எகிப்துடன் கைகோக்கும் இந்தியா!

விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் முக்கியமானது, எகிப்து. அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 14.5 சதவிகிதம். உள்நாட்டு வேலைவாய்ப்பில் 28 சதவிகிதம் விவசாயம் மூலம்தான் பூர்த்தியாகிறது. சமீபத்தில், எகிப்துடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட்டிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும்... விவசாயப் பயிர்கள், நீர் மேலாண்மை, விவசாயத் தொழில்நுட்பங்கள், விவசாயக் கழிவுகள் மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள முடியும். எகிப்து நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளே. சர்வதேச பாணியிலான விவசாயத்தைவிட, அவர்கள் நாட்டு பாரம்பர்ய விவசாய முறைகளையே பின்பற்றுகிறார்கள். அவர்களுடன் கைகோப்பது இந்திய விவசாயிகளுக்குப் பலவழிகளில் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகரித்த அணில்கள்... அலறும் அமெரிக்கா!
அமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த அணில்கள், ஆப்பிள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றைக் கடித்துச் சேதப்படுத்தி விடுவதால், அவற்றை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். இதற்கு முன்னர் இவ்வளவு அணில்களை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை என்கிறார்கள், நியூ இங்கிலாந்து விவசாயிகள். திடீரென அணில்கள் பெருகியதற்கான காரணம் பற்றி உள்ளூர் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பது பற்றியும் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

விவசாயம் செய்ய அழைக்கும் ஆப்கானிஸ்தான்!
ஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இத்துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது, அந்த நாட்டுக்கு வலு சேர்க்கும். அதற்காக இந்தியத் தொழிலதிபர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க ஆப்கானிஸ்தான் தயாராக இருக்கிறது. ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களுக்கும் உலர் பழங்களுக்கும் ஆப்கானிஸ்தான் உலகப் புகழ்பெற்றது. அவற்றுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக உள்ளதால், அதைப் பயன்படுத்திக் கொள்ள முன்வரும் அரசின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

2050-ம் ஆண்டில் காய்கறிகள் உற்பத்தி குறையும்!
‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ரோபிகல் மெடிசின்’ (London School of Hygiene and Tropical Medicine) என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலக அளவில் நிகழும் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், ‘உலகளாவிய காய்கறி விநியோகம் 2050-ம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் வீழ்ச்சியடையக்கூடும். இன்றளவில் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பொதுவான பயிர்களே பெரும்பாலான மக்களின் உணவாக இருக்கின்றன. உலகளாவிய காய்கறிகளின் சராசரியான மகசூலானது, புவி வெப்பம் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக மூன்றில் ஒரு பங்காகக் குறையும்’ என்று எச்சரித்துள்ளது.

விவசாயிகளுக்கு நல்ல செய்தி!
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ‘விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு விளைபொருளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price-MSP) நிர்ணயிக்கப்பட உள்ளது. அதைவிடச் சந்தைவிலை குறைவாகப் போகும்போது அந்த வித்தியாசத்தை அரசே விவசாயிகளுக்குத் தரும். இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆலோசித்துத் தரும்படி ‘நிதி ஆயோக்’ அமைப்பை அரசு கேட்டுக்கொண்டது. அதற்காக முன் வைக்கப்பட்டதுதான், ‘அன்னதாதா மௌல்யா சம்ரக்ஷன யோஜனா’ (Annadata Maulya Samrakshana Yojana). இதன்படி விலை வித்தியாசத்தை அரசே ஏற்பது ஒரு தீர்வாகவும், அதேசமயம் மாநில அரசுகள் தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வது இன்னொரு தீர்வாகவும் முன் வைக்கப்பட்டது. பரீட்சார்த்த ரீதியாக மத்தியப் பிரதேச விவசாயிகளுக்காக இந்தப் புதிய திட்டத்தினைக் கொண்டு வர மத்திய அமைச்சரவையில் ஆலோசிக்கப் பட்டிருக்கிறது. விரைவில் அந்த விவசாயிகளுக்கு நல்ல செய்தி வரக்கூடும்.
- கார்க்கிபவா