Published:Updated:

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2
பிரீமியம் ஸ்டோரி
அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

ஏற்றுமதி

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

ஏற்றுமதி

Published:Updated:
அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2
பிரீமியம் ஸ்டோரி
அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

ஏற்றுமதி தொழிலில் ஈடுபட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஒன்று வாங்குபவர், இரண்டு அனுப்பப்படும் பொருள், மூன்று நாடு. நான்காவது முதலீடு. இதில் வாங்குபவர் சரியாக வியபாரம் செய்து கொண்டிருப்பவரா என்பதை அறிந்துகொள்ள இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத அமைப்பு (ECGC-Export Credit Guarantees Corporation of India) எனப்படும் அமைப்பின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகம், வங்கிகள் மூலம் விசாரித்து உறுதிசெய்துதான் இந்த வாங்குபவர் பட்டியலை வைத்திருக்கும். இந்த ஆள்களுக்குப் பொருள்களை அனுப்புவதில் பிரச்னையிருக்காது. இந்த இ.சி.ஜி.சி அமைப்பு சென்னையிலும் இயங்குகிறது.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

இரண்டாவது பொருள், இதில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. தடைசெய்யப்பட்ட பொருள்கள் (Prohibited Products) அதாவது செம்மரம், சந்தன மரம் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது. சில பொருள்களுக்குச் சிறப்பு உரிமம் (Special License) பெற்று அனுப்பக்கூடியதாக இருக்கும். இதில் ஆடு மாடுகள் போன்ற உயிருள்ள பொருள்கள் இடம்பெறும். ஆட்சேபணை இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் பிரிவில் இந்தியாவிலிருந்து விதைகளை ஏற்றுமதி செய்வது தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, பல நாடுகளும் தங்கள் நாட்டின் விதைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இந்த விதிமுறையின்படி நிலக்கடலை போன்ற பொருள்களைத் தடையில்லாச் சான்று (No Objection Certificate-NOC) வாங்கி, எண்ணெய் பயன்பாட்டுக்காக விற்க அனுப்பப்படுகிறது என அனுமதி வாங்க வேண்டும். கடைசியாக உரிமம் பெற்றுள்ள பொருள்கள்(Licensed Products). அதாவது அரசே இந்தந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட பொருள்கள். வேளாண் பொருள்களுக்கு அபீடா(APEDA) வழிகாட்டுகிறது. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பல துறைகள் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

மூன்றாவது நாடு. எந்த நாட்டுக்கு அனுப்பலாம். எந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தங்கள் இருக்கும். அதன்படி அந்தந்த நாட்டுக்குப் பொருள்களை அனுப்பலாம். நான்காவதாக முதலீடு, இதில் வாங்குபவரிடம் முன்பணம் வாங்கி செய்யலாம். அல்லது தாங்களே முதலீடு செய்தும் தொடங்கலாம். இந்த நான்கு விஷயங்கள் ஏற்றுமதிக்கு அடிப்படையானவை.

அடுத்து நாம் எதில் ‘நிபுணத்துவம்’ பெற்றுள்ளோம் என்பதைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது காய்கறிச் சாகுபடியிலா, கீரைச் சாகுபடியிலா, பழச் சாகுபடியிலா.. என்பது போன்ற விஷயங்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருளுக்கும் பேக்கிங் முதல் விலை வரை வித்தியாசம் உண்டு. அதற்கேற்ப நாம் எளிதில் கையாளக்கூடிய பொருள்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இன்னொன்று ஒரு விதையைப் போட்டால், எத்தனை நாளில் வரும், எவ்வளவு மகசூல் கிடைக்கும், என்ன மாதிரி இடர்ப்பாடுகள் வரும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல மதிப்புக்கூட்டலிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறையை ஓரளவுக்காவது மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். வயலில் எப்படி வேண்டுமென்றாலும் வேலை செய்யலாம். அதே சமயம், ஒருவரைச் சந்திக்கச் செல்லவேண்டி இருந்தால், நமது நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கடுத்து நிதி வசதி (Financial Strength). ஏற்றுமதித் தொழிலுக்குக் குறைந்தபட்ச நிதி வசதி முக்கியம். யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதைக் குறித்த நேரத்துக்கு அனுப்பக்கூடிய பொறுப்பு(Responsible) இருக்க வேண்டும். கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும். அதாவது, மெயில் அனுப்புவது, வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவது போன்ற தொழில்நுட்ப அறிவு. இதை உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் அடுத்தவர்களை வைத்தாவது அந்த வேலையைச் செய்துகொள்ள வேண்டும்.

நம் ஊரில் அடுப்பு எரிக்கப் பயன்படும் தேங்காய் சிரட்டையை... கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பலவிதமான பொருள்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி எந்தப் பொருளை எந்த வடிவத்தில் எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமானது.

சில நாடுகளில் இந்திய அரிசியை இறக்குமதி செய்வதற்கு சில விதிமுறைகள் உண்டு. அதை அறியாமல் ஆர்டர் கிடைத்துவிட்டதே என்று அனுப்பிவிட்டால், அந்த நாடு அதை ஏற்றுக்கொள்ளாது. இப்படிதான் துபாய்க்கு அரிசி ஆர்டர் வந்தது என்று அனுப்பிவிட்டேன். அங்கே ஹெல்த் சர்ட்டிபிகேட் இருந்தால்தான் பொருளை இறக்க அனுமதிப்போம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் சொல்லிவிட்டனர். பிறகு விசாரித்தால் பொருளை அனுப்புவதற்கு முன்பே அந்த சர்டிபிக்கேட்டை வாங்க வேண்டுமாம். 3 மாசம் துபாய் துறைமுகத்தில் பொருள் அப்படியே நின்றது. பிறகு ஒருத்தர் ‘சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கு ஹெல்த் சர்ட்டிபிகேட் தேவையில்லை. அங்கே அனுப்புங்கள்’ என்றார். பிறகு சிங்கப்பூருக்கு அனுப்பி விற்பனை செய்தோம்.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

இப்படி சில நடைமுறைகளைத் தெரிந்துகொண்டு பொருள்களை அனுப்ப வேண்டும். தெரியாமல் அனுப்பிவிட்டால் மீட்டுத் திரும்பக் கொண்டு வருவது எளிதான காரியமில்லை. இப்படிப் பல விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது. இது அனுபவத்தில்தான் வரும் என்றாலும், தற்போது இதுபோன்ற விஷயங்களை எளிதாகத் தெரிந்துகொள்ள வசதிகள் உண்டு.

அதேபோல, ஏற்றுமதி என்று மட்டுமில்லை, எந்தத் தொழிலில் இறங்குவதாக இருந்தாலும் உங்களிடம் முயற்சி இருக்க வேண்டும். அதையொட்டிய பயிற்சிகள் வேண்டும். இந்தப் பயிற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். பயிற்சி தொடர்ச்சியாக இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும். அந்த வளர்ச்சிதான் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.

இதுவரை உள்ளூர்ச் சந்தைகளை மட்டும்தான் பார்த்திருப்பீர்கள். இந்த வெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்புவதற்குக் கடையெல்லாம் வைக்க வேண்டியதில்லை. வெல்லம், அரிசி, பால், தேங்காய், எண்ணெய், உப்பு, மிளகாய், புளி, மிளகு, மஞ்சள் என்று பல பொருள்கள் இருக்கின்றன. அதை அப்படியே விற்கப் போகிறோமா, பேக்கிங் செய்யப் போகிறோமோ, மதிப்புக்கூட்டப் போகிறோமோ, பிராண்ட் பெயரில் விற்கப் போகிறோமோ என்பனவற்றை முடிவு செய்ய வேண்டும்.

பொருளை எங்கே உற்பத்தி செய்யப் போகிறோம், எங்கே விற்பனை செய்யப் போகிறோம், எவ்வளவு நாள் தாங்கும், சீசன் பொருளா, மாத கணக்கில் தாங்கக்கூடிய பொருளா, எந்த விலையில் விற்கப் போகிறோம், எவ்வளவு லாபம் கிடைக்கும் உள்ளிட்ட விஷயங்களைத் தெரிந்துகொண்டுதான் ஏற்றுமதியில் இறங்க வேண்டும். இவை தெரிந்தால்தான் விலையை நிர்ணயிக்க முடியும். ஏற்றுமதிக்கு உதவும் அமைப்புகள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

- ஏற்றுமதி பெருகும்.

- கே.எஸ்.கமாலுதீன்

தொகுப்பு. த.ஜெயகுமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

இயற்கை பொருள்களுக்கு நல்ல விலை!

இறக்குமதியாளர்கள் உஷார்!


கோயம்புத்தூரில் ‘ஏசியன் ஆர்கானிக்ஸ்’ என்கிற பெயரில் இயற்கை விளைபொருள்களை ஏற்றுமதி செய்து வரும் கார்த்திகேயன், ஏற்றுமதி குறித்துத் தன்னுடைய அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
“பத்து வருஷமா விளைபொருள்களை ஏற்றுமதி செஞ்சிட்டுருக்கேன். ஆரம்பத்துல, கொச்சின்ல இருக்குற காயர் போர்டு மூலமா, காயர் பித், கயிறு பொருள்கள்னு ஏற்றுமதி செஞ்சேன். அப்புறம், மக்காச்சோளத்தை ஏற்றுமதி செஞ்சேன். இப்போ நாலு வருஷமா, மதிப்புக்கூட்டப்பட்ட முருங்கைப் பொருள்களை... மலேசியா, ஐரோப்பிய நாடுகள்னு ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன். முருங்கை இலை, முருங்கை பவுடர், முருங்கை எண்ணெய், முருங்கைப் பிண்ணாக்குனு மொத்தம் 10 வகையான முருங்கைப் பொருள்களை அனுப்பிட்டுருக்கேன். முருங்கைப் பிண்ணாக்கை தண்ணியைச் சுத்திகரிக்கிறதுக்காக மலேசியா, ஜப்பான் நாடுகள்ல பயன்படுத்துறாங்க.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

ஏர்போர்ட்ல இருந்து அனுப்புனாலும் சரி, துறைமுகத்துல இருந்து அனுப்புனாலும் சரி, பொருள்கள் முறையாகச் செல்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதேபோல, நாம அனுப்புற பொருள்களை அந்த நாடுகள்ல உடனடியா டெலிவரி எடுக்குறதுக்கும் ஏற்பாடு செய்யணும்.

ஒவ்வொரு நாட்டுல இருக்குற இந்திய தூதரகங்கள்லயும், அந்தந்த நாடுகள்ல இருக்குற இறக்குமதியாளர்கள் பதிவு செஞ்சிருப்பாங்க. அவங்களுக்குப் பொருள்களை அனுப்புறதுல பெரிய பிரச்னை இருக்காது. ஏஜென்ஸிகள் மூலமா வர்ற இறக்குமதியாளர்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாடி, அந்த ஏஜென்ஸியைப் பத்தியும் அவங்க சொல்ற இறக்குமதியாளர்கள் பத்தியும் நல்லா விசாரிச்சுக்கணும்.

பெரும்பாலும் முழுத்தொகையையும் வாங்கிட்டுப் பொருள்களை அனுப்புறது நல்லது. நமக்கு ஆர்டர் கிடைக்கிற எல்லாப் பொருள்களையுமே நாமளே உற்பத்தி பண்ண முடியாது. வெளியே வாங்கிதான் அனுப்ப வேண்டியிருக்கும். அப்படிப் பொருள்களை வாங்குறப்பவும் கவனமா இருக்கணும். முடிஞ்ச அளவுக்கு நாமளே நேர்ல போய் பேசிப் பொருள்களைக் கொள்முதல் செய்றது நல்லது. போன் மூலமாப் பேசி பேங்க்ல பணத்தை அனுப்பி விடுறப்போ நிறைய சிக்கல்கள் வரும். நாம கேட்ட தரத்துல அனுப்பமாட்டாங்க. சில சமயம் தாமதப்படுத்துவாங்க. அதனால, இந்த மாதிரி விஷயங்கள்ல கவனம் அவசியம்.

சில நாடுகள்ல இறக்குமதிக்குச் சலுகைகள் உண்டு. அதையும் தெரிஞ்சு வெச்சுக்கணும். அதேமாதிரி ஏற்றுமதி செய்யும்போது பொருள்களின் அடிப்படையில இந்திய அரசு ஊக்கத்தொகை கொடுக்குது. இதையும் பயன்படுத்திக்கணும். நாம உற்பத்தி பண்ற பொருள்களுக்கு இயற்கைச் சான்றிதழ் இருந்தால், நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். தரம் பத்தின சந்தேகங்களும் வாங்குறவங்களுக்கு இருக்காது” என்றார்.

அரிசி ஏற்றுமதி...

மதிப்புக்கூட்டலில் மிகவும் எளிமையானது அரிசிதான். இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, புருனே, இலங்கை, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியில் பாஸ்மதி அரிசி, பாஸ்மதி அல்லாத அரிசி என்று இரு பிரிவுகள் உண்டு. இதில் பாஸ்மதி அல்லாத அரிசி வகையில்தான் நம்ம ஊர் அரிசி வகைகள் வரும். அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் போட்டி என்றால் தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகள்தான். கடந்த ஆண்டு (2017-18) இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு 86.4 லட்சம் மெட்ரிக் டன் (86,48,488.58 டன்). இதன் மதிப்பு 22,967 கோடி ரூபாய். உலக அளவில் தாய்லாந்து நாடு, அரிசி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது.

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்யும்போது அந்த நாடுகளில் வாங்குபவர்கள் ஸ்டாக் பைல் (Stock Bile) வைத்திருக்க வேண்டும். அது அந்த நாட்டில் இறக்குமதி செய்பவர்கள், மூன்றில் ஒரு பங்கை அந்நாட்டு அரசுக்கு அவர்கள் டெபாசிட் செய்து பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். வாங்குபவர்களிடம் இந்த ஸ்டாக் பைல் இல்லாவிட்டால், அனுப்பிய பொருள் திரும்பி வந்துவிடும். அதனால், சிங்கப்பூருக்கு அரிசி அனுப்புவதற்கு முன், இந்த ஸ்டாக் பைல் இருக்கிறதா என்று கேட்டுவிட்டு அனுப்பவும்.

இதேபோன்று மலேசியாவுக்கு அனுப்பும்போது பெர்னாஸ் கன்ட்ரோல் (Bernas Countrol) மூலமாகத்தான் அனுப்ப முடியும். தற்போது இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை நாட்டுக்கு அனுப்பும்போது அந்நாட்டு அரசு தற்போது அரிசி வாங்கலாம் என்ற உத்தரவு போட்டிருந்தால் மட்டுமே அங்கிருக்கும் இறக்குமதியாளர்கள் நம்மிடம் வாங்குவார்கள். அதனால், அந்நாட்டு அரசாங்கம் உத்தரவு போட்டிருப்பதை அறிந்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.

ஹெல்த் சர்டிபிகேட் அவசியம்!

அரபு நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு எந்தத் தடையும் இல்லை. எப்போதுவேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஆனால், அரபு நாடுகளுக்கு அனுப்பும் பொருள்களின்மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிள் அரபிக் மொழியிலும், ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். இந்த லேபிளில் பொருளின் பெயர், உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை அந்த மொழியிலேயே குறிப்பிட வேண்டும். அளவுகளைக் குறிப்பிடும்போது கிலோகிராம் என்பதோடு எல்.பி.எஸ்(LBS)-Bound என்று அழைக்கப்படும்) என்பதையும் குறிப்பிட வேண்டும். இதோடு அனுப்பப்படும் பொருளுக்குக் கண்டிப்பாக ஹெல்த் சர்டிஃபிகேட் இருக்க வேண்டும்.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

அமெரிக்காவுக்கு அனுப்பும்போது பி.கியூ (Plant Quarantine-PQ) எனப்படும் அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த அமைப்பு மத்திய வேளாண்துறை அமைச்சகத்தில் உள்ளது. அதேபோன்று அமெரிக்காவுக்கு அனுப்பும்போது பொருளில் இருக்கும் கார்ப்போஹைட்ரேட், ஈரப்பதம் உள்ளிட்ட சத்துகள் குறித்தான நியூட்ரிஷியன் சர்ட்டிஃபிகேட் வாங்கி வைத்திருக்க வேண்டும். தாய்லாந்து, வியட்நாம் நாடுகளிலிருந்து அரிசிக்கு ஆர்டர் வருகிறது என்றால், அது பேக் ஆர்டர்(Fake Order) ஆக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால், அந்த நாடுகளிலேயே அரிசி உற்பத்தி அதிகமாகத்தான் இருக்கிறது. அதனால், நாம் உஷாராக இருக்க வேண்டும். இப்படி அரிசி ஏற்றுமதியில் ஒவ்வொரு நாட்டுக்கும் விதிமுறைகள் உள்ளன. அதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.