Published:Updated:

`கொத்து, கொத்தா, சரிஞ்சு கெடக்குது!'- புதுக்கோட்டை பலா விவசாயிகள் கண்ணீர்

`கொத்து, கொத்தா, சரிஞ்சு கெடக்குது!'- புதுக்கோட்டை பலா விவசாயிகள் கண்ணீர்
`கொத்து, கொத்தா, சரிஞ்சு கெடக்குது!'- புதுக்கோட்டை பலா விவசாயிகள் கண்ணீர்

கஜா புயலால் பலா மரங்கள் சாய்ந்ததால், சாகுபடி பாதிக்கப்பட்டு, இந்த வருட சீசனில் பலாப்பழம் விலை அதிகரிப்பதோடு, தட்டுப்பாடு ஏற்படும் எனப் பலா விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகளிடம் பேசியபோது, ``முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் தித்திக்கும் சுவை உடையது என்பதால், அனைத்து தரப்பினரும் விரும்புவார்கள். தமிழகத்தில் பண்ருட்டிக்கு அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் பலா அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பண்ருட்டி பலாப்பழங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு அதிகளவில் போனாலும், பெரும்பாலும் உள்ளூர் தேவையை புதுக்கோட்டை மாவட்ட பலாப்பழங்கள்தான் பூர்த்தி செய்து வந்தது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்ட பலாப்பழங்களுக்கே கிராக்கி அதிகம்.

மாவட்டத்தில், ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், குளமங்கலம், மாங்காடு, நெடுவசால் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் 800 ஹெக்டர் பரப்பில் பலா சாகுபடி நடைபெற்று வந்தது. சீசனின்போது பலாப்பழங்கள் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை சூடுபிடிக்கும். பலாப்பழம் அளவைப் பொறுத்து ஒன்று ரூ.80 முதல் 350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, கஜா புயலின் கொடூரத் தாக்குதலால், பலா மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலா காய்ப்பு தொடங்கி உள்ள நிலையில், மாவட்டத்தில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பலா மரங்கள் புயலின் கொடூரத் தாக்குதலால், வீழ்ந்து கிடக்கிறது. இதனால், வரும் சீசனில் பலாப்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். விலை உயரும்" என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பலா விவசாயி ராமு கூறுகையில், ’வழக்கமா, இப்ப காய்ப்பு தொடங்கிடும். மார்ச் இறுதியில அறுவடை செய்வோம். ஏப்ரல், மே சீசன் சந்தைக்கு வந்திடும். இப்போ, எல்லாம் கொத்து, கொத்தா, சரிஞ்சு கெடக்குது. இந்த வருஷம் பலாப்பழத்துக்கு பலா மரத்தை வளர்த்து மகசூல் கிடைக்க 5 வருஷத்துல இருந்து 8 வருஷம் வரை ஆகும். பலாவை நம்பியே வாழ்க்கை ஓட்டி வந்த நாங்கள் இனி என்ன செய்யப்போறம்னு தெரியல. எங்களுக்கு அரசு நிவாரணம் கொடுத்தாதான் இப்போதைக்கு எங்களால இந்த பாதிப்பில் இருந்து மீள முடியும்" என்கிறார்.