Published:Updated:

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

மதிப்புக்கூட்டல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

மதிப்புக்கூட்டல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

காய்கறிகள், பழங்கள்... என எந்த விளைபொருளாக இருந்தாலும் அவற்றுக்குச் சந்தையில் பல நேரங்களில் கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வரத்து, நம் மாநிலத்திலேயே உற்பத்தி அதிகரிப்பு, வியாபாரிகளின் சூழ்ச்சி... எனப் பல காரணங்களால் விலையின்மைப் பிரச்னை ஏற்படும். இதுபோன்ற சமயங்களில், குளிர் பதனக்கிடங்குகளில் இருப்பு வைத்து விற்பனை செய்தல், மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல் போன்ற யுக்திகள் மூலம் ஓரளவுக்கு லாபம் பார்க்க முடியும். இப்படி வாய்ப்புகள் இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் இவற்றைப் பயன் படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், சில விவசாயிகள் மதிப்புக் கூட்டல் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராஜேந்திரன்.

வாவிபாளையம் அடுத்துள்ள கொசவ பாளையம் கிராமத்தில் ராஜேந்திரன் கடந்த 22 ஆண்டுகளாக நெல்லிச் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதோடு நெல்லியிலிருந்து சாறு உற்பத்தியும் செய்து வருகிறார். நெல்லி விவசாயத்தில் கொடிகட்டிப்பறக்கும் இவரின் அனுபவங்களைக் கொஞ்சம் கேட்போமா...

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

சீதனமாகக் கிடைத்த நிலம்

“எனக்குப் பூர்வீகம் கரூர் மாவட்டம், ஆண்டிபாளையம். போன தலைமுறையோடு விவசாயத்தைவிட்டு வேறு தொழிலுக்குப் போய்ட்ட குடும்பம். 10-ம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். சின்ன வயசிலேயே வியாபாரம் செஞ்சு பெரியாளா வளரணும்னு ஆசை. அதனால, கையில இருந்த பணத்தை வெச்சுக் கொடுமுடியில் ஒரு டெலிவிஷன் ஷோரூம் ஆரம்பிச்சேன்.

அந்தப் பிசினஸ் நல்லா நடந்துச்சு. அப்புறம், பரமத்திவேலூர், பல்லடம்னு ரெண்டு ஊர்லயும் ஷோரூம் ஆரம்பிச்சேன். இடையில எனக்குக் கல்யாணம் ஆச்சு. அப்போ மாமனார் வீட்டுக்காரங்க சீதனமா 10 ஏக்கர் நிலத்தக் கொடுத்தாங்க. அது மேட்டுக்காடு. அதனால, அதை விற்பனை செஞ்சுட்டு பிசினஸை விரிவுபடுத்தலாம்னு முடிவு செஞ்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

மனதை மாற்றிய நாளிதழ்ச் செய்தி

அந்தச் சமயத்துல, ஒரு நியூஸ் பேப்பர்ல, நெல்லி விவசாயம் பத்தின செய்தி போட்டிருந்தாங்க. வறட்சியிலும் நெல்லி நல்லா வரும்னு எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதும், நிலத்தை விற்பனை செய்ற எண்ணத்தை மாத்திக்கிட்டு நெல்லிச் சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சேன். வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகங்கள்ல எல்லாம் போய் நெல்லி பத்தி விசாரிச்சுப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். எல்லாருமே நெல்லிச் சாகுபடி பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க.

அடுத்ததா நிலத்துல 550 அடிக்கு போர்வெல் போட்டு வியாபாரத்துக்கான மின்சார இணைப்பு வாங்கினேன். அப்போகூடச் சிலர் என்னைப் பார்த்து, பிசினஸ்ல சம்பாதிச்ச காசைப் பூமியில விட்டுடாதீங்க. நிலத்தைக் காத்தாடி கம்பெனிக்கு வித்தா நல்ல விலை கிடைக்கும்’னு சொல்லி மனசை மாத்தப் பார்த்தாங்க. சிலர் பகடி பேசினாங்க. நான் எதையும் காதுல போட்டுக்காம வேலையை ஆரம்பிச்சுட்டேன். தோட்டக்கலைத்துறை, வனத்துறையில இருந்து கொஞ்சம் நெல்லி நாற்றுகள் கிடைச்சது.

மீதியைத் தனியார் நர்சரிகள்ல வாங்கிக்கிட்டேன். ஒரு நாற்று 25 ரூபாய்னு 4,500 நாற்றுகள் வாங்கினேன். பத்து ஏக்கருக்கு 4,300 நாற்றுகள் போதுமானதுதான். இருந்தாலும் பாடுவாசிக்கு (சரியாக முளைக்காத நாற்றுகளைப் பிடுங்கிவிட்டு நடுவதற்காக) 200 நாற்றுகள் சேர்த்து வாங்கிக்கிட்டேன். எல்லாமே வீரிய ஒட்டு ரகப் பெருநெல்லிதான்” என்று விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன ராஜேந்திரன் தொடர்ந்தார்...

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

முழு இயற்கைமுறைச் சாகுபடி

“ஆரம்பத்துல இருந்தே முழு இயற்கை விவசாயம்தான்னு முடிவு செஞ்சுட்டேன். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் இரண்டரை அடி ஆழம், இரண்டரை அடி அகலத்துல குழிகளை எடுத்தேன். 20 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ரெண்டையும் கலந்து, ஒவ்வொரு குழியிலயும் நிரப்பி, செடிகளை நட்டு, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சேன். வாரத்துக்கு ரெண்டு தடவை ஒரு செடிக்கு 80 லிட்டர் அளவுல தண்ணீர் கொடுத்தேன்.

நல்லா தளதளனு வளந்து வந்துச்சு. சரியான சமயத்துல கவாத்துச் செய்றது, களை எடுக்குறதுனு எல்லாத்தையும் தவறாமச் செஞ்சுட்டு வந்தேன். வருஷத்துக்கு ரெண்டு முறை பருவமழை தொடங்குறதுக்கு முன்னாடி, ஒவ்வொரு மரத்துக்கும் 10 கிலோ ஆட்டு எருவையும் 10 கிலோ தொழுவுதையும் கலந்து கொடுத்தேன்.

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

10 ஏக்கரில் 100 டன் மகசூல்

நட்ட மூணாவது வருஷத்துல இருந்து சிறப்பாகக் காய்க்க ஆரம்பிச்சது. நான் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலா மகசூல் கிடைச்சது. முதல் பறிப்பிலேயே பத்து ஏக்கர்லயும் சேர்த்து 20 டன் அளவுக்கு மகசூல் வந்தது.

அதை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்ல கிலோ 20 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அதுல 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷத்துல மகசூல் அதிகரிக்க ஆரம்பிச்சது. நட்ட அஞ்சாம் வருஷத்துல பத்து ஏக்கர்ல 100 டன் அளவுக்குக் காய்க்க ஆரம்பிச்சுடுச்சு. மத்த வெள்ளாமை போலத்தான் நெல்லிக்காய்க்கும். விலை நிரந்தரமா இல்லை. சில சமயங்கள்ல ரொம்பவும் கீழே போயிடுச்சு. அதிக அளவு காயை அழிக்க முடியலை. பல நேரங்கள்ல விற்க முடியாம மார்க்கெட்ல இருந்து வர்ற வழியில் இருக்குற ஊர் மக்களுக்குச் சும்மாவே நெல்லிக்காயைக் கொடுத்துருக்கேன்.

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

நம்மாழ்வார் சொன்ன ஆலோசனை

அந்தச் சமயத்துலதான், ஒரு பத்திரிகையாளர் நண்பர் மூலமா நம்மாழ்வார் ஐயா தொடர்பு கிடைச்சது. நம்மாழ்வார், என்னோட நெல்லித் தோட்டத்துக்கு வந்து முழுசையும் சுத்திப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டார். அப்போ அவர்கிட்ட, ‘வருஷம் முழுக்கச் சீரான விலை கிடைக்க மாட்டேங்குது’னு சொன்னேன். அப்போ ஐயாதான், ‘மதிப்புக்கூட்டுங்க, நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னார்.

அப்புறம் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல, நெல்லி மிட்டாய், ஊறுகாய், வத்தல், நெல்லிச்சாறுனு மதிப்புக்கூட்டறது பத்தி பயிற்சி எடுத்துக்கிட்டேன். பேங்க்ல லோன் வாங்கி, சின்ன அளவுல நெல்லிச்சாறு தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிச்சேன்” விவசாயத்தில் இருந்து மதிப்புக்கூட்டலுக்கு மாறியது குறித்துச் சொன்ன ராஜேந்திரன் தொடர்ந்தார்.

விளம்பரத்தால் கிடைத்த விற்பனை வாய்ப்பு

“நெல்லிக்காய்ல இருந்து தினமும் 100 லிட்டர் அளவுக்கு நெல்லிச்சாறு உற்பத்தி செஞ்சு, பாட்டிலில் அடைச்சு ஊர் ஊராப் போய் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். விவசாயக் கண்காட்சிகள்ல கலந்துக்கிட்டு ஸ்டால் போட்டதுல ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சது.

செய்தித்தாள், ரேடியோ, டி.வி எல்லாத்துலயும் தொடர்ச்சியா விளம்பரம் செஞ்சதுல ஆர்டர்கள் குவிய ஆரம்பிச்சது. ஆந்திரா, கர்நாடகா மாநிலத்துலயும் விளம்பரம் செஞ்சேன். அங்க இருந்தும் ஆர்டர் அதிகமா வர ஆரம்பிச்சதும், நவீன இயந்திரங்களை வாங்கி உற்பத்தித்திறனை அதிகப்படுத்தினேன்.

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

நிலத்தில் சம்பாதித்ததை நிலத்திலேயே முதலீடு

அப்புறம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், வியட்நாம்னு நெல்லிச்சாற்றை அனுப்ப ஆரம்பிச்சேன். விவசாயத்துல கிடைச்ச வருமானத்தை விவசாயத்துலயே முதலீடு செய்வோம்னு முடிவு செஞ்சு திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்துல 150 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தையும் சரி செஞ்சு நெல்லிச் சாகுபடியை ஆரம்பிச்சேன்.

இங்க நடவு செஞ்சு 22 வருஷம் ஆச்சு. ஸ்ரீராமபுரம் கிராமத்துல நடவு செஞ்சு 12 வருஷம் ஆகுது. இப்போ மொத்தம் 160 ஏக்கர்ல நெல்லி இருக்கு. வருஷத்துக்குச் சராசரியா 1,600 டன் அளவுக்கு ( 16 லட்சம் கிலோ) நெல்லிக்காய் கிடைக்கிது. அதுல சாறு எடுத்து விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்” என்ற ராஜேந்திரன் மதிப்புக்கூட்டல் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல்களைச் சொன்னார்.

ஆண்டுக்கு 4 லட்சம் லிட்டர் சாறு

“4 கிலோ நெல்லிக்காயில் ஒரு லிட்டர் சாறு எடுக்கலாம். வருஷத்துக்குச் சராசரியா 4 லட்சம் லிட்டர் அளவுக்குச் சாறு உற்பத்தி செய்றேன். ஒரு லிட்டர் 120 ரூபாய்ங்கிற விலையில் வருஷத்துக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் வருது. ஒரு லிட்டர் சாறு க்கு எல்லாச் செலவும் போக 30 ரூபாய் லாபம் கிடைக்கும். அந்தக்கணக்குல வருஷத்துக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. காயா விற்பனை செஞ்சா இதுல பாதி அளவு கூட லாபம் கிடைச்சிருக்காது” என்ற ராஜேந்திரன் நிறைவாக,

அன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர்! - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி!

பத்துக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்

“மதிப்புக்கூட்டல்னாலதான் இவ்வளவு லாபம் கிடைக்குது. விலை கிடைக்கலையேனு மனம் தளராம முயற்சி எடுத்ததுக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றிக்கு வழிகாட்டியவர் நம்மாழ்வார் ஐயா. அதனால, அவர் ஆரம்பிச்ச வானகம் பண்ணைக்குப் பக்கத்துல அவர் நினைவா 60 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். அதுலயும் நெல்லிச் சாகுபடியை ஆரம்பிக்கப் போறேன். அடுத்து பத்துக்கு மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள தயாரிக்கிற யோசனையும் இருக்கு. அதுக்காக என்னோட பொண்ணை உணவுப் பதப்படுத்துதல் சம்பந்தமான படிப்பைத்தான் படிக்க வெச்சுருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தோட்டத்திலேயே நாற்று உற்பத்தி!

னக்குத்தேவையான நெல்லி நாற்றுகளை ஒட்டுக்கட்டுதல்மூலம் தோட்டத்திலேயே ராஜேந்திரன் உருவாக்கிக்கொள்கிறார். அதற்காக இத்தொழில்நுட்பம் தெரிந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சிலரையும் பணியில் அமர்த்தியுள்ளார்.

நல்ல உரமாகும் சக்கை!

“நெல்லிக்கனிகளைப் பிழியும்போது டன் கணக்கில் சக்கை கிடைக்கும். இந்தக் கழிவுச் சக்கையையும் காய வெச்சுச் சாணத்தோடு சேர்த்து மட்க வெச்சு அதை, நெல்லி மரங்களுக்குக் கொடுக்கிறேன். இது நல்ல தழைச்சத்தா இருக்கு. வேர் கறையானையும் கட்டுப்படுத்துது” என்கிறார் ராஜேந்திரன்.

வறட்சியைத் தாங்கும் நெல்லி

“கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டாலும் தாங்கக்கூடியது நெல்லி. இலையெல்லாம் உதிர்ந்துபோனாலும் ஒரு மழை கிடைச்சதும் திரும்பவும் தழைச்சுடும். ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடி தென்னையெல்லாம் பட்டுப்போன சமயங்கள்ல கூட நெல்லி தாங்கி நின்னுடுச்சு” என்கிறார், ராஜேந்திரன்.

உயிர்வேலியாகப் பல்வகை மரங்கள்

ன்னுடைய 160 ஏக்கர் நிலத்துக்கும் உயிர் வேலிபோலத் தேக்கு, குமிழ், மலைவேம்பு, வாகை, வேம்பு உள்ளிட்ட பல வகை மரங்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் மரங்களை நடவு செய்துள்ளார் ராஜேந்திரன். எதிர்காலத்தில் இம்மரங்கள் மூலமும் அவருக்குக் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

அசுவினி தாக்கும்... கவனம்

“நெல்லிச்செடிகளை அதிகம் தாக்குவது அசுவினி பூச்சிகள்தான். மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிச்சுதான் இதைக் கட்டுப்படுத்துறேன்.

160 ஏக்கருக்கும் இங்கேயே பூச்சிவிரட்டித் தயாரிச்சு பயன்படுத்துறேன்” என்கிறார் ராஜேந்திரன்.

நோய் எதிர்ப்புசக்தி கூடும்

“நெல்லிக்கனியில் எக்கச்சக்கமான மருத்துவக் குணங்கள் இருக்குங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

குழந்தைகளுக்குத் தினமும் 30 மில்லி நெல்லிச்சாறு கொடுத்தால், நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்” என்கிறார் ராஜேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism