வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (05/07/2018)

கடைசி தொடர்பு:14:41 (07/07/2018)

குறைந்த விலை நிழல்வலைக்குடில், நாட்டு விதைகள்... இப்படி அமைக்கணும் மாடித்தோட்டம்

மாடித்தோட்டத்தை அமைக்கும்போதே நிழல்வலைக்குடில் அமைக்கலாம். நிழல்வலைக்குடில் அமைக்க அதிக செலவில்லாமல் மிக எளிதான முறையில் அமைக்கலாம். 20 அடி நீளம், 10 அடி அகலம் என்ற அளவில் நிழல்வலை வாங்கிக் கொள்ள வேண்டும்.

குறைந்த விலை நிழல்வலைக்குடில், நாட்டு விதைகள்... இப்படி அமைக்கணும் மாடித்தோட்டம்

மாடித்தோட்டத்தில் பயிரிடும் முறை, தற்போது நகரங்களில் பரவிவருகிறது. வீட்டில் உள்ள காலி இடங்களில் பூக்கள், காய்கறிகள் என வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், பழ வகைகளையும் வளர்த்து வருகிறார்கள். முன்னர், வீடுகளில் செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். கிராமங்களில் நிச்சயம் வீட்டுக்குப் பலன் தரக்கூடிய செடி ஒன்றாவது இருக்கும். அதேபோல நகரங்களில் தரையில் வளர்க்க முடியாதவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் 'மாடித்தோட்டம்'. தற்போது நகரங்களில் பெரும்பாலும் வீட்டின் மொட்டை மாடிகளில் உள்ள இடங்களில் வீட்டுக்குத் தேவையான காய்கறி, கீரைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இதில் சிலர் முன் அனுபவம் பெற்றவர்களாகவும் அவர்களைத் தொடர்ந்து பலர் மாடித்தோட்ட பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொளுத்தியதைத் தொடர்ந்து, இப்போது மாடியில் செடிகளை வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. அதனால் மாடித்தோட்டம் அமைத்திருப்போர் தங்களுடைய தோட்டத்தினை புதியதாக மாற்றியும் வருகிறார்கள்.

மாடித்தோட்டம்

மாடித்தோட்டம் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில் கோடைக்கால மாதங்களைத் தவிர, அனைத்து மாதங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம். தொட்டிகளுக்கு கீழே பாலிதீன் விரிப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர்க் கசிவு தடுக்கப்படும். தொட்டிகளில் ஒரு பங்கு வளமான செம்மண் அல்லது வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தொழுஉரம், தேங்காய் நார், மாட்டு எரு ஆகியவற்றையும் நிரப்ப வேண்டும். அக்கலவையில் தண்ணீர் தெளித்த பின்னர் நாற்றுக்களை நடவு செய்யலாம். தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடமாக இருந்தால், செடிகள் நன்றாக வளரும்.

விதைகள் பற்றி?

மாடித்தோட்டத்தில் நாட்டு விதைகள் பயன்படுத்துவதே நன்மை தரும். நாட்டு விதைகள் கிடைக்காத பட்சத்தில், கலப்பின வீரிய ஒட்டு ரக விதைகளையும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். தோட்டக்கலை துறை மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள்தான் வழங்கப்படுகின்றன. கத்திரிக்காய், மிளகாய், தக்காளி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், நூக்கல் உள்ளிட்ட பயிர்களை நாற்று விட்டுத்தான் நடவு செய்ய வேண்டும். அப்போதுதான் காய்ப்பு நன்றாக இருக்கும். வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை, செடி அவரை மற்றும் கீரை வகைகளுக்கு விதைகளை ஓர் அங்குல ஆழத்தில் நேரடியாக விதைக்கலாம்.

நாற்றுகள்

நோய்த்தாக்குதலுக்கு என்ன செய்ய வேண்டும்?

மாடித்தோட்டத்தில் பயிர்களின் ஊட்டத்துக்கு பஞ்சகவ்யாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம். தேவையற்ற களைகளையும் அவ்வப்போது அகற்ற வேண்டும். செடிகளில் நோய் தொற்று ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக அப்புறப்படுத்துவது நல்லது. பயிருக்கு தேவையான தண்ணீரை மட்டும் கொடுத்தால் போதுமானது. நோய் மற்றும் பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்க...வேப்பெண்ணெய், இஞ்சி-பூண்டுக் கரைசல், மூலிகை பூச்சி விரட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

உபகரணங்கள் எங்கே கிடைக்கும்?

புதிதாக தொட்டிகளை ஆரம்பிக்க இயற்கை அங்காடிகளில் இயற்கை உரங்கள், நாட்டு விதைகள் கிடைக்கும். தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மாடித்தோட்ட உபகரணங்கள், இடுபொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தொட்டி, பைகளில் ஒரே மாதிரியான பயிர்களை திரும்பத் திரும்ப வளர்க்கக் கூடாது. சுழற்சி முறையை பயன்படுத்துவது நல்லது. இதனால் மண்ணில் சத்துக்கள் எப்போதும் நிறைந்திருக்கும். 

நிழல்வலைக்குடில்

எளிதான செலவில் நிழல்வலைக்குடில் அமைப்பது எப்படி?

இப்போது மாடித்தோட்டத்தை அமைக்கும்போதே நிழல்வலைக்குடில் அமைக்கலாம். நிழல்வலைக்குடில் அமைக்க அதிக செலவில்லாமல் மிக எளிதான முறையில் நிழல்வலைக்குடில் அமைக்கலாம். 20 அடி நீளம், 10 அடி அகலம் என்ற அளவில் நிழல் வலை வாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டு முழம் உயரம் கொண்ட சாக்கில் மணலை நிரப்பி 20 அடி அளவில் பத்து அடிக்கு ஒரு மணல் மூட்டை வைத்து அதன் மேல் மரத்தை ஊன்றலாம். அதேபோல 10 அடி அகலத்திற்கு ஒரு மணல் மூட்டை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது 20 அடி நீளம், 10 அடி அகலத்திற்கு என மொத்தம் 8 மணல் மூட்டைகள் அமைக்க வேண்டும். அதன்மேல் மரங்களை ஊன்றி அதன்மேல் பந்தல்போல அமைத்துக் கொள்லலாம். இப்படி அமைக்கும் நிழல்வலைக்குடில் நிலைத்து நிற்குமா என்ற சந்தேகம் தோன்றலாம். இதனை அமைத்து இரண்டு வருடங்களாக பராமரித்து வருபவர்களும் உண்டு. இதையே இரும்பால் அமைத்தால் மாடியினை சேதப்படுத்த வேண்டியிருக்கும். மரம் வைத்து குடில் அமைத்தால் எந்தச் சேதமும் ஏற்படாமல் காப்பாற்றலாம். இப்போது புதிதாக மாடித்தோட்டம் அமைக்க இருப்பவர்களும் இம்முறையை பின்பற்றலாம். 

வாரம் முழுவதும் உங்களுக்கு காய்கறிகள் கிடைக்காவிட்டாலும், வாரம் சில நாட்கள் குறைந்த செலவில் இயற்கையான காய்கறிகளை மாடித்தோட்டம் மூலம் பெற்று வளமுடன் வாழலாம்.


டிரெண்டிங் @ விகடன்