வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (03/06/2018)

கடைசி தொடர்பு:14:41 (03/06/2018)

”இது எங்க ஊர் கோழி!” - 2 மாநிலங்கள் சண்டை போடுமளவுக்கு என்ன இருக்கு கருங்கோழியில்?

இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருக்கும். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு திறன்கள் கொண்டிருப்பதால் இவற்றிற்கு ரசாயன மருந்துகள் பெரும்பாலும் கொடுப்பது இல்லை.

”இது எங்க ஊர் கோழி!” - 2 மாநிலங்கள் சண்டை போடுமளவுக்கு என்ன இருக்கு கருங்கோழியில்?

கோழிக்கறி என்றாலே யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது. என் உடன் வேலை செய்யும் நெல்லை நண்பர் ஒருவர் "அண்ணே கருங்கோழி எங்கண்ணே கிடைக்கும்" என்று கேட்டார். இங்க கிடைக்கும் என்ற முகவரி கொடுத்துவிட்டு "ஏன்பா கேட்கிற" என்றேன். அந்தக் கோழி உடம்புக்கு நல்லதாம்னே... சொந்தக்காரங்க வளர்க்கக் கேட்டாங்க" என்றார், அந்த நண்பர். கருங்கோழிகள் இன்று தமிழ்நாட்டில் பிரபலமாகிவிட்டன. . 

கருங்கோழி

பொதுவாகக் கோழிகளில் பல வகைகளைப் பார்த்திருப்போம். கோழியின் கால், தலைப்பகுதி, இறக்கை என ஒவ்வொரு பகுதியும் ஒருவிதமான வண்ணத்தில் அமைந்திருக்கும். இதுபோக அவற்றின் தோல், இறைச்சி ஆகியவையும் பல வண்ணங்களில் இருக்கும். ஆனால் தலை முதல் கால்வரை கோழி ஒரே நிறத்தில் இருக்குமா என்றால் இருக்கும் என்பதுதான் பதில். அந்தக் கோழி முழுமையாகவே கறுப்பு நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் கருங்கோழி, நாட்டுக் கறுப்புக் கோழி, கடக்நாத் கோழிகள் என்ற பெயர்களில் அழைக்கப்படுவது உண்டு. ஷாஜகான் திரைப்படப் பாடலில் "கறுத்தக்கோழி போட்டு வறுத்து வச்சிருக்கேன்" என்று ஒரு வரி இடம்பெறும். அதுவும் இந்தக் கறுங்கோழியைத்தான் குறிக்கும். இதன் பூர்வீகம் மத்திய பிரதேசம். இது காளி மாசி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காளியின் தங்கை என்று பொருள். இதன் வெளிப்புற நிறம் மட்டும் கறுப்பு கிடையாது. கருங்கோழியின் உட்புற சதைப்பகுதி, எலும்புகள் என அனைத்துமே கறுப்பு நிறம்தான். 

இக்கோழியின் உடலில் மெலனின் நிறமி நிறைந்து காணப்படுவதால், கறுப்பு நிறமாகத் தோற்றமளிக்கிறது. கறுப்புத் நிறத் தோகையில் பசுமை நிறம் கலந்து வானவில் நிறம்போலக் காட்சியளிக்கும். இதன் தோல், அலகு, கால் விரல்கள் கருஞ்சாம்பல் நிறமாகவும், கொண்டை, நாக்கு போன்றவை கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கோழிச் சந்தையில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. யுனானி மருத்துவத்தில் கருங்கோழிகள் மருத்துவ குணம் வாய்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மகாராஷ்டிரா அரசு இக்கோழிகளை அழிவில் இருந்து பாதுகாக்க வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சிலருக்கு இக்கோழியை வளர்க்க நிதியுதவி அளித்து வருகிறது. இன்றைய நிலையில் கருங்கோழிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும், மேய்ச்சல் முறையிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்று சொல்கிறது, சித்த மருத்துவம். 

கருங்கோழிகள்

இக்கோழிகள் ஆண்டுக்கு 80 முதல் 90 முட்டைகள் வரை இடும். முட்டையும் முழுமையான கறுப்பு நிறத்தில் இருக்கும். கருங்கோழிக் குஞ்சுகள் பிறந்து 20 நாட்கள் வரை செயற்கையான வெப்பம் கொடுத்து வளர்க்க வேண்டும். 100 கருங்கோழிக் குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்பு ஒன்று அமைத்து வெப்பம் இருக்குமாறு வளர்க்கப்படும். அதிகமான குளிரை இக்கோழிகள் தாங்காது. கோழி வகைகளில் இவை அதிகமான தண்ணீர் அருந்தும். இந்த கோழிக் குஞ்சுகள் 2 மாதங்களில் இருந்து விற்பனை செய்யப்படும். இதன் கறியின் நிறம் கறுப்பாக இருப்பதால், இதை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இதில் தயக்கம் கொள்ள எதுவும் இல்லை. கருங்கோழிகள் உண்பதற்கு மிகவும் ஏற்றவை. சந்தையில் கருங்கோழியின் தேவை அதிகமாக இருப்பதால் சில பண்ணையாளர்கள் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்தன.

கடக்நாத் அப்ளிகேஷன்

மைசூர், உணவு ஆராய்ச்சிக் கழகம் கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு நன்மை தரக் கூடியது என்ற சான்று கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீன நாட்டு மருத்துவத்தில் இந்தக் கருங்கோழிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருக்கும். இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் திறன்கள் கொண்டிருப்பதால் இவற்றிற்கு ரசாயன மருந்துகள் பெரும்பாலும் கொடுப்பது இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக 'MP Kadaknath' என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சத்தீஸ்கர் மாநிலமும் கடக்நாத் கோழி எங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடியதுதான் காரணம். மத்தியப் பிரதேச மாநிலமும், சத்தீஷ்கர் மாநிலமும் தங்களுடைய மாநிலத்துக்குத்தான் என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கறுப்புக் கோழி. இறுதியில் மத்தியப் பிரதேசத்துக்கு கருங்கோழிக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்