Published:Updated:

"கஜா புயல்: சம்பா பயிர் காப்பீட்டை நீட்டிக்க வேண்டும்!" -டெல்டா விவசாயிகள் கோரிக்கை

ஜெ.பிரகாஷ்
"கஜா புயல்: சம்பா பயிர் காப்பீட்டை நீட்டிக்க வேண்டும்!" -டெல்டா விவசாயிகள் கோரிக்கை
"கஜா புயல்: சம்பா பயிர் காப்பீட்டை நீட்டிக்க வேண்டும்!" -டெல்டா விவசாயிகள் கோரிக்கை

ஜா புயலில் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட சம்பா பயிருக்கு காப்பீடு நீட்டிப்புசெய்ய கால அவகாசம் கேட்டு, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து அவர்கள், "2018-19-ம் ஆண்டுக்குரிய சம்பா தாளடிப் பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடு, வரும் 30-ம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி, காவிரி டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கிப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், விவசாயிகள் மீளாத அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வாழ்வாதரங்களையும், உடைமைகளையும் பொருளாதாரத்தையும் இழந்து, விரக்தியின் விளிம்புக்குச் சென்றதுடன் தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், எஞ்சியிருக்கிற மிச்சப் பயிர்களையாவது காப்பாற்றவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. அந்த வகையில், பயிர்க் காப்பீடு மிக அவசியமாகிறது. வரும் 30-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்வது என்பது விவசாயிகளால் முடியாத காரியம். மேலும், காப்பீடு செய்வதற்குத் தேவையான வருவாய்த் துறை சான்றிதழ்கள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. 

குறிப்பாக, கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கணக்கெடுக்கும் பணியில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆள் பற்றாக்குறையுடன் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களை விவசாயிகள் சென்று பார்த்து சான்றிதழ்கள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மேலும், பயிர்க் காப்பீடு செய்வதற்கு விவசாயிகளிடம் போதிய பண வசதியில்லாமல் தடுமாறுகின்றனர். எனவே, தமிழக அரசோ, மத்திய அரசோ விவசாயிகளுக்காக தாமாக முன்வந்து விவசாயிகள் சார்பில் பயிர்க் காப்பீடு பிரீமியத் தொகையை முழுவதுமாகச் செலுத்திட முன்வர வேண்டும். விவசாயிகளின் பங்களிப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 மட்டும் வசூலித்து அவர்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். 2016-17-ம் ஆண்டு சம்பா தாளடி ரபி பருவத்தின்போது, மத்திய அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை, பெரும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கருத்தில்கொண்டு, எங்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரீமியம் செலுத்தும் காலத்தை 30-11-2018-லிருந்து 15-12-2018 வரை நீட்டிப்பு செய்துதரும்படி மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.