விக்டோரியா மகாராணிக்கு விசிறியான தாளிப்பனை மரம்... சுவாரஸ்யத் தகவல்கள்!

விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட வரலாறும் தாளிப்பனைக்கு உண்டு. ஆனால், இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே அரிதாக காணப்படுவதுதான் வேதனையான ஒன்று.

விக்டோரியா மகாராணிக்கு விசிறியான தாளிப்பனை மரம்... சுவாரஸ்யத் தகவல்கள்!

``நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பனை மரம் பூக்கிறது" என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில்  கடந்திருப்போம். உண்மையில் என்ன வகையான பனை மரம் என்று அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சிலரோ பனை மரம் பூக்கிறது என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள். உண்மையிலேயே பனை பூக்குமா? அது என்ன வகையான பனை மரம் என்ற தேடலில் இறங்கியபோது தாளிப்பனை பற்றி கிடைத்த தகவல்கள் ஆச்சர்யமளித்தன.

தாளிப்பனை

பனை மரத்தில் ஆண், பெண் என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 34 வகையான பனை மரங்கள் உலகில் இருக்கின்றன. அதில் தாளிப்பனை பூக்கும் இனத்தைச் சார்ந்தது. இதை கூந்தல் பனை, காலிப்பனை, விசிறிப்பனை கூந்தற்பனை, தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் குடைப்பனை என்ற பெயர்களாலும் இடத்துக்கு ஏற்ற வகையில் அழைப்பது உண்டு. உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை தாளிப்பனை. வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டது. இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில், பல லட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். தாளிப்பனையில் இருந்துதான் எழுதும் ஓலைச்சுவடிகளும் தயாரித்திருக்கின்றனர். இந்த வகை பனை மரங்கள் வளர்வதற்கு உரம், பூச்சிக் கொல்லி மருந்து எடையும் தெளிக்கத் தேவையில்லை. தானாக வளரும் பனையில் நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்ட உணவு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை சிறுநீரகக் கோளாறு, உடலில் ஏற்படும் கொப்பளம் போன்றவைக்கு மருந்தாக விளங்கி வருகின்றன.  தாளிப்பனை மரமானது 70 ஆண்டுகளில் முதிர்ச்சி பெற்றுவிடும். பூக்கள் பூத்து கொத்துக் கொத்தாக காய்கள் பிடித்து, ஆறு மாதங்களுக்குப் பின்னர் அழிவைச் சந்திக்கும். இப்பூக்கள் காய்ந்து வெடித்துச் சிதறும்போது, பல்வேறு வகையான ஒலி ஏற்படும்

இதன் தாவரவியல் பெயர் ‘கோர  சாசு‘. சாதாரண பனை மரத்தின் ஓலைகள் போலத்தான் தாளிப்பனையின் ஓலைகளும் இருக்கின்றன. இந்த வகை மரங்கள் அதிகபட்சமாக 120 ஆண்டு வரை வளரும். 40 முதல் 70 ஆண்டுகளுக்கு மேல்தான் பூக்கும் தன்மையைப் பெறுகிறது. தாளிப்பனை மரங்களில் பூக்கும் பூவானது வெள்ளை நிறத்தில் பெரிய அளவில் காணப்படும். இந்த மலர் நன்றாக விரிந்து பால் போன்ற ஒருவித மணம் வீசுகிறது. மரத்தின் உச்சிப் பகுதியில்தான் பூவைப் பார்க்க முடியும். இதன்  ஓலைகள் தொப்பி, விசிறிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பனை மரம் வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும். ஆனால், அரிய வகையான தாளிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும். காலப்போக்கில் தாளிப்பனை இனம் அழிவைச் சந்தித்து வருகிறது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையில் தாளிப்பனை அதிகமாக காணப்படுகிறது. 

தாளிப்பனை

இலங்கையில் அதிகமான அளவில் தாளிப்பனை மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் ஒரே நேரத்தில் பூத்தால் ஏதோ ஓர் மோசமான நிகழ்வு நிகழப்போகிறது என்று இலங்கை மக்கள் அச்சப்படும் வழக்கம் இன்று வரையிலும் தொடர்கிறது. தாளிப்பனைகள் பொறித்த இலங்கை நாணயங்கள் கி.பி 1901 முதல் 1926-ம் ஆண்டு வரையிலும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. முழுமையாக பூத்து நிற்கும் மரங்கள், முழுமையாக வாழ்ந்த ஒரு மனிதன் முதுமையில் நரைத்த முடியோடு முகத்தில் அறிவின் ஒளிவீச புன்னகை சிந்த, தலைநிமிர்ந்து நிற்பதுபோல் இருக்கும். 

விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட வரலாறும் தாளிப்பனைக்கு உண்டு. ஆனால், இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே அரிதாக காணப்படுவதுதான் வேதனையான ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!