Published:Updated:

‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஜூனியர் கோவணாண்டி சுரீர் கடிதம்கடிதம்ஜூனியர் கோவணாண்டி

‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஜூனியர் கோவணாண்டி சுரீர் கடிதம்கடிதம்ஜூனியர் கோவணாண்டி

Published:Updated:
‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

“இப்ப மய்யமா பேசுறதுக்காகக் கிளம்பி வந்திருக்காரே நம்மவர் கமலஹாசன்... அவரு நடிச்ச ஒரு படம் பாபநாசம். அந்தப் படத்துல ஒரு கொலை நடந்துடும். அதைக் கண்டுபிடிக்கறதுக்காகப் போலீஸ் படாத பாடுபடும். அப்பா-அம்மா, அப்புறம் ரெண்டு பொண்ணுங்க உள்ள ஒரு குடும்பத்துமேல போலீஸூக்குச் சந்தேகம் வந்து, மொத்தப் பேரையும் தூக்கிட்டுப்போய் லாடம் கட்டுவாங்க. ஆனா, ஒருத்தர்கூடத் தவறியும் மாத்திச் சொல்லமாட்டாங்க. எந்த ரூட்டுல கேட்டாலும் வரி மாறாம, ஒரே மாதிரிதான் பதில் சொல்லுவாங்க. போலீஸே மிரண்டு போயிடும். அப்படி ஒரு டிரெயினிங்கை அந்தக் குடும்பமே எடுத்திருக்கும். பல தடவை ஒத்திகை பாத்திருக்கும். கடைசிவரைக்கும் துளிகூடக் கண்டே பிடிக்கமுடியாம போலீஸ் ஓஞ்சிப்போயிரும்.

இப்பக் காவிரி விஷயத்துல பி.ஜே.பி-யும் அதோட பரிவாரப் படைகளும் இப்படித்தான் கிளம்பியிருக்காங்க.

‘கோதாவரியையும் காவிரியையும் இணைக்கப் போறோம்னு’ சமீபத்துல நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாயைத் தொறந்தாரு. அதிலிருந்து பார்த்தீங்கனா அந்தக் கட்சியைச் சேர்ந்த நண்டுசிண்டு வரைக்கும் ஒரே குரல்ல அதையே ஊர் முழுக்க ஓத ஆரம்பிச்சிருக்காங்க. காவிரி டெல்டா மாவட்டங்கள்ல புகுந்து புறப்பட ஆரம்பிச்சிருக்கிற பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் தொண்டர்படை, ‘இனி காவிரி தண்ணியையெல்லாம் எதிர்பார்த்துக்கிட்டு வாழ்க்கையைத் தொலைச்சுடாதீங்க’னு ஆறுதல் சொல்ற மாதிரி ஆரம்பிச்சி, ‘எங்க மோடி ஒரே கையெழுத்துல கோதாவரியையும் காவிரியையும் இணைச்சு, தமிழ்நாட்டுக்குத் தண்ணியைக் கொண்டுவந்துடுவாரு’னு விவசாயிகள நேரடியா சந்திச்சி, பிரசாரம் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னா, அதுவே நிஜமாயிடும்னு சொல்லுவாங்கள்ல, அந்த மாதிரியா இந்த வேலையில இறங்கியிருக்காங்க.

‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

அட வெக்கம்கெட்டவங்களா... ‘பசி உயிர் போகுது. எனக்குனு எடுத்துவெச்ச இட்லி எங்க’னு கேட்டா, ‘கொஞ்சம் பொறுத்துக்கோ, பக்கத்து ஊர்ல சமைச்சிக்கிட்டிருக்காங்க. சீக்கிரமே கெட்டிச் சட்னியோடு இட்லி வந்துடும்’னு கதையா விடறீங்க... கதை.

மக்களே... இப்படி யாராவது ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு வந்தா... வழக்கமா உங்க ஸ்டைல்ல சுழற்றி அடிப்பீங்களே... அதுமாதிரி சுழற்றி அடிங்க. நெல்லு கதிரைக் களத்துல போட்டுப் பொரட்டிப் பொரட்டி அடிப்பீங்கள்ல... அப்படி அடிச்சு ஓட்டுங்க. காவிரி நம்மளோட பிறப்புரிமை. அதுல கை வைக்கிறத ஒரு நாளும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்க முடியாது. விட்டுத்தரவும் முடியாது. உச்ச நீதிமன்றம் வரைக்கும் போயும் நமக்கு நியாயம் கிடைக்கல. அதுக்காகப் போராடிக்கிட்டிருந்தா யோசனைங்கிற பேர்ல வர்றவங்க போறவங்கள்லாம், மேற்கொண்டு புண்ணைச் சொறிஞ்சிவிட்டுட்டுப் போறாங்க.

ஒரு காலத்துல ‘கங்கையையும் காவிரியையும் இணைக்கப் போறோம்னு’ கதர் சட்டையைப் போட்டுக்கிட்டுச் சொகுசா திரிஞ்ச காங்கிரஸ் கட்சிக்காரங்க... அரை நூற்றாண்டுக்கு மேலாகவும் அதே கதையை அடிச்சி விட்டுக்கிட்டிருந்தாங்க. தேனாறும் பாலாறும் ஓடப்போகுதுனு தேர்தலுக்குத் தேர்தல் கூவிக்கிட்டிருந்தாங்க. கடைசியில, விவசாயத்துக்குச் சங்குதான் ஊதினாங்க. வந்தவரைக்கும் லாபம்னு இருக்கிற தண்ணியை வெச்சி மானாவாரி விவசாயத்தையாவது பார்த்துத் தொலைப்போம்னு உக்கார்ந்தா... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறது கணக்கா, கோதாவரியை இணைப்போம்... நைல் நதியை இணைப்போம்... அமேசான் நதியை இணைப்போம்னு இந்தக் காவி கட்டிக்கிட்டு அலையுற பி.ஜே.பி-காரங்க, இப்பக் கலர் கலரா ரீல்விட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

சரி இந்த அரசியல்வியாதிங்களுக்கு வேலையே இதுதான்னு பார்த்தா, விவசாயிகளுக்காகவே அவதாரம் எடுத்தவர்னு ஐம்பது, அறுபது வருஷமா பேர் சுமந்துகிட்டிருக்கிற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதனும் வழக்கம்போலக் கிளம்பிட்டாரு. வயசாக வயசாக உண்மைகளை உணர்ந்து, செஞ்ச தப்புக்குப் பிராயசித்தம் தேடுவாங்கனு பேரு. ஆனா, இந்த விஞ்ஞானி என்னடான்னா... இந்தத் தொண்ணூறு வயசுலயும் மாறவே இல்ல போலிருக்கு.

பசுமைப் புரட்சிங்கிற பேருல, நாடு முழுக்க இருக்கற நிலங்கள்ல ரசாயன உரங்களக் கொட்டி, பூச்சிக்கொல்லிகளை ஊத்திவிட்டுச் சீக்காளிங்க நாடா மாத்தினதுக்குப் பிராயசித்தமா, ‘இயற்கை விவசாயம்தான் நல்லது. ஆனா, அதைக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் சாதிக்க முடியும்னு’ சில நாட்களுக்கு முன்ன சொல்ல ஆரம்பிச்சாரு சாமிநாதன். வாய் வார்த்தையோட மட்டுமில்லாம... கொல்லிமலை உள்ளிட்ட சில ஊர்கள்ல பழங்குடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தையும் அவரோட நிறுவனம் சார்புல கத்துக் கொடுக்கவும் ஆரம்பிச்சாரு. சரி, மனுஷன் திருந்திட்டார்னு பார்த்தா, அப்பப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறனது கணக்கா... மாத்தி மாத்தி பேசிக்கிட்டே இருக்காரு.

சாமிநாதன் பெரிய தொண்டு நிறுவனம் நடத்திக்கிட்டிருக்காரு. அதுக்காக அவர் பேசலாம். பாக்யஸ்ரீ, பத்மஸ்ரீனு ஏகப்பட்ட விருதுகளும் அவருக்குத் தேவைப்படலாம். அதுக்காக எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாருனு பார்த்தா... இப்பக் காவிரி விஷயத்துலயும் மூக்கை நுழைக்கறாரு. காவிக்கட்சிக்கும் கர்நாடகாவுக்கும் சொம்பு தூக்க ஆரம்பிச்சிருக்காரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

தர்மம், நியாயம், சட்டம் எல்லாம் பேசுற இதுமாதிரி ஆட்கள்... உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கச் சொல்லி மத்திய அரசுக்கும் கர்நாடகா அரசுக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டியதுதானே. அதைவிட்டுட்டு, ‘மக்களே... காவிரியை நம்பினா கதைக்காகாது; தண்ணீர் பயன்பாட்டைக் குறைச்சுக்கோங்க; நிலத்தடிநீரைச் சரியா பயன்படுத்துங்க; மழைநீரைச் சேமிங்க; குறைஞ்ச தண்ணியில அதிக லாபம் தரக்கூடிய பணப்பயிரைப் பயிர் பண்ணுங்க’னு விவசாயிகளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிருக்காரு சாமிநாதன். அதுமட்டுமில்லாம, காவிரியைக் கண்காணிக்கிறதுக்குக் குழு அமைச்சா, அதுல யாரையெல்லாம் போடலாம், தன் பங்குக்கு ஒரு சிபாரிசு பட்டியலைத் தயார் பண்ணவும் ஆரம்பிச்சிட்டாரு. இதன்படி ஒரு குழு அமைஞ்சா, அது எப்படி இருக்கும்கிறது அந்தக் காவிரி ஆத்தாளுக்குத்தான் வெளிச்சம்.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் சாமிநாதன் மாதிரியானவங்களுக்கு, ஏதாவது ஒரு பதவி கிடைச்சிடுது. அந்தஸ்து, அதிகாரம், அரசாரங்கத்தோட நிலம்னு எல்லாமே வந்து சேர்ந்துடுது. விவசாய விஞ்ஞானிங்கிற பேர்ல இதையெல்லாம் அனுபவிக்கிற இவரு, என்னிக்காச்சும் விவசாயிகளுக்குச் சேரவேண்டியதை, அந்த அரசாங்கங்கள்கிட்ட இருந்து வாங்கிக் கொடுத்திருக்காரா?

கதர் ஆட்சிக் காலத்துல, விவசாயிகளோட உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை கொடுக்கறதுக்காக, ஒரு கமிஷனைப் போட்டாங்க. அதுக்கு இந்த ஐயாதான் தலீவரு. பல மாசங்களா அலசி ஆராய்ஞ்சி... விவசாய விளைபொருளுக்கு உற்பத்திச் செலவுக்குமேல 50 சதவிகித லாபம் கிடைக்கறதை அரசாங்கம் உறுதிப்படுத்தணும்னு ஆய்வறிக்கையைக் கொடுத்தாரு. அதைத் தூக்கி மூலையில போட்டுடுச்சு கதர். அடுத்துக் காவிங்க ஆட்சிக்கு வந்து நாலு வருஷம் ஆகப்போகுது. ஆனாலும் அந்த அறிக்கைக்கு உயிர் வரல. முடிஞ்சா, எதையாச்சும் விவசாயிகளுக்குச் சாதிச்சு கொடுக்கணும். இல்லைனா... போர்த்திக்கிட்டுத் தூங்கிடணும். அதையெல்லாம் விட்டுட்டுக் காவிரி விஷயத்துலயும் விவசாயிங்களுக்குப் பாதகமா பேசினா எப்படி?

உங்களுக்கு விருது வேணும்னா... இன்னும் கண்டுபிடிங்க. காத்துல இருக்கிற தண்ணியிலயே விவசாயம் பண்ணலாம், ஏன்? தினம் தினம் மனுஷன் துப்புற எச்சியில இருந்துகூட விவசாயம் பண்ணலாம்; சூரியன்ல போய் இறங்கி, சுடுதண்ணி வெச்சி விவசாயம் பண்ணலாம்னுகூடச் சொல்லிட்டுபோங்க. அதுக்காக அமைதி விருதுல ஆரம்பிச்சி, ஆயிரத்தெட்டு விருதுகளை வாங்கிக் குவிச்சுக்கோங்க. யாரும் வேணாங்கல. ஆனா, மறுபடி மறுபடி விவசாயிகளோட வாழ்க்கையில விளையாடறதுக்குத் திட்டம் போடாதீங்க.

‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

காவிரியில கடைமடை விவசாயிக்குதான் உரிமை ஜாஸ்திங்கிறது, உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம். ஆனா, அந்தக் காவிரி தண்ணி ஓடற கும்பகோணம் பகுதியில பொறந்து, காவிரி தண்ணியைக் குடிச்சி வளர்ந்த உங்களுக்கு, அது தெரியலங்கிறத நினைச்சுக்கூடப் பாக்க முடியல. நிலத்தடி நீரைப்பயன்படுத்துறது, தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துறது எல்லாம் சரி. ஆனா, காவிரியில தண்ணி வந்தாத்தானே அதையெல்லாம் சாதிக்க முடியும். இப்பத் தண்ணி இல்லாததால ஊரு பூராம் ஆத்தையும் கொளத்தையும் தோண்டி மண்ணை அள்ளித் திங்கறானுங்க, படுபாவி அரசியல்வியாதிங்க. அதுக்கு எதிரா உங்களால குரல் கொடுக்கமுடியுமா? ஆறு, குளம், ஏரினு எல்லாத்தை சுத்தியும் ஃபாக்டரி, ஆஸ்பத்திரினு கட்டிவிட்டுக் கழிவையெல்லாம் அதுலதான் கலந்துவிடறானுங்க... அதைத் தடுக்க முடியுமா உங்களால? முக்கியமான நீர்நிலைகளையொட்டி நிலத்தடிநீரை உறிஞ்சி மினரல் வாட்டர் தயாரிக்கிறதுக்கு அனுமதி கொடுத்து, அதுக்கும் வேட்டு வெச்சாச்சு... அதைத் தடுக்க முடியுமா?

காவிரித் தண்ணியை இனிமே எதிர்பார்க்காதீங்கனு திரும்பத் திரும்பச் சொன்னா, காவிரி விவசாயிங்க மனசளவுல மாறிடுவாங்க அப்படிங்கறதுக்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கறது அத்தனை சுலபமில்லனு வெளிப்படையாவே சொல்றார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. சீக்கிரமே கர்நாடாகவுல வர இருக்கிற சட்டமன்றத் தேர்தல்ல பி.ஜே.பி ஜெயிக்கணும்கிறதுக்காகத் தமிழ்நாட்டையே காவு கொடுக்கவும் துணிஞ்சிட்டாரு கட்கரி. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இவர்தான் நீர்வளத்துறை அமைச்சர்.

உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் இப்படிப் பேசுறவர்கிட்ட என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்? அதேபோல, ‘காவிரியில தமிழ்நாட்டுக்குத் தண்ணியைத் திறக்கவே கூடாது’னு தொடர்ந்து கொடிபிடிக்கிறாரு மத்திய அமைச்சராக இருக்கிற அனந்தகுமார். இவரு கர்நாடகக்காரர். இந்தியாவுக்கே அமைச்சரா இருக்கிறவர், இப்படி ஒரு மாநிலத்துக்குச் சார்பா பேசினா, உடனடியா பதவியில இருந்து தூக்கி வீசணும். ஆனா, இவர் நரேந்திர மோடி அமைச்சரவையில உக்கார்ந்துகிட்டு, கர்நாடாகவுக்கு மட்டுமே அமைச்சர் வேலை பார்த்துக்கிட்டிருக்கார். இதையெல்லாம் தட்டிக்கேக்கறது தைரியம் இருக்கா உங்களுக்கு? ஆனா, அவங்களுக்கு வால்பிடிக்க மட்டும் முந்திக்கிட்டு வந்து நிக்கறீங்க.

அய்யா... சாமிநாதா, விவசாயிகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்சுட்டிருக்கிறது உண்மைனா... நான் சொன்னதைக் கேக்காத இந்த அரசாங்கங்களை, நான் துரும்பாகூட மதிக்கலனு சொல்லி, அவங்க கொடுத்திருக்கிற பதவிகளையும் பரிசுகளையும் விருதுகளையும் தூக்கிக் கடாசுங்க. அதுக்குப் பிறகு எங்ககிட்ட வந்து உங்க அறிவுரைகளைச் சொல்லுங்க கேட்டுக்கிறோம்.

இப்படிக்கு,
ஜூனியர் கோவணாண்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism