Published:Updated:

`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்!’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட  தரமாட்டோம்!’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்!’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

நெய்வேலி மந்தாரக்குப்பத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் என்.எல்.சி இந்தியா  நிறுவனத்துக்கு மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் என்.எல்.சி மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமைதாங்கினார். உதவி ஆட்சியர்கள் சிதம்பரம் விஷ்ணுமகாஜன், விருத்தாசலம் பிரசாத் மற்றும் கடலூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், என்.எல்.சி மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக, கூட்டத்துக்கு வந்த கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ஜ் அணிந்தும், தங்கள் நிலங்களை என்.எல்.சி நிறுவனத்துக்குத் தரமாட்டோம் என்று கூறியவாறு, கும்பலாக வந்தனர். கூட்டம் 
நடைபெறும் வாயில் முன்பு அவர்களை நிறுத்திய போலீஸார், பின்னர் அவர்களை வரிசையாக கூட்ட அரங்கில் அமரச்செய்தனர். கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், முதலில் அதிகாரிகள் திட்டம்குறித்து விளக்கிக் கூறுவார்கள். பின்னர், கிராம மக்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறினார்.

முதலில், என்.எல்.சி மாசுக் கட்டுபாடு வாரிய அதிகாரி பேசினார். அதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டனர். உடன் கலெக்டர் அவர்களைச் சமாதானப்படுத்தி, அதிகாரிகள் பேசிய பின்பு உங்கள் கருத்தை ஒவ்வொருவாரகத் தெரிவிக்கவும் எனக் கூறினார். அதன் பின்பு பேசிய விவசாயிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் அனைவரும், `நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதுவரை என்எல்சி நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிர்வாகம் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. வழங்கப்பட்ட மாற்று மனை மற்றும் நிலத்துக்கு, இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்தக் கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம். முன்பே எல்லாம் முடிவுசெய்யப்பட்டுவிட்டது. ஒரு ஏக்கர் நிலத்தில் 127 கோடி ரூபாய்க்கு கனிம வளம் இருக்கிறது. ஆனால், என்எல்சி நிறுவனம் எங்களுக்கு குறைவான தொகையே தருகிறது. என்எல்சி நிறுவனத்துக்கு ஒரு பிடி மண்ணைக்கூட தரமாட்டோம்.  நாங்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்தையும், நிலத்தையும் தர முடியாது. அப்படி மீறி எங்கள் நிலங்களை எடுக்க முற்பட்டால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்று கடுமையாகத் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில், கடலூர் நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்க நிஜாமுதீன், என்எல்சி-க்கு நிலம், வீடு  கொடுத்தவர்கள் சங்க ஜான்,  முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவர்கள் வடக்குத்து ஜெகன், ஆலம்பாடி மதியழகன், உழவர் மன்றத் தலைவர் கார்மாங்குடி வேங்கடேசன், தி.மு.க
ஒன்றியச் செயலாளர் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில நிர்வாகி திருமாறன், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் சுரேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் சின்னதுரை மற்றும் எரும்பூர், வீரமுடையா நத்தம், ஆலம்பாடி, சிறுவரப்பூர், கம்மாபுரம் உட்பட, 26 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.   
பின்னர் பேசிய மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், `நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.