Published:Updated:

ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

பாரம்பர்யம்இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன், வி.சதீஷ்குமார், சி.சுரேஷ்பாபு

ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

பாரம்பர்யம்இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன், வி.சதீஷ்குமார், சி.சுரேஷ்பாபு

Published:Updated:
ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

மிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கியமான மாதம் ஆடி. ஆடி மாதம் தென்மேற்குப் பருவமழைக்காலம் என்பதால்... பெரும்பாலான மானாவாரிப்பயிர் களுக்கு இப்பட்டம்தான் முக்கியமானது. அதனால்தான், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர். அதில்லாமல், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடித்தபசு எனப் பல விழாக்களை இம்மாதத்தில் கொண்டாடுகின்றனர். அவற்றோடு, மானாவாரி விவசாயப்பகுதிகளில், ‘ஆடிப்பொம்மை கொளுத்துதல்’ எனும் சடங்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். மானாவாரி பகுதிகளில் மழை வேண்டி இச்சடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

இச்சடங்கு குறித்து ‘நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்’ ஆ.சிவசுப்பிரமணியனிடம் பேசினோம். “ஆடி மாதத்தை ‘சூனிய மாதம்’ எனக் குறிப்பிட்டு... அம்மாதத்தில் புதுமனை புகுதல், திருமணம் நடத்துதல் போன்ற மங்கல நிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள். கிணறுகளில் இம்மாதம் வீசும் வறட்சியான காற்றினால் நீர் குறையும். இதனால், ‘ஆடிக்கோடை’ எனவும் இக்காலத்தைக் குறிப்பிடுவார்கள். இம்மாதத்தில் உணவுத் தானியங்களின் விலை அதிகரிக்கும். இம்மாதத்தில் நிகழும் ஒரு நாட்டார் சடங்குதான் ஆடிப்பொம்மை கொளுத்துதல். கொறளி, குறளிப்பொம்மை, குறளியம்மா, சீலப்பொம்மை, சேலைப் பொம்மை, பம்பை என்று ஆடிப் பொம்மைக்குப் பல பெயர்கள் உண்டு.

ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

தூத்துக்குடி மாவட்டத்தின் கரிசல் நிலப்பகுதிகளான எட்டயபுரம், சிந்தலக்கட்டை, ஒட்டப்பிடாரம், கட்டமல்லூரணி, சந்திரகிரி, வீரப்பட்டி, இளவேலங்கால், கசவங்குன்று ஆகிய கிராமங்களில்... ஆடிப்பொம்மை கொளுத்துதல் வழிபாடு தற்போதும் வழக்கத்தில் உள்ளது. சோளம், கம்பு போன்ற தானியத் தட்டைகளை ஒடித்து அவற்றை மஞ்சளில் நனைத்த துணியில் வைத்து, நன்றாகச் சுருட்டிப் பொம்மைபோல உருவாக்குவார்கள். இந்தப் பொம்மைகளை அவரவர் வீடுகளில் செய்து ஊரில் உள்ள குறிப்பிட்ட ஒருவரது வீட்டுக்குத் தனித்தனியே எடுத்து வருவார்கள். அதற்கென்றே கட்டப்பட்ட சிறு ஓலைக்குடிலில் எல்லாப் பொம்மைகளையும் குவித்து வைப்பார்கள்.

ஆறு நாள்கள் இந்தப் பொம்மைகளை வைத்து... அவற்றுக்குத் தினமும் மாலையில் முறுக்கு, சீடை, தட்டை, அதிரசம் எனப் படைத்துப் பெண்கள் அதை உண்பார்கள். ஒவ்வொரு நாளும் பெண்கள் குறளிப்பொம்மையின் முன்பு கும்மி அடிப்பார்கள். அம்மன் தெய்வங்கள் குறித்த முளைப்பாரிப் பாடல்களும் இங்கு பாடப்படும். ஏழாவது நாள் காலையில் ஆடிப்பொம்மைகளைப் பூவால் அலங்கரித்து ஊரின் வடக்கு எல்லையில் உள்ள புன்செய் நிலத்துக்குச் சாவுமேளம் ஒலிக்க எடுத்துச் செல்வார்கள். அங்கு சுள்ளிகளையும் சருகுகளையும் அடுக்கித் தீயிட்டு, அத்தீயில் பொம்மைகளைப் போட்டுக் கொளுத்துவார்கள்.

அந்த நேரத்தில், பெண்களும் சிறுமிகளும் கூடி ஆடிப்பொம்மையின் மறைவுக்காக...

‘வாயக் கட்டி வயித்த கட்டி
வளர்த்தனடி பொம்மை - இப்ப நீ
வாய்க்காலுத் தண்ணியில
போறாயடி பொம்மை.
காலக் கட்டி கையக் கட்டி
வளர்த்தனடி பொம்மை - இப்ப நீ
காலாங்கரைத் தண்ணியில
போறாயடி பொம்மை’ எனவும்
‘சிக்கெடுத்து சிணுக்கெடுத்து வளர்த்தனடி பொம்மை - நீ
சித்தாத்துத் தண்ணியில போறியடி பொம்மை
வாயக்கட்டி வவுத்தக்கட்டி வளர்த்தனடி பொம்மை - நீ
வாய்க்காலுத் தண்ணியில போறியடி பொம்மை
காலாங்கரைத் தண்ணியிலே - நீ
காத்தாப் போறியடி பொம்மை’
என ஒப்பாரிப் பாடல்கள் பாடுவார்கள்.

தீ அணைந்த பிறகு எரிந்த பொம்மைகளின் சாம்பலைத் திரட்டி அள்ளி, ஊர்த்தெப்பத்தில் போடுவார்கள். தெப்பத்தில் தண்ணீர் இல்லாவிட்டால் கிணற்றில் போடுவார்கள். ஆடிப்பொம்மைகளைக் கொளுத்திய இடத்தில், களிமண்ணால் சிறிய மண்மேடை அமைத்து மறுநாள் அதன்மேல், மஞ்சள் தூள் கலந்த பாலைத் தெளிப்பார்கள். இது ‘பூந்தண்ணி தெளித்தல்’ எனப்படும். மூன்றாவது நாள் மாலையில் கொழுக்கட்டை, பூம்பருப்புச் சுண்டல் (கடலைப் பருப்புச்சுண்டல்) ஆகியவற்றை மண்மேடையின் முன் படைப்பார்கள். ஆறாவது நாள் (ஆடி மாதத்தின் கடைசி நாள்) மங்கள மேளம் ஒலிக்கச் செய்து மாவிளக்கு ஏற்றி வைப்பர். இது ‘மோட்ச தீபம்’ எனப்படும்.

தானியத் தட்டையை உடலாகக் கொண்டும், தானியக் கதிரின் நிறமான மஞ்சள் நிறத்தில் ஆடை  உடுத்தியும் ஆடிப் பொம்மை உருவாக்கப்படுகிறது. இதைக் கொளுத்துமிடம் தானியங்கள் விளையும் கரிசல் நிலம். தானியத் தெய்வமாக இப்பொம்மை உருவகிக்கப்படுகிறது. பெண்ணாக உருவகிக்கப்படும் ஆடிப்பொம்மை தொடர்பான அனைத்துச் சடங்குகளிலும் பெண்களே முக்கியப்பங்கு வகிக்கின்றனர். விருத்தி மற்றும் செழிப்பின் சின்னமாகப் பெண்கள் கருதப்பட்டதால்தான் பெண்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இச்சடங்கின் நோக்கம், ஆடிக்குப் பிறகு மழை கிடைக்க வேண்டும் என்பதுதான்.

மானாவாரி நிலங்களுக்கு உரியப் பருவத்தில் மழை பெய்ய வேண்டியது அவசியம். ஆடி மாதத்தைத் தொடர்ந்து பெய்யும் மழையை வைத்துத்தான் பயிர்களின் வளர்ச்சி அமைகிறது. தாவர தெய்வத்தின் குறியீடாக அமையும் ஆடிப்பொம்மையைக் கொளுத்தி, அதன் சாம்பலை நீரில் போடுவதை மழைக்கான மந்திரமாக நினைக்கிறார்கள், மக்கள். மேலும் ஆடிப்பொம்மை கொளுத்தும் சடங்குடன் தொடர்புடைய பாடல்களில் வைகை, வைப்பாறு, சிற்றாறு ஆகிய ஆறுகளின் நீரில் ஆடிப்பொம்மை செல்வதாகக் குறிப்பிடுவதும் ஒருவகையில் மழையின் மந்திரமே. காலாங்கரை என்பது கரிசல் நிலத்தில் மழைநீர் செல்லும் ஓடையாகும். மழையே பெய்யாத ஆடி மாதத்தில் காலாங்கரையில் வெள்ளம் வந்ததாகவும் அவ்வெள்ளத்தில் ஆடிப்பொம்மை செல்வதாகவும் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இது மழை வேண்டுமென்ற உழவர்களின் விருப்பத்தினை வெளிப்படுத்தும் உளவியல் யதார்த்தமாகும்.

கரிசல் விவசாயத்துக்கு மழை எவ்வளவு இன்றியமையாததோ அந்த அளவுக்கு வெயிலும் அவசியம். சூரிய ஒளி நன்றாகக் கிடைக்காவிட்டால், பயிர்களின் வளர்ச்சி குறைதலும், பூச்சிகளின் தாக்குதலும் அதிகமாகும். ஐப்பசி, கார்த்திகை மழைக்காலங்களிலும், மார்கழி, தை போன்ற பனிக்காலங்களிலும் சூரிய ஒளி மிகவும் அவசியமாகிறது. எனவே, ஆடிப்பொம்மையைக் கொளுத்துவது தாவர வளர்ச்சிக்குத் தேவையான சூரிய ஒளியை உறுதிப்படுத்தும் ஒத்த மந்திரமாகிறது. காலப்போக்கில் ஆடிப்பொம்மையைத் தாவரத் தெய்வமாகக் கருதாமல், குறளி அல்லது குறளியம்மா என தெய்வ வழிபாடாகவே நினைத்துச் செய்து வருகின்றனர். இச்சடங்குகள் குறித்து அகநானூற்றுப் பாடல்களில் கூடக் குறிப்பிருக்கிறது” என்ற சிவசுப்பிரமணியண் ‘ஆடி வேட்டை’ குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

“ஆடிப்பொம்மையைப் போல ஒரு சடங்குதான், ‘ஆடி வேட்டை’. ஆடிவேட்டை என்ற பெயரில் சிறுவர்கள் எலி, ஓணான், சில்லான்(ஓணான் போன்ற பிராணி) போன்ற சிறு பிராணிகளை வேட்டையாடுவார்கள். இது ஆடிப்பொம்மை கொளுத்தும் நாள் அன்றோ அல்லது அந்த மாதத்தின் கடைசி நாளிலோ நடக்கும். சுமார் 5 முதல் 6 அடி நீளமுள்ள ஒரு குச்சியை எடுத்து அதில் மஞ்சள், கரி ஆகியவற்றால் தொடர்ச்சியாக வளையம் தீட்டுவர்.

இந்தக் கம்புகளை எடுத்துக்கொண்டு, ‘ஆனி போச்சு... ஆடி போச்சு... ஆவணியோ ஆவணி’ என்று கூவியபடியே செல்வார்களாம். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரைகூட இப்படிக் கூவிக்கொண்டே செல்வது வழக்கத்தில் இருந்துள்ளது. தற்போது, ‘ஆடி வேட்டை, ஆடி வேட்டை’ எனக் கூவியபடியே இந்தக் கம்புகளை எடுத்துக்கொண்டு சிறுவர்கள் வேட்டைக்குச் செல்கின்றனர். ஓணான், சில்லான் ஆகியவற்றைக் கொன்றுவிட்டு வீடு திரும்புவார்கள். ஆடிவேட்டையில் விவசாயத்தின் எதிரிகளாகக் கருதப்படும் எலி, ஓணான் ஆகிய பிராணிகளே கொல்லப்படுகின்றன. இது பயிர்களின் தொடக்ககால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது. எனவே ஆடிவேட்டை பயிர்ப்பாதுகாப்புச் செயலாக அமைகிறது.

ஒருங்கிணைந்த பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் செட்டிநாட்டுப் பகுதியில் ‘ராவண்டை போடுதல்’ என்ற சடங்கு மாசி மாதம் நிகழ்கிறது. அச்சடங்கின் ஓர் அங்கமாக, களிமண்ணால் சிறுவீடு ஒன்றைக் கட்டி... அதனுள் கிழவன், கிழவி, ராவாத்தாள், ஏழு கன்னிமார் எனப் பல உருவங்களை மண்ணால் செய்து வைப்பர். அம்மி, பானை, கனகு, அடுப்பு என வீட்டுச் சாமான்கள் பலவும் களிமண்ணால் செய்து வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாசி மாதம் அமாவாசை முடிந்த பிறகு, மூன்றாம் பிறை அல்லது ஐந்தாம் பிறையில் இருந்து முழுநிலா தோன்றும் நாள் வரை இவ்வீட்டின் முன் பலகாரங்கள் படைத்து, கும்மியடித்துக் கொண்டாடுவர். முழு நிலா நாளுக்கு மறுநாளன்று, காலையில் களிமண் உருவங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று குளத்தில் போடுவார்கள். ராவண்டை போடுதல் சடங்கும் மழை வேண்டியே நிகழ்த்தப்படுகிறது” என்று விளக்கமாகச் சொல்லி முடித்தார்.

ஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு!

“எங்க கிராமத்துல நடக்குது!”

ஆடிப்பொம்மை தயாரிப்பு முறை குறித்து, தூத்துக்குடி மாவட்டம் கசவங்குன்று கிராமத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி பாட்டியிடம் பேசினோம். “எனக்கு 70 வயசாகுது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த ஆடிப்பொம்மையைத் தீ வெச்சுக் கொளுத்துறச் சடங்கு எங்க கிராமத்துல நடக்குது. மழை பெய்யணும்னு வேண்டிக்கிட்டுதான் இதைச் செய்றோம். சோளத்தட்டை அல்லது கம்புத்தட்டைகளைத் தண்ணியில ஊறப் போடுவோம். மறுநாள் அதை எடுத்து வளைச்சுக்கட்டி மஞ்சள்துணியைச் சுத்தி கட்டுவோம். அதுக்குக் கை மாதிரி குச்சிகளைச் சேர்த்துக் கட்டுவோம். அதுக்குமேல விருப்பப்பட்ட ‘கலர்’ துணிகளைச் சேலைபோலக் கட்டி, பாசிமாலை, வளையல்களைப் போடுவோம். தலைப்பகுதியில் பூபோலக் கலர் தாளில் வட்டமாக வெட்டி ஒட்டி, அரிசிமாவால் முகத்தைச் செஞ்சு ஒட்ட வைப்போம். அதுல கண்ணுக்காக, குன்னி முத்துக்களை (குன்றிமணி) கறுப்பு, சிவப்பு நிறங்கள் மாறி மாறித் தெரிவதுபோல வைச்சுடுவோம். ஊருல வயசுக்கு வராத பெண் பிள்ளைகள் எத்தனை பேர் இருக்காங்களோ, அத்தனை பொம்மைகள் செய்வோம். இந்த வருஷம் 27 பொம்மைகள் செய்யப் போறோம். ஆடி மாசம் மூணாவது செவ்வாய்க்கிழமைதான் ஆடிப்பொம்மை செய்வோம். முன்பெல்லாம் ஆறுநாள் கொண்டாடுன வழிபாடு, இப்போ ஒரேநாள் வழிபாடாப் போயிடுச்சு. பொம்மையின் அளவும் இப்போ சின்னதா ஆயிடுச்சு” என்றார்.