அலசல்
Published:Updated:

மழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!

மழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!

மழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!

மேட்டூர் அணை திறக்கப்பட்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வில் இந்த ஆண்டு வசந்தம் வீசும் என்று பெருமிதத்துடன் சொல்கிறது தமிழக அரசு. ஆனால், இருக்கும் தண்ணீரை வைத்து கோடையில் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்யாமல், தங்கள் வயிற்றில் அடித்ததாக அரசைக் குற்றம்சாட்டுகிறார்கள் டெல்டா விவசாயிகள். 

‘‘அறுவடை முடிஞ்சு நேரடிக் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மூட்டைகளைக் கொண்டுவந்தோம். அங்கே, சாக்குப் பைகள் இல்லைன்னு சொல்லி, நெல்மூட்டைகளை வாங்க மறுத்துட்டாங்க. அதனால, வாரக்கணக்குல வெட்டவெளியில நெல்லு கிடைக்கு. இந்த மழையில நெல்மூட்டைகள் எல்லாம் நனைஞ்சுபோச்சு. டெல்டா பகுதிக்கு ரெண்டு அமைச்சர்கள் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருமே நாங்க கஷ்டப்படுறதை வேடிக்கை மட்டும் பார்க்கிறாங்க...” என்று கொதிக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் அறுவடை செய்த விவசாயிகள், நேரடிக் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளைக் கொண்டுசெல்கிறார்கள். ஆனால் அங்கு, நெல்மூட்டைகளை வாங்க மறுக்கிறார்கள். அதனால், பல விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் கொடுமையும் நடக்கிறது.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ‘‘கோடை நெல் சாகுபடி செய்ற விவசாயிகளுக்கு 12 மணிநேரம் மும்முனை மின்சாரம், மானிய விலையில் தரமான விதைகள் வழங்கப்படும்னு தமிழக அரசு கூறியது. அதனால்தான், கோடை நெல் சாகுபடி செஞ்சோம். இப்போ, போதிய அளவு சாக்குப் பைகள் இல்லைனு சொல்லி, நெல்லை வாங்க மறுக்குறாங்க. இதனால, நாங்க கொண்டுபோற நெல், மழையில் நனைஞ்சு தரம் குறையுது. நனைஞ்ச நெல், குறைவான விலைக்குதான் போகுது. இதனால, ஏக்கருக்கு மூவாயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரம் ரூபாய்வரை இழப்பு ஏற்படுது. மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான நெல் கொள்முதல் ஒப்பந்தம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிஞ்சுபோச்சு. அதனால்தான், சாக்குப் பைகளுக்கு ஏற்பாடு செய்யலைனு அதிகாரிகள் சொல்றாங்க. தமிழக உணவு அமைச்சர் காமராஜும், விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் டெல்டா மாவட்டத்துக்காரங்க. இவங்களுக்கு டெல்டா விவசாயிகள்மீது அக்கறையே கிடையாது” என ஆதங்கப்பட்டார்.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கேட்டோம். ‘‘தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ளோம். விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் பேசினோம். ‘‘நெல் கொள்முதலில் ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அதற்கும் இந்திய உணவுக் கழகத்துக்கும் சம்பந்தமில்லை. சாக்குப்பைகள் பற்றாக்குறை எனச் சொல்வதும் உண்மை யில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது, இப்போதும் நடைமுறையில் உள்ளது. ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வோம். இந்திய உணவுக் கழகத்தின் ஒப்பந்தம் முடிந்தாலும், இங்குள்ள விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்துகொண்டுதான் இருக்கும். இந்த ஆண்டு ஒரே நேரத்தில் அதிகமான நெல் அறுவடை செய்யப்பட்டு வந்ததால், ஒரு சில நாள்கள் மட்டும் நெல் கொள்முதல் செய்வதில் தேக்கம் ஏற்பட்டது. இப்போது, அது சரியாகிவிட்டது” என்றார்.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜீவாகுமார், ‘‘உணவு அமைச்சர், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார். இந்திய உணவுக் கழகத்துடனான ஒப்பந்தம் முடிந்துபோனதும், போதிய சாக்குப்பைகள் இல்லை என்பதும் ஊரறிந்த விஷயம். இப்போதும்கூட, கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில நெல்மூட்டைகள் கிடக்கின்றன. விவசாயிகள் பெரும் சோகத்துடன் காத்துக் கிடக்கிறார்கள். ஒரே சமயத்தில் நெல் அறுவடையாகி வந்ததால்தான் கொள்முதல் சுணக்கம் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றார்.

செயல்படுங்கள் அமைச்சர்களே!

- கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: ம.அரவிந்த்