Published:Updated:

நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டம்! காவிரி டெல்டா விவசாயிகள் முடிவு!

நெல் உற்பத்தி செலவினத்தை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டால், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,340-ஐ அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,790 மட்டுமே அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டம்! காவிரி டெல்டா விவசாயிகள் முடிவு!
நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டம்! காவிரி டெல்டா விவசாயிகள் முடிவு!

நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய விளைபொருள்களுக்கு, கட்டுபடியான விலையை நிர்ணயிக்கக்கோரி, மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காவிரி டெல்டா விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள், "கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது பி.ஜே.பி, 'தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு கட்டுபடியான, நியாயமான விலை கிடைக்காமல் தற்கொலைகள் நடைபெறுவதைத் தடுத்திடும் வகையில், இந்திய தேசிய விவசாயிகள் ஆணையத்தின்  தலைவர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துறைகளை நிறைவேற்றுவோம்' என வாக்குறுதி அளித்தது. ஆனால், அதற்கு மாறாக நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு மிகக் குறைவான விலையை மட்டுமே இந்த ஆண்டு நிர்ணயித்துள்ளது. உதாரணமாக, நெல் உற்பத்தி செலவினத்தை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டால், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,340-ஐ அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,790 மட்டுமே அறிவித்துள்ளது. மேலும், கரும்புக்கு அந்தந்த மாநில அரசுகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநில கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஆண்டுதோறும் வழக்கமாக அறிவித்து வழங்கிவந்த மாறிய அரசின் ஆதரவு விலையை வழங்கக் கூடாது எனவும் மாநில அரசுகளைத் தடுத்துள்ளது.

மத்திய அரசின் இந்த விரோதச் செயலைக் கண்டித்தும், நெல், கரும்பு, பருத்தி, பருப்பு வகைகள் உள்ளிட்ட விலையை மறுபரிசீலனை செய்து, புதிய விலை அறிவிப்பு செய்யவும், 2007-08-ம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன் சுமையைக் குறைத்து தற்கொலைகளைத் தடுத்திட, விவசாயக் கடன் திட்டத்தை அப்போதிருந்த மத்திய அரசு, கடன் தள்ளுபடியாக அறிவித்ததைப் போன்று மோடி அரசும் அனைத்து கடன்களையும் தள்ளுபடிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி, நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், பயிர்க்காப்பீடு என்ற பெயரால் விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசைக் கண்டித்து 2016 - 2018-ம் ஆண்டுவரை பயிர்க் காப்பீடு இழப்பீட்டை உடன் வழங்கக் கோரியும், கஜா புயல் பாதித்த பகுதிகளை மோடி உடனே பார்வையிட்டு நிவாரணம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்காக, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கெளரவத் தலைவர் நெடார் தருமராஜன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கபிஸ்தலம் முருகன், மாவட்ட துணைத் தலைவர் மகாராஜபுரம் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் கும்பகோணத்திலிருந்து 53 விவசாயிகள் டெல்லிக்குப் பயணமாகிறோம்" என்றனர்.