Published:Updated:

‘கொல்கத்தா கோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி!

நவீன் இளங்கோவன்
‘கொல்கத்தா கோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி!
‘கொல்கத்தா கோர்ட்டில் ஆஜராகுங்கள்’ - பயிர்க்கடனுக்காக ஈரோடு விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பிய வங்கி!

‘வங்கியில் பெற்ற பயிர்க்கடனை கட்டச் சொல்லி அறிமுகமில்லாதவர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர். இந்த அச்சுறுத்தல் மற்றும் குடும்ப மானம் கருதி தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வருகிறது’ எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் பயிர்க்கடனுக்கான, அந்தியூரில் உள்ள தனியார் வங்கியை அணுகியிருக்கின்றனர். நிலத்தை அடமானமாக எழுதிக் கேட்டு, பயிர்க்கடனை வழங்கியிருக்கிறது வங்கி. ஆரம்பத்தில் ஒரு சில மாதங்கள் கடனைக் கட்டிய விவசாயிகளுக்கு, தொடர் வறட்சி மற்றும் நிலத்தில் வருமானம் இல்லாததால், பயிர்க்கடன் தவணையை சரிவரச் செலுத்த முடியாமல் போயிருக்கிறது. அதையடுத்து, பயிர்க்கடன் தவணையைக் கட்டச் சொல்லி, அறிமுகமில்லாத நபர்கள் சம்பந்தப்பட்ட விவசாயிகளைத் துன்புறுத்துவதாகவும், இரவு நேரங்களிலும் போனில் தொடர்புகொண்டு கடனை கட்டச் சொல்லி தொந்தரவு கொடுக்கின்றனர் என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, வங்கித் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, வங்கியின் நடைமுறை வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. எனவே, எங்களுடைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடனை திருப்பிக் கட்டும் காலத்தை தள்ளிப் போட்டும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இருந்தும் வங்கி தரப்பு அசைந்து கொடுக்காமல் இருந்திருக்கிறது. அதையடுத்து, கடைசி நம்பிக்கையாக ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த விவசாயிகள், தங்களுடைய குமுறல்களை கொட்டித் தீர்த்திருக்கின்றனர்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ``வருடந்தோறும் வட்டியோடு தவணையும் சேர்த்து பயிர்க்கடனை கட்டச் சொல்லியது வங்கி. ஓரிரண்டு ஆண்டுகள் சரியான காலத்தில் தவணைத் தொகையை கட்டினோம். ஆனால், சென்ற ஆண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக அறுவடை சரியாக நடைபெறவில்லை. எங்களுடைய இயலாமையை வங்கியிடம் தெரிவித்தும், வங்கி எங்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள மறுக்கிறது. ஏஜென்ட் மூலமாகக் கடன் வசூல் செய்ய வைத்து, எங்களைப் பல வழிகளில் பயமுறுத்துகின்றனர். உறவினர்கள் எங்களைக் கேவலமாக பார்க்கின்றனர். இதே நிலை நீடித்தால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வங்கிக் கிளையில் நாங்கள் வாங்கிய பயிர்க் கடனுக்கு, கொல்கத்தா கோர்ட்டில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். வங்கியின் இந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகள் எங்களுடைய மனதை மேலும் காயப்படுத்துகின்றன. நாங்கள் கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி கேட்கவில்லை. திருப்பிக் கட்ட வேண்டிய தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப் போட்டு, கால அவகாசம் கொடுக்க வேண்டுகிறோம்” என்றார்.