்தை நட்டு, அதைப் பராமரித்து பெரிதாக வளர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது நமக்கு. ஆனால், இங்கு பல வருடங்களாக சத்தமேயில்லாமல் ஒரு காட்டையே பராமரித்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டையில் உள்ள திருவரங்குளத்தில் இருக்கின்றது இவர் உருவாக்கியிருக்கும்  ‘சுகவனம்’ காடு.

நாம் அந்தக் காட்டில் நுழைந்தபோது, மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. அச்சு அசலாக இயற்கையாகவே தோன்றிய வனம்போலவே அந்தக் காடு காட்சியளித்தது. மனிதனால் உருவாக்கிய காடு இது என மனம் நம்புவதற்கு வெகு நேரமானது. இந்தக் காட்டின் பெயர் சுகவனம். இந்த சுகவனத்தில்  நிறைய அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்கள் பரந்து காணப்படுகின்றன. இத்தகைய அரிய வகை மரங்களைப் பார்வையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வியந்து செல்கின்றனர். நமக்கும் அந்த வியப்பு ஏற்படவே, இந்த சுகவனத்தை பராமரித்து வரும் மரியசெல்வத்திடம் பேசினோம். 

சுகவனம் காடு

"1990-ம் ஆண்டு உணவு உற்பத்திக்கான செயல்திட்ட (Action For Food Production) அமைப்பிலிருந்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் விவசாய பண்ணை என்னும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறேன். அப்படி, நீர் வடிபகுதி திட்டத்தைச் செயலாக்கும் பொறுப்பை எங்கள் மக்கள் விவசாயப் பண்ணை அமைப்பிடம் ஒப்படைத்தனர். தமிழகம் மற்றும் இன்னும் சில மாநிலங்கள் சேர்த்து மொத்தம் பத்து  அமைப்புகளுக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. இதற்காக, புதுக்கோட்டையில் முந்நூறு ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்தோம். அந்த நிலத்தில் மழைநீர் சேகரிப்பு, மண் அரிப்பைத் தடுத்தல் உள்ளிட்ட பல திட்டங்களைச் செய்து காட்டினோம். வெறும் முள்ளுக்காடாக இருந்தது. நாங்கள் அந்த முள்ளுக்காட்டை அழித்து விட்டு மரங்களை நட்டோம். இதுபோ‌ன்ற முயற்சிகளை விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தினோம். அப்பொழுது, நாங்கள் செயல்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்ட அமைப்புதான் தமிழக அரசு அமல்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கான முன்மாதிரியாகும்.

அந்த முந்நூறு ஏக்கரில் விவசாயிகள் மற்றும் வனத்துறையின் நிலமும் எங்களுக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கரும் இருந்தது. அந்த ஒன்பது ஏக்கரும் எனக்குச் சொந்தமானது கிடையாது. இது ஒரு பதிவுசெய்யப்பட்ட சொசைட்டியோட இடமாகும். 1996-ல் நாங்கள் இந்தத் திட்டத்தை முடித்து வெளியேறிவிட்டோம். அந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறியதும் அந்த ஒன்பது ஏக்கர் நிலத்தில் வளர்ந்து கிடந்த மரங்களையும் மூலிகைச் செடிகளையும் அப்படியே பாதுகாத்து வளர்ப்பது என முடிவு செய்தோம். அதன்பிறகு, இந்தக் காட்டுக்கு சுகவனம் எனப் பெயரிட்டோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த மாதிரி ஒரு காடு எங்கேயும் பார்க்க முடியாது. 

காட்டின் வரைபடம்

இந்த சுகவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கே உரித்தான முந்நூறுக்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த மரங்கள் மற்றும் இயற்கையான மூலிகை தாவரங்களையும் பாதுகாத்து வருகிறோம். இதுமட்டுமல்லாமல் பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழல், மருந்துத் தாவரங்கள் என மொத்தம் ஐந்நூறு வகையான தாவரங்கள் இருக்கின்றன. இதனால், சுகவனம் இப்போது மூலிகை வனமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள மூலிகைச் செடிகளையும் அரிய வகை மரங்களையும் பார்வையிடுவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அந்த மாணவர்களுக்கு மூலிகை குறித்த பயன்பாடுகளையும், மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறோம். ஒரு காட்டை அழிப்பது மிகவும் எளிது. ஆனால், ஒரு காட்டை உருவாக்க குறைந்தபட்சம் எங்களுக்கு பதினெட்டு ஆண்டுகள் ஆனது. மேலும், கடந்த ஆறு வருடங்களாக எங்கள் அமைப்புக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. அதனால், என்னுடைய சொந்த செலவில்தான் இந்த சுகவனத்தைப் பராமரித்து வருகின்றேன். இந்த சுகவனத்தை பராமரிக்க அரசு உதவி செய்தால் நிச்சயம் உதவியாக இருக்கும்.

மரியசெல்வம்

அரிய மூலிகைகள், சுற்றுப்புறச் சூழல் இவற்றின் அவசியத்தை மக்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும், இன்னும் இளைய தலைமுறையினரிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கின்றது. அதை மாற்ற வேண்டும். இந்த சுகவனத்தை அடுத்தகட்டத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் மாறும் என நம்புகிறேன் " என நம்பிக்கையுடன் பேச்சை நிறைவு செய்தார் மரியசெல்வம்.

நாம் காட்டை உருவாக்க வேண்டாம். வீட்டுக்கு ஒரு மரம் நட்டு, அதை ஒழுங்காக வளர்த்தாலே போதும்.


டிரெண்டிங் @ விகடன்