Published:Updated:

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!
பிரீமியம் ஸ்டோரி
ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

கேள்வி-பதில்

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

கேள்வி-பதில்

Published:Updated:
ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!
பிரீமியம் ஸ்டோரி
ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை விவசாயிகளுக்குக் கற்றுத்தருவதற்காக ‘உலக உணவு மற்றும் வேளாண் கழகம்’ சில வேளாண்மை அலுவலர்களுக்குப் பயிற்சியளித்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை இயக்குநரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வமும் ஒருவர். பல மாநிலங்களிலுள்ள வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புத் தொடர்பான பயிற்சியளித்து வருகிறார், நீ.செல்வம். ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்காக, ஐ.பி.எம் (IPM-Integrated Pest Management) தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை முதன்முதலில் செயல்படுத்திய நாடு எது?

1970-களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேசியாவில்தான் இத்தொழில்நுட்பம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

இந்தோனேசியாவில் நெல் விவசாயம் அதிகளவு நடைபெற்று வந்த காலகட்டம் அது. பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு வந்தவுடன் அந்நாட்டு விவசாயிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். நாற்று நடவுசெய்த பத்தாவது நாளிலிருந்து முறைவைத்து பூச்சிக்கொல்லித் தெளித்தார்கள். அதிகப் பயன்பாடு காரணமாகப் பூச்சிகளின் பெருக்கம் அதிகமானது. அங்கு நெல் பயிரில் இலைச்சுருட்டுப்புழு மட்டுமே முதலில் பிரச்னையாக இருந்தது. அடுத்து குருத்துப்பூச்சி வந்தது. அடுத்து புகையான் வந்தது. ஒரு கட்டத்தில் இவை மூன்றும் சேர்ந்து மிகப்பெரிய பிரச்னையாக மாறின. அதனால், உணவு உற்பத்தி கேள்விக்குறியானது. அக்காலகட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, புதுமையான தொழில்நுட்பமாக அறிமுகப் படுத்தப்பட்டது, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை.

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

இந்தியாவில் எப்போது அறிமுகமானது?

1980-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பருத்தியில் புகையிலைப்புழுத் தாக்குதல் தமிழ்நாடு மற்றும் குஜராத் பகுதியில் அதிகமாக இருந்தது. அடுத்து வெள்ளை ஈ தாக்குதல் வந்தது. தொடர்ந்து சில ஆண்டுகளில் பச்சைக் காய்ப்புழுத் தாக்குதல் அதிகமானது. இந்நிலையில் 1994-ம் ஆண்டு, உலக உணவு மற்றும் வேளாண் கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்... நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் முக்கியமான மாநிலங்களிலிருந்து வேளாண் அலுவலர்களை அழைத்து... ‘வழிகாட்டுப் பயிற்றுநர்’களுக்கான பயிற்சியை வழங்கியது. அங்கு பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள், விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகிறார்கள். ‘உழவர் வயல்வெளிப் பள்ளி’ மூலமாக விவசாயிகளை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை சென்றடைந்து வருகிறது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கலப்புப் பயிர் முறையும் முக்கியமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

கலப்புப் பயிர் என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் நோக்கமே பூச்சிகளைக் குழப்பமடைய வைப்பதுதான். வனங்களில் பூச்சிகளால் எந்தப் பாதிப்பும் இல்லை. பலவிதமான தாவரங்களின் தொகுப்பைத்தான் வனம் என்கிறோம். அங்கு பூச்சிகள் பலவிதமான உணவுகளை உண்கின்றன. அதாவது ‘பஃபே’ முறையில் உண்கின்றன. ஆனால், விவசாய நிலங்களில் ஒரே பயிரைத்தான் பயிரிடுகிறோம். நாம் பயிரிடும் பயிர்கள், பூச்சிகளுக்குப் பிடித்த மானவையாக இருப்பதோடு அதிகளவிலும் கிடைப்பதால், அவை பூச்சிகளுக்குப் ‘பிரியாணி’யைப் போன்று ஆகிவிடுகிறது. பஃபே முறையில் தேடித்தேடி எதையாவதொன்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த பூச்சிகளை... பிரியாணி சாப்பிடும் நிலைக்கு மாற்றிவிட்டதால், அது ஆபத்தில் முடிந்துவிடுகிறது. அதனால், மீண்டும் பூச்சிகளைப் பஃபே முறைக்கு மாற்ற வேண்டும். அதாவது, நம் வயலிலும் பலவிதப் பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும். இதற்குத்தான் கலப்புப் பயிர் முறை கைகொடுக்கிறது.

ஊடுபயிர் மற்றும் பலவிதப் பயிர்களைக் கலந்து விதைப்பதன் மூலமாகப் பூச்சிகளைக் குழப்பி விடுவதுதான் இம்முறையின் நோக்கம். பிரதான பயிரோடு வேறுசில பயிர்களைக் கலந்து விதைக்கும்போது பூச்சிகள் குழம்பிவிடுகின்றன. வயலுக்குள் நுழையும்போதே தடுத்து நிறுத்தவும் ஒரு முறையை ஐ.பி.எம் கற்றுத்தருகிறது. அதுதான் வரப்புப் பயிர். பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் சில பொறிப் பயிர்களை வரப்புகளில் வைப்பதன் மூலம், வயலுக்குள் பூச்சிகளின் நுழைவு கட்டுப்படுத்தப்படுகிறது. வரப்புப் பயிர்களை ‘பயோ வால்’ (Bio Wall) அதாவது ‘உயிரித் தடுப்பு வேலி’ என்கிறார்கள்.

‘பிரதானப் பயிர்’ என்ற ஒரே வகையான உணவை உண்ணும் பூச்சிகளுக்கு முன்னால், பல்வேறு பயிர்கள் என்ற விதவிதமான உணவுகளைப் படைக்கிறோம். உதாரணமாகப் பருத்தியில் தட்டைப் பயறு, நிலக்கடலை, துவரைப் போன்றவற்றைப் பயிரிடுதலைச் சொல்லலாம். விதவிதமான உணவுகளைப் பார்க்கும் பூச்சி குழம்பிப் போய்விடும். இதைச் சாப்பிடுவதா... அதைச் சாப்பிடுவதா? எனப் பூச்சிகள் குழம்பும் நிலையில், பிரதானப் பயிரைக் காப்பாற்றிவிட முடியும். கலப்புப் பயிர் பயிரிடுவதன் நோக்கமே இதுதான். இதைத்தான் நம் முன்னோர், பன்னெடுங் காலமாகக் கடைப்பிடித்து வந்தார்கள்.

கலப்புப் பயிர்ச் சாகுபடி செய்வதால் பூச்சிகளிடமிருந்து பயிரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வேறுசில நன்மைகளும் இருக்கின்றன. பலவிதமான பயிர்கள் ஒரே நிலத்தில் இருக்கும்போது பல்வேறு பூச்சிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. இதனால், பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படுகிறது. கலப்புப் பயிர்கள் பயிரிடுவதன் மூலமாக மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை!

பொறிப் பயிர்கள் என்றால் என்ன?

பக்கத்து வயலிலிருந்து நம் வயலுக்குள் நுழையும் பூச்சிகளை, வயலுக்குள் நுழையாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்துவதற்காக வரப்புகளில் சில பயிர்களைப் பயிரிட வேண்டும். இவற்றை வரப்புப் பயிர்கள் என்கிறோம். ஒவ்வொரு பயிருக்கும் ஒரு மணம் உண்டு. பயிர்கள் பருவத்துக்கு வரும்போது, இந்த மணம் காற்றில் கலக்கும். சில பயிர்களின் மணம் சில பூச்சிகளுக்குப் பிடிக்கும். அந்த மணத்துக்கு மயங்கும் பூச்சிகள், அந்தப் பயிரைத் தேடிவரும். இப்படி தீமை செய்யும் பூச்சிகளுக்கும், சில நன்மை செய்யும் பூச்சிகளுக்கும் பிடித்தமான மணமுள்ள பயிர்கள் பல இருக்கின்றன. இவற்றை வரப்புகளில் பயிரிடும்போது, இவற்றின் மணத்துக்குப் பூச்சிகள் வரும். அதனால், இவற்றைப் பொறிப் பயிர்கள் என்கிறோம். பொறிப் பயிர்களில் முக்கியமானவை ஆமணக்கு, வெண்டை, துவரை ஆகியவை. இவற்றில் பிரதானப் பயிர்களுக்கு ஏற்ப இம்மூன்றில் ஏதாவதொன்றை நடவு செய்ய வேண்டும். இந்த மூன்று பயிர்களும் அதிக மணம் கொண்டவை. எனவே இவற்றின் மணம் பூச்சிகளை ஈர்க்கும்.

இப்பயிர்களை ‘தற்கொலைப் படை’ எனவும் சொல்லலாம். தன்னைப் பூச்சிகளுக்கு இரையாக்கி, பிரதானப் பயிரைக் காப்பாற்றுகின்றன, வரப்புப் பயிர்கள். பயிரின் மணத்துக்கு மயங்கி வரும் பூச்சிகளில் தீமை செய்யும் பூச்சிகள்தான் அதிகம். அப்படி வரும் பூச்சிகள், சாப்பிட்டுப் போடும் எச்சங்களை வைத்துத் தீமை செய்யும் பூச்சிகளின் இருப்பிடத்தை நன்மை செய்யும் பூச்சிகள் கண்டுபிடிக்கின்றன. பொறிப் பயிர்களை எப்போதும் நம் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கவனம் குறைந்தாலும், பொறிப் பயிர்கள், தீமை செய்யும் பூச்சிகளின் இனப்பெருக்க நிலையமாக மாறிவிடும்.

பொதுவாக அனைத்து விதமான பயிர்களுக்கும் பயறுவகைப் பயிர்களைக் கலப்புப் பயிராகவும் ஊடுபயிராகவும் விதைக்கலாம். உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயறு போன்றவற்றை விதைக்கலாம். இவற்றின் வேர் முடிச்சுகள், காற்றில் உள்ள நைட்ரஜனை இழுத்து... மண்ணின் வளத்தை அதிகப்படுத்துகின்றன. இதன்படி நிலக்கடலைக்குக் கம்புதான் மிகச்சிறந்த கலப்புப் பயிர்.

- வளரும்.

- ஆர்.குமரேசன்