Published:Updated:

`படைப்புழுக்கள் தாக்குதல்' - வேதனையில் மக்காச்சோளம் விவசாயிகள்!

`படைப்புழுக்கள் தாக்குதல்' - வேதனையில் மக்காச்சோளம் விவசாயிகள்!
`படைப்புழுக்கள் தாக்குதல்' - வேதனையில் மக்காச்சோளம் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிரில் படைப்புழுக்கள் தாக்கி வருவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளம் யூனியன்களில் சுமார் 5,000 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பெய்ததும் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பனையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சங்குபுரம், கரிவலம்வந்தநல்லூர், மீனாட்சிபுரம், சொக்கலிங்கபுரம், பெரியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 20 தினங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில், படைப்புழுக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.

ஆர்மிவார்ம் என அழைக்கப்படும் படைப்புழு அமெரிக்காவைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்தப் புழுக்களின் தாக்குதல் காரணமாக பனையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய விவசாயி கணேசராஜா, ``எங்கள் பகுதியில் கடந்த 5 வருடங்களாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறோம். இந்த வருடம் உரிய நேரத்தில் மழை பெய்ததால் பயிர் நன்றாக வளர்ந்து ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யும் அளவுக்கு இருக்கிறது. 

ஆனால், திடீரென படைப்புழுக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. செடியின் இலை, கதிர் ஆகியவற்றை முற்றிலுமாக அவை தின்று சேதப்படுத்தி அழித்து வருகின்றன. பல கட்டங்களாக ரசாயன உரங்கள் அடித்துப் பார்த்தும் அந்தப் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறோம். கூட்டமாக வரக்கூடிய இந்தப் புழுக்கள், அனைத்து மக்காச்சோள செடிகளையும் அழித்து விடுவதால் விவசாயமே பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. வேளாண்துறையினர் ஆய்வு செய்து புழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். 

இது குறித்து வேளாண் இணை இயக்குநர் செந்தில் வேல்முருகனிடம் கேட்டதற்கு, ``நெல்லை மாவட்டத்தில் இரு யூனியன்களில் படைப்புழுத் தாக்கம் இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்தப் பகுதிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கி வருகிறோம். 

மழைக்காலங்களில் கட்டுக்குள் இருக்கும் இந்தப் புழுக்கள், வெயில் காலங்களில் சற்று அதிகமாகத் தாக்குதல் நடத்துகின்றன. அதனால் அவற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நெல்லை மாவட்டத்தில் படைப்புழுக்களின் தாக்குதல் கட்டுக்குள் இருக்கிறது. தொடர்ந்து அதைக் கண்காணித்து வருகிறோம்'' என்றார், நம்பிக்கையுடன்.