Published:Updated:

ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்

ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்

சுற்றுச்சூழல்ஆர்.குமரேசன்

ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்

சுற்றுச்சூழல்ஆர்.குமரேசன்

Published:Updated:
ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்

பிரேசில் நாட்டில் நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி (Kayas Theory). அப்படித்தான் நாம் செய்யும் சின்னச்சின்னச் சூழலியல் தவறுகள், நம் சந்ததிகளையே பாதிக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள், நச்சு ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி விஷங்கள் போன்றவை பூமியை மட்டுமல்லாது சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறது. இதோடு சதுப்பு நிலக்காடுகளையும் அழித்து வருகிறது.

‘எதற்கும் உதவாத சாதாரண நிலங்கள்தானே இந்தச் சதுப்பு நிலங்கள்’ என்ற நம் அலட்சியத்தின் விளைவால், சூழல் சூனியமாகிக் கிடக்கிறது. பருவம் தவறி மழை பெய்கிறது. வெள்ளச்சேதம் ஏற்படுகிறது. கடல் சீறுகிறது. மனிதகுலம் எதிர்கொள்ளும் சூழல் சார்ந்த பிரச்னைகளின் பின்னணியில் ஈர நிலங்கள் எனப்படும் சதுப்பு நிலங்களின் அழிவும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. ‘அதென்ன ஈர நிலங்கள்?’ உலகெங்கிலும் உள்ள ஈரமான புல்வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், பவளத் திட்டுகள், தாழ்வான நிலங்கள், குளம், குட்டைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நெல் வயல்கள், சதுப்பு நிலக்காடுகள் போன்றவைதான் ஈர நிலங்கள். இவற்றில் கடலுக்கும் நிலப்பகுதிக்கும் இடையே ஆண்டு முழுவதும் நீர் தேங்கியிருக்கும் நிலப்பரப்புகள்தான் ‘சதுப்பு நிலங்கள்’. இவற்றின் ஆழம் குறைவாக இருக்கும். இந்த நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும், இவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் ‘ராம்சர்’ என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்

உலக அளவில் ஈர நிலங்களின் அழிவைத் தடுத்தல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நாடுகளின் ஆலோசனைக் கூட்டம், 1971-ம் ஆண்டு, ஈரான் நாட்டிலுள்ள ராம்சர் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈர நிலங்கள் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை தீர்மானங்களாக இயற்றப்பட்டன. இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட நாளான பிப்ரவரி 2-ம் தேதி, ‘உலக ஈர நில நாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

161 நாடுகள் அங்கத்தினர்களாக இருக்கும் இந்த ராம்சர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. முதன்முதலில் ராம்சர் நகரில் கூடியதால், இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு, அவற்றில் சிறப்பானவை என 1,950 சதுப்பு நிலங்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்திய அளவில் 25 சதுப்பு நிலங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கோடியக்கரை, பழவேற்காடு ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி கொண்டாடப்படும் உலக ஈர நில நாளன்று ஒரு விழிப்பு உணர்வு வாசகத்தை இந்த அமைப்பினர் அறிமுகப்படுத்துவார்கள். ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் தேவையை உணர்த்தும் வகையில் அந்த வாக்கியம் இருக்கும். கடந்த ஆண்டு, ‘ஈரநிலங்கள்தான் பேரழிவினால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பவை’ (Wetlands for Disastar Risk Reduction) என்ற வாசகத்தை வெளியிட்டார்கள். இந்த ஆண்டு, ‘ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த நீடித்த எதிர்காலம்’ (Wetlands for a Sustainable Urban Future) என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளார்கள்.

உண்மையில் ஈரநிலங்கள் ஆபத்தில் இருக்கின்றனவா என்று கேட்டால், ‘அவை பெரும் அபாயத்தில் இருக்கின்றன’ என்பதுதான் பதில். பெருகிவரும் நகரங்கள், தொழிற்சாலைகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், சுற்றுலாத்தலங்கள், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள்... போன்றவற்றால் மிகப்பெரிய அழிவைச் சந்தித்து வருகின்றன ஈர நிலங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்

இப்படி ஈர நிலங்கள் அழிக்கப்பட்டால், உயிர்ச்சங்கிலி உடையும். பல்லுயிர் வளம் பாதிக்கப்படும். சூழல் சூனியமாகும். நிலத்தடி நீர்வளம் நீர்த்துப் போகும். முக்கியமாக, கடல் நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்று போகும். உணவுச் சங்கிலியின் உறுதியான பிணைப்பை உறுதி செய்யும் ஈர நிலங்களின் அழிவு பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆழிப்பேரலையான சுனாமியின் சீற்றத்தைத் தடுத்ததில் அலையாத்திக்காடுகள் ஆற்றிய மகத்தான பணியை நாம் மறந்துவிடக் கூடாது.

கடற்கரையோரங்களில் கோடிகளைச் செலவிட்டுக் கொட்டப்படும் கான்கிரீட் கற்களைவிட, ஆயிரம் மடங்கு மேலானவை அலையாத்திக்காடுகள். நத்தைகள், சேற்று நண்டு, சிங்கி இறால், பால் இறால், நீர் பல்லி, கடற்புல், ஆக்காட்டிக் குருவி, வெண்கொக்கு, ஊரி, நாரை, கண்டற்சிப்பி, பலவகையான மீன்கள் என ஆயிரக்கணக்கான உயிர்களின் உறைவிடமாக இருப்பவை ஈர நிலங்கள். சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் கார்பனைச் சேமித்து, பகிர்ந்தளிப்பதில் சிறப்பாகப் பணியாற்றுபவை ஈர நிலங்கள். இந்த ஈர நிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஏனென்றால் உங்கள் மனதும் ஓர் ஈர நிலம்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism