வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (01/06/2018)

கடைசி தொடர்பு:14:30 (01/06/2018)

ஒற்றைக் கலப்பையால் உழவு ஓட்டும் மாட்டு வண்டி... சந்தையில் இது புதுசு!

விவசாயம் செய்யும் அனைவரும் மாட்டுக் கலப்பைகளை தவிர்க்க முக்கியமான காரணம் ஒன்று உண்டு. பெரும்பாலான விவசாயிகளுக்கு மாட்டுக் கலப்பைகளை அளவு பார்த்துப் பொருத்தி உழத் தெரியாததுதான்.

ஒற்றைக் கலப்பையால் உழவு ஓட்டும் மாட்டு வண்டி... சந்தையில் இது புதுசு!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரைக்கும் மாட்டுக் கலப்பையால் மட்டுமே விவசாயிகள் உழவு ஓட்டிக் கொண்டிருந்தனர். அவற்றில் மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்புக் கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி) என மூன்று வகைகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் வந்த டிராக்டர் கலப்பையானது மாட்டுக் கலப்பைகளையும், மாட்டு வண்டிகளையும் ஓரம் கட்ட வைத்தது. இதற்குத் தொழிற்புரட்சியும் முக்கியமான காரணம். ஆனால் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் மாட்டுக் கலப்பைகள் உழவு ஓட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று பெரும்பாலும் விவசாயத்துக்குத் திரும்பும் இளைஞர்களின் சாய்ஸ் டிராக்டரில் உழவு ஓட்டுவதாகத்தான் இருக்கும். அதற்கு நேரம் மிச்சம், வேலையாட்கள் செலவு குறைவு எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒற்றைக் கலப்பை மாட்டு வண்டி

விவசாயம் செய்யும் அனைவரும் மாட்டுக் கலப்பைகளை தவிர்க்க முக்கியமான காரணம் ஒன்று உண்டு. பெரும்பாலான விவசாயிகளுக்கு மாட்டுக் கலப்பைகளை அளவு பார்த்துப் பொருத்தி உழத் தெரியாததுதான். மாட்டுக் கலப்பைமீது ஆர்வம் இருந்தும், அவற்றை இயக்கத் தெரியாதவர்களுக்காகத்தான் சந்தையில் அறிமுகமாகியுள்ளது `அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பை'. அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையைப் புதிதாகச் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கும் கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த சசிகுமாரிடம் பேசினோம்.

``மாட்டுக் கலப்பையில் பொதுவாக நடந்து உழவு ஓட்ட வேண்டும். எங்களுடைய அக்னிகார்ட் கலப்பையில் மாடுகளைப் பூட்டிவிட்டு அதன்மீது அமர்ந்து உழவு ஓட்டலாம். சாதாரண கலப்பையில் உழவு ஓட்டும்போது வளைவுகளில் கலப்பை ஓட்டுபவரின் கால்களில் இடிப்பதுபோல வரும். இதில் அப்படி எந்த விதமான தொல்லையும் வராது. பார்ப்பதற்கு மாட்டு வண்டி போன்ற தோற்றத்தில் இரண்டு வீல்களுடன் எங்களுடைய ஒற்றைக் கலப்பை இருக்கும். ஆட்கள் அமரும் பகுதிக்குக் கீழ்ப்பகுதியில் கலப்பை இருக்கிறது.

வீட்டுக்கும் நிலத்துக்கும் தொலைவு அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு இக்கலப்பை மிகவும் உபயோகமாக இருக்கும். கலப்பை ஓட்டத் தெரியாமல் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஒற்றைக் கலப்பை மிகவும் உபயோகமாக இருக்கும். இரண்டு நாள்கள் ஓட்டிப் பழகிவிட்டால் இந்தக் கலப்பை வண்டியானது எளிதாகவே இருக்கும். ஒருமுறை வாங்கிவிட்டால் அதன் பின்னர் எந்தச் செலவும் இருக்காது. அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையில், கலப்பைப் பொருத்தும் இடத்தில் மூன்று அளவுகளில் பொருத்தும்படி கொடுக்கப்பட்டுள்ளன. மேற்புரம், அதிக ஆழம், குறைந்த ஆழம் என நமக்குத் தேவையான அளவுகளில் வைத்துக் கொண்டு உழவு ஓட்டலாம். சிறு குறு விவசாயிகளுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். இதன் விலை 20 ஆயிரம் ரூபாய். முதலில் இரண்டு கலப்பைகள் பூட்டி உழவு ஓட்டும்படி வடிவமைத்துக் கொடுத்தோம். அதில் பெரிய மாடுகளை மட்டும்தான் பூட்டி ஓட்டும்படி இருந்தது.

மாட்டு வண்டி

அதிகமான விவசாயிகள் கேட்டுக் கொண்டதால் ஒற்றைக் கலப்பையை மட்டுமே பொருத்திக்கொடுக்கிறோம். இந்த ஒற்றைக் கலப்பையில் சிறிய மற்றும் பெரிய மாடுகளை வைத்து உழவு ஓட்டிக்கொள்ளலாம். சாதாரண கலப்பையும், அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையும் ஒரே நேரத்தைத்தான் எடுத்துக் கொள்ளும். இதனைப் பராமரிக்க வருடம் ஒருமுறை வீல் பேரிங்குகளை மாற்றிக் கொள்ளலாம். அவ்வப்போது வீல்களுக்கு கிரீஸ் வைக்க வேண்டும். இதனால் வீல்கள் வேகமாகச் சுழலும், மாடுகளுக்கும் அவ்வளவு சுமையாக இருக்காது. ஒவ்வொரு சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்போது விவசாயிகளிடம் டெமோவும் காட்டுகிறோம். அதிகமான விவசாயிகள் ஆர்வமுடன் விசாரித்துச் செல்கின்றனர்" என்றார்.
 


டிரெண்டிங் @ விகடன்