Published:Updated:

மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

மகசூல்துரை.நாகராஜன், படங்கள்: பா.ராகுல்

மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

மகசூல்துரை.நாகராஜன், படங்கள்: பா.ராகுல்

Published:Updated:
மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

ண்ணீர் தட்டுப்பாடு, ஆள்கள் பற்றாக்குறை, விலை வில்லங்கம் ஆகிய காரணங்களால் விவசாயத்தை வெறுப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது, மரம் வளர்ப்புதான். அதிகச் சேதாரம் இல்லாமல் நிச்சய வருமானம் கிடைப்பதால் பல விவசாயிகள் மரச்சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். அப்படி மாறியவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் உள்ள கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ‘எழில்சோலை’  பா.ச.மாசிலாமணி. இவர் மரங்களுக்கு இடையில் ஊடுபயிர் சாகுபடியும் செய்து வருகிறார். கடந்த போகத்தில் மரப்பயிர்களுக்கு இடையே 40 சென்ட் பரப்பில் மிளகாய்ச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்துள்ளார்.

மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

காலைப் பொழுதொன்றில் பண்ணையில் இருந்த மாசிலாமணியைச் சந்தித்தோம். “என் அப்பா 24 ஏக்கர் நிலத்துல விவசாயம் செஞ்சுதான், எங்களையெல்லாம் படிக்க வெச்சார். சொத்துக்களைப் பாகம் பிரிச்சப்போ, எனக்கு ஆறு ஏக்கர் கிடைச்சது. ஆனா, நான் விவசாயத்துல ஆர்வம் இல்லாமத்தான் இருந்தேன். எங்களோட வீட்டைச் சுத்தி தேக்கு மரங்களை அப்பா நட்டு வெச்சுருந்தார். எந்தக் கவனிப்புமே இல்லாம அந்த மரங்கள் செழிப்பா வளர்ந்திருந்துச்சு. ஒருநாள் அந்த மரங்களைப் பார்த்துட்டுருந்தப்போதான், ‘நிலத்தைச் சும்மா போட்டு வெச்சுருக்குறதுக்குப் பதிலா, பேசாம அதுல மரங்களை நட்டு வைக்கலாமே’னு தோணுச்சு. அதன்பிறகு மரம் வளர்ப்பு பத்தி பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு மரம் வளர்ப்பில் இறங்குனேன். அதுக்கப்புறம் இயற்கை விவசாயமும் செய்ய ஆரம்பிச்சுட்டேன்” என்று முன்னுரை கொடுத்த மாசிலாமணி தொடர்ந்தார்...

மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

“என்னோட ஆறு ஏக்கர்ல, 2 ஏக்கர் நிலத்துல எப்பவுமே நெல் சாகுபடிதான். 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல 110 தென்னை மரங்கள் இருக்கு. தென்னைக்கு இடையில மகோகனி, செஞ்சந்தனம், பலா, மா, ரோஸ்வுட், வில்வம், வேங்கை, குமிழ், நெல்லினு மரக்கன்றுகளை நடவு செஞ்சுருக்கேன். தென்னையோடு சேர்த்து மொத்தமா 1,500 மரங்களுக்கு மேல இருக்குது. அதில்லாம தனிப்பயிராவும் மகோகனி நடவு செஞ்சுருக்கேன். 40 சென்ட்ல மகோகனி, செவ்வாழை, மலைவாழை, மா எல்லாம் கலந்து நடவு செஞ்சுருக்கேன். மகோகனி நட்டு ரெண்டு வருஷத்துக்கு மேலாகுது. வாழை இப்போ குலை விட்டுட்டு இருக்கு. இந்த 40 சென்ட் வயல்ல ஊடுபயிரா மிளகாயையும், கேரட்டையும் நடவு செஞ்சேன். கேரட் அறுவடை முடிஞ்சிடுச்சு. கேரட் விளைச்சல் நல்லா இருந்துச்சு. ஆனா, மலைப்பகுதில விளையுற கேரட் மாதிரி சுவை கிடைக்கல. பொதுவா, எந்தப் பயிர் செஞ்சாலும் தனிப்பயிரா செய்யக் கூடாது. கூட நாலு பயிர்களைக் கலந்து விதைக்கணும்னு நம்ம முன்னோர் சொல்வாங்க. ஆனா, நாம அதை விட்டுட்டு ஒரே பயிரா சாகுபடி செய்றப்ப, வயலுக்கு வர்ற மொத்தப் பூச்சியும் பயிரை உண்டு இல்லைனு பண்ணிட்டுப் போயிடுது. எதை விதைச்சாலும் கலப்புப் பயிரா செய்யுறது நல்லது. மரங்கள், ஊடுபயிர்கள் எல்லாத்துக்குமே இயற்கை இடுபொருள்களைத்தான் பயன்படுத்துறேன். நான் சாகுபடி செஞ்சது, பாரம்பர்ய மிளகாய் ரகம். அதுலதான் நல்ல மகசூல் கிடைச்சுருக்கு” என்ற மாசிலாமணி மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

“40 சென்ட் நிலத்துல ஊடுபயிராகப் போட்டதுல மொத்தமா 140 கிலோ மிளகாய் கிடைச்சது. அதுல 80 கிலோ மிளகாயை அப்படியே விற்பனை செஞ்சுட்டேன். 60 கிலோ மிளகாயைக் காய வெச்சுருக்கேன்.
80 கிலோ மிளகாயை விற்பனை செஞ்சதுல 12,800 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல எல்லாச் செலவும்போக, 5 ஆயிரம் ரூபாய் லாபமா நின்னது. இன்னமும் வற்றல் மிளகாயை விற்பனை செய்யலை. இதுல கிடைக்கிற வருமானம் முழுக்க லாபம்தான். நிலத்துல என்ன பயிர் இருந்தாலும் இருக்குற, இடைவெளியில் இப்படிப் பயிர் செஞ்சா கூடுதல் லாபம் எடுக்க முடியும்” என்று சொல்லி விடைகொடுத்தார். 

தொடர்புக்கு, மாசிலாமணி,

செல்போன்: 94436 38545. 

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

40 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் ஊடுபயிராக மிளகாய்ச் சாகுபடி செய்வது குறித்து மாசிலாமணி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

மிளகாய்க்கு வடிகால் வசதியுள்ள நிலம் அவசியம். நிலத்தில் நாற்றங்காலுக்காக 10 அடி நீளம் 8 அடி அகலத்தில் இரண்டு பாத்திகளை அமைக்க வேண்டும். மண்ணின் வளத்தைப் பொறுத்துத் தேவையான உயிர் உரங்களைப் பாத்திகளில் இட்டு, 300 கிராம் மிளகாய் விதைகளைத் தூவி, காலையிலும் மாலையிலும் தண்ணீர் கொடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை பாசன நீருடன் ஜீவாமிர்தக்கரைசலைக் கலந்து விட வேண்டும். 25 நாள்களில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும். 40 சென்ட் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைக் கொட்டி, மூன்று முறை உழுது, ஒன்றரை அடி உயரம் இருக்குமாறு பார் அமைக்க வேண்டும்.
 
பார்களுக்கான இடைவெளி இரண்டு அடி. பாரின் இரண்டு ஓரங்களிலும் ஓர் அடி இடைவெளியில் நாற்றுகளை வரிசையாக நடவு செய்து, தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் விட்டு வர வேண்டும். நடவுசெய்த 20, 40 மற்றும் 60-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 35-ம் நாள் 50 மில்லி மீன் அமினோ அமிலத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 40, 60 மற்றும் 80-ம் நாள்களில் 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். நடவு செய்த 50-ம் நாளுக்கு மேல் பிஞ்சுகள் எடுக்கும். 60-ம் நாளிலிருந்து மிளகாய் பறிக்க ஆரம்பிக்கலாம். காய்ப்பைப் பொறுத்து இடைவெளி விட்டுப் பறிக்கலாம்.

மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்!

பாரம்பர்ய மிளகாய்க்கு மவுசு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிரிடப்படும் பாரம்பர்ய ரக மிளகாய்க்கு, விவசாயிகளிடம் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இதில் குறைவான தண்ணீர் செலவு, குறைவான நோய்த்தாக்குதல், பராமரிப்புச் செலவு என விவசாயிக்குப் பல நன்மைகள் உண்டு. இந்த ரக விதை செங்கல்பட்டு, காஞ்சிபுரம்... பகுதிகளில் உள்ள விதை விற்பனை அங்காடிகளில் கிடைக்கிறது.