Published:Updated:

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3
பிரீமியம் ஸ்டோரி
மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன்மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச்சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் முடிவில் ஒரு மாணவர் என்னிடம் வந்து, ‘சார், நீங்க மண்ணக் காப்பாத்தணும்னு சொல்றீங்க, விவசாயத்தைக் காப்பாத்தணும்னு சொல்றீங்க. அதனால. என்ன பயன்? நம்ம நாட்டோட ஜி.டி.பி-யில் (Gross Domestic Product-உள்நாட்டு மொத்த உற்பத்தி) விவசாயத்தோட பங்கு ரொம்பக் குறைவு. கம்ப்யூட்டர் துறையும் தொழில் துறையும்தான் நம்ம ஜி.டி.பியை உயர்த்துது. அதுலதானே நாம கவனம் செலுத்தணும்?’ என்று கேட்டார்.

‘தம்பி ஜி.டி.பி-யை உயர்த்தற துறைகள்ல வேலை செய்யறவங்க சாப்பிட என்ன பண்ணுவாங்க?’ என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் கொஞ்சம் தயங்கி, ‘உணவுப் பொருள்களை இறக்குமதி பண்ணிக்கலாம் சார்’ என்று பதிலளித்தார். நான் அதிர்ந்துவிட்டேன்.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

படித்த இளைஞர்கள் பலரும் விவசாயத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், இதுபோன்ற வளர்ச்சி மாயையில் சிக்கியிருக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உணவு உற்பத்தியில் தன்னிறைவடையாத நாடு, விவசாயத்தை, விவசாயிகளைக் காப்பாற்றாத நாடு, ஜி.டி.பி-யில் முன்னேறி எதைச் சாதித்துவிடும்? அப்துல்கலாம், குடியரசுத்தலைவராக இருந்தபோது வெளிநாட்டுக்குப் போயிருக்கிறார். அந்த நாட்டின் தேசிய நாளேட்டில் முதல் பக்கத்திலேயே விவசாயி ஒருவரின் சாதனையைப் பற்றி எழுதியிருந்தார்களாம். நம் நாட்டில்  இதுபோன்று எழுதுவார்களா? விவசாயத்துக்கும், விவசாயிக்கும், மண்ணுக்கும் முக்கியத்துவம் தராத நாடு, தற்சார்புடனும் தன்னிறைவோடும் வாழ முடியாது.

 நாம் தற்சார்புடனும் தன்னிறைவுடனும் வாழ வேண்டுமானால், மண்ணைக் காக்க வேண்டியது அவசியம்.

மண்ணைக் காப்பது என்றால், மண்ணின் நலத்தைக் காப்பது. மண்ணின் நலத்தைக் காப்பதில், நம் முன்னோரின் அனுபவ ஞானம் பல விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதில் முக்கியமானது, பலபயிர்ச் சாகுபடி. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு விவசாயியும், பலநூறு ஏக்கர் நிலத்துக்கு உரிமையாளராக இருப்பார்கள். அந்நாட்டு விவசாயிகள், தங்களுக்குத் தேவையான ஒற்றைப் பயிரைத் தவிர மற்ற அனைத்தையும் களைச்செடிகளாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், நம் நாட்டு விவசாயிகள், முக்கியப் பயிருடன் பயறு, காய்கறி, கீரை, மூலிகை எனப் பல பயிர்களை வளர்ப்பார்கள். பலபயிர்ச் சாகுபடி, உணவுப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், மண்ணின் நலத்தையும் காக்கும் வல்லமை படைத்தது.

அதேபோல், நம் நாட்டில் நிலம் எவ்வளவு இருந்தாலும் நிலத்துக்குள் வரப்புகளை அமைத்துவிடுவார்கள். வரப்பில்லாத நிலங்களை நம்மூரில் பார்ப்பது அரிது. நம் நாட்டின் பொருளாதார அறிவுஜீவிகள்... ‘இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள், நிலங்களை வரப்புகளால் கூறுபோடுகிறார்கள். அதனாலேயே உற்பத்தி குறைகிறது. பல நூறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, வரப்புகளை உடைத்து அமெரிக்காவைப்போலப் பெருவிவசாயம் செய்தால், வளர்ச்சி அடையலாம்’ என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், மண்ணின் நலத்தைக் காப்பதில் வரப்புகளுக்குத்தான் முக்கியப் பங்குள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3நம் முன்னோர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலங்களை வரப்புகளால் பிரித்து வேளாண்மை செய்ததில் காரணம் இல்லாமல் இல்லை. மண்புழுக்களும் ஏராளமான நுண்ணுயிரிகளும் மண்ணில் வசிக்கின்றன என்று பார்த்தோம். அப்படியானால், வயலில் தண்ணீர் தேங்கும்போது அவை எங்கு போகும்? உதாரணத்துக்கு நெல் பயிரிடும் வயலில், பாசனத்தின்போது, மண்ணில் உள்ள மண்புழுக்கள் மற்றும் மைக்ரோ ஆர்த்ரோபாட்ஸ் (Microarthropods) என்று சொல்லப்படும் மண் சிறு உயிரிகள் போன்றவை சுவாசிக்க முடியாமல் இறந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் வரப்பை அமைத்தார்கள் நம் முன்னோர். வயலில் நீர் தேங்கும்போது, இதுபோன்ற மண் உயிரிகள் வரப்பில் தஞ்சமடைந்துகொள்ளும். நீர் குறைந்து காயும்போது மீண்டும் மண்ணுக்குள் இறங்கித் தாவரக் கழிவுகளை உண்டு, மண் நலனைப் பாதுகாக்கும் பணியை அவை செய்யும். நம் முன்னோர் பல காலமாக அனுபவப்பூர்வமாக அறிந்த இந்த விஷயத்தைக் கோழிக்கோடு பல்கலைக்கழக (Calicut University) மாணவர்கள் ஓர் ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளனர்.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

இப்படிப்பட்ட மண்ணின் நலன் காக்கும் அனுபவப் பாடங்களை நாம் மறந்து வருகிறோம். மண்ணின் நலனைக் காக்க வேண்டும் என்றால், முதலில் ‘மண்ணுக்கு உயிருண்டு’ என்பதை நாம் உணர வேண்டும். அப்போதுதான் அது நம் செயல்களில் பிரதிபலிக்கும்.

மனிதனுக்கு உயிர் உண்டு என்றும், காற்றுக்கு உயிரில்லை என்றும் அறிவியல் சொல்கிறது. ஆனால், உயிர்க்காற்றான ஆக்ஸிஜன் உடலைவிட்டுப் பிரிந்தால், மனிதன் உயிரற்ற பொருளாகிவிடுகிறான். அதேபோல் தண்ணீருக்கு உயிரில்லை என்று சொல்லும் அறிவியல், தண்ணீர் முழுவதுமாக உடலைவிட்டு வெளியேறினால் மனிதன் இறக்க நேரிடும் என்பதை ஒப்புக்கொள்கிறது.

ஆனால், மண், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் கலவையே நம் உயிர்ச் சூழல் என்றும் அவை அனைத்துக்குமே உயிருண்டு என்றும் நம் முன்னோர் கருதினர். அதனால்தான், அவற்றை அவர்கள் தெய்வங்களாக வழிபட்டனர். ஆனால், அறிவியல், மண்ணை நமக்கு உயிரற்ற பொருளாகத்தான் அறிமுகப்படுத்தியுள்ளது. மண் என்றால் கனிமங்களடங்கிய பொருள் என்றே அறிவியல் கருதுகிறது. தத்துவார்த்த ரீதியாக மண்ணுக்கு உயிர் உண்டு என ஒப்புக்கொள்பவர்கள்கூட, அறிவியல் ரீதியாக மண்ணுக்கு உயிரில்லை என்றே கருதுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

ஒரு நாய் இறந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அது மண்ணுக்கு மேலே இருந்தால், அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும். ஆனால், இரண்டுக்கு இரண்டு அடி குழி வெட்டி, மண்ணில் அதைப் புதைத்தால், அது நாற்றம் எடுப்பதில்லை. மாறாக அது மட்கிவிடுகிறது. அது எப்படி மட்குகிறது? மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள்தான் அதை மட்கச் செய்கின்றன.

நம் குடலிலும் நுண்ணுயிரிகள்தான் நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைக்கின்றன. அப்படியானால் நமக்கு ஜீரண மண்டலம் இருப்பதைப்போலவே, மண்ணுக்கும் ஜீரண மண்டலம் உள்ளது என்றுதானே அர்த்தம்?

‘ஐயா... மனிதன் சுவாசிக்கிறான். மண் சுவாசிக்குமா’ என்று நீங்கள் கேட்கலாம். எனக்குக் கபில் தேவின் பழைய விளம்பரம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அந்த விளம்பரத்தில், அவர் ஒரு நிறுவனத்தின் ஷூவைக் காட்டி, ‘என் ஷூ கூடச் சுவாசிக்கும்’ என்பார். ஷூவே சுவாசிக்கும்போது மண் சுவாசிக்காதா?

மண்ணின் உற்பத்தித்திறனைக் கணிக்க ஆய்வு ஒன்று உண்டு. அதில் எவ்வளவு ஆக்ஸிஜன் உள்ளே சென்று எவ்வளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியே வருகிறது என்று கணிப்பார்கள். ஆக்ஸிஜனை உள்வாங்கி, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது எனில், மண் சுவாசிக்கிறது என்றுதானே அர்த்தம். ஆம்... மண் சுவாசிக்கும். மண்ணுக்குச் சுவாச மண்டலமும் உண்டு.

அடுத்து ரத்த ஓட்ட மண்டலத்துக்கு வருவோம். ஒருவருக்குக் காலில் அடிபடுகிறது என்றால், மாத்திரையை வாயில்போட்டு விழுங்குகிறோம். வாயில்போடுகிற மாத்திரை எப்படிக் காலிலுள்ள ரணத்தைக் குணமாக்குகிறது? அதற்கு ரத்த ஓட்டம்தான் காரணம். நாம் செடிக்குப் போடும் எருவு, பாய்ச்சும் தண்ணீர் ஆகியவற்றைத் வேருக்காகவா கொடுக்கிறோம்? இல்லையே... மண்ணுக்குத்தானே கொடுக்கிறோம். மண்ணுக்குக் கொடுக்கும் சத்துகள் வேரை அடைகின்றன என்றால் மண்ணுக்குள்ளும் உயிரோட்ட மண்டலம் உண்டு என்றுதானே அர்த்தம். மண்ணிலுள்ள மண்புழுக்கள், மரவட்டைகள் போன்ற உயிரினங்கள் இந்த உயிரோட்ட மண்டலத்தை வடிவமைக்கின்றன.

சரி, அடுத்து கழிவுமண்டலத்துக்கு வருவோம். சிறுவயதில் ஆசிரியர்களிடம் ஒருவிரலைக் காட்டிவிட்டு, நாம் சிறுநீர் கழிக்க ஓடுவோம். சிறுநீர் மூலம் நம் உடல் தேவையற்ற உப்புக்களை வெளியேற்றுகிறது. அதைப்போலவே, மண்ணும் உப்புக்களை வெளியே தள்ளுகிறது. அதனால்தான் உப்புப் படிவுகளை மண்ணில் நம்மால் பார்க்கமுடிகிறது. அப்படியானால் கழிவு மண்டலமும் மண்ணுக்கு உண்டு என்றுதானே அர்த்தம்.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

‘ஐயா... மனுஷன் இனவிருத்தி செய்கிறான். மண் அப்படியா?’ என்று நீங்கள் நமுட்டுச் சிரிப்புடன் கேட்பது புரிகிறது. இந்தக் கேள்விக்கு என்னுடைய பதில் இதுதான். சோதனைக் குழாயில் கருமுட்டையுடன், விந்தணுக்களைச் சேர்க்கலாம். ஆனால் கரு வளர, தாயின் கருப்பை தேவை.

இப்படித்தான் திசுவளர்ப்புத் தொழில்நுட்பத்தில் வளர்த்த செடியைக்கூட மண்ணில் வைத்துதான் வளர்க்க முடியும். தாயின் கருப்பை கருவைக் குழந்தையாக்குகிறது. மண்ணோ செடியை மரமாக்குகிறது. அப்படியானால், மண் இனவிருத்தி செய்கிறது என்றுதானே அர்த்தம்.

கடைசியாக, ‘எல்லாம் சரி. மனுஷனுக்கு மூளை இருக்கிறது. மண்ணுக்கு இருக்கிறதா’ என்று நீங்கள் கேட்கலாம். அதற்கும் நான் விடையளித்துவிடுகிறேன். என் ஆசிரியர் ஒருவர் திட்டும்போது, ‘உனக்கு, மண்டையில களிமண்தான் இருக்குது’ என்பார். இப்போது மீண்டும் அவர் வகுப்பில் அமர நேர்ந்தால், அவரிடம், ‘உங்கள் பாராட்டுக்கு நன்றி’ என்பேன். ஏனென்றால், மண்ணுக்கு அறிவுள்ளது. அதனால்தான், இறந்த நாயை மட்க வைக்கும் மண், விதைகளை மட்டும் முளைக்க வைக்கிறது. எதை மட்க வைக்கவேண்டும், எதை முளைக்க வைக்க வேண்டும் என்று தெரிந்துள்ள மண்ணுக்கு அறிவில்லை, மூளையில்லை என்று நம்மால் சொல்ல முடியுமா?

‘நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. மண்ணுக்கு உயிர் இருக்கிறது’ என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், மண்ணுக்கு உணவு கொடுப்பீர்களா அல்லது விஷம் கொடுப்பீர்களா? உயிருள்ள எந்த ஜீவனையும், மருந்து கொடுத்து வளர்க்க முடியுமா? அப்படியானால், மண்ணை நலமாக்க உயிர்ச்சத்துகள்தானே தேவை. உயிர் கழிவுகளையும், எரு என்கிற உணவையும் மண்ணுக்குக் கொடுக்கக் கொடுக்க அது நலமாக இருப்பதோடு, நம்மைப் பார்த்து நட்புடன் சிரிக்கும். அந்தச் சிரிப்பில்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

-முயற்சி தொடரும்.

மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3

மண்புழு என்னும் மாப்பிள்ளை!

லக அளவில் இயற்கை வேளாண்மையில் இயங்கிவரும் முக்கிய அமைப்புகளில் ஒன்று ‘இயற்கை வேளாண் இயக்கங்களுக்கான உலகளாவிய கூட்டமைப்பு’ (International Federation of Organic Agriculture Movements-IFOAM). அது ‘நலமான மண் என்றால், ஒரு சதுரஅடியில் 10-20 மண்புழுக்கள் இருக்க வேண்டும்’ என்கிறது. நம் ஊரில் வயலில் மண்புழுக்கள் குறைந்துவிட்டாலும்கூட, மண்ணில் இன்னும் மண்புழுக்கள் இருக்கின்றன. கிராமங்களில், சாணம் கொட்டும் இடங்களிலும், பாத்திரங்களில் ஒட்டியுள்ள உணவுப்பொருள்களைக் கழுவும் இடங்களிலும், சட்னி, மசாலா ஆகியவற்றை அரைக்கும் அம்மியின் கீழேயும் நாம் மண்புழுக்களைப் பார்க்கலாம். வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் போட்டு அவற்றை நாம் வயலிலிருந்து துரத்திவிட்டோம். ஆனால், அவை இன்னும் முற்றிலுமாக நம் கிராமங்களை விட்டு ஓடிவிடவில்லை.

நம்மூரில் ‘மாப்பிள்ளை முறுக்கு’ என்பார்களே, அப்படி நம் செயல்பாடுகளால், ‘நான் உங்கள் வயலுக்கு வரமாட்டேன்’ என்று முறுக்கிக் கொண்டு செல்லும் மண்புழுக்களை, அவற்றுக்குத் தேவையான உயிர்ச்சூழலை ஏற்படுத்தி, ‘வா ராஜா’ என்று அன்புடன் அழைத்தால், அவை நம் மாப்பிள்ளைகளைப்போல நம் மண்ணுக்கு ஓடி வந்துவிடும். மண்புழு மாப்பிள்ளைகளை, நம் மண்ணுக்கு அழைத்து விருந்து வைத்து மண்ணின் நலத்தைக் காக்கும் முயற்சியில் இறங்குவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism