Published:Updated:

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி?

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி?

கேள்வி-பதில்

மிழக வேளாண்மைத் துறையின் உதவி வேளாண்மை இயக்குநரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம், பல மாநிலங்களிலுள்ள வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை அளித்து வருகிறார். ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்காக, ஐ.பி.எம் (Integrated Pest Management) தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை விவசாயிகளை எப்படிச் சென்றடைகிறது?

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை என்பது, ‘சீசன் ஆன் டிரெயினிங் புரோகிராம்’. அதாவது அந்தந்தப் பருவம் முழுவதும் நடக்கக்கூடிய ஒரு பயிற்சி. உலக உணவு மற்றும் வேளாண் கழகம், பலநாட்டு அரசுகளுடன் இணைந்து, அந்தந்த நாட்டில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கும் விதைப்பு முதல் அறுவடை மற்றும் அறுவடைபின்சார் தொழில்நுட்பங்கள் வரையிலான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறது. இந்தப் பயிற்சிக்கு அதிகபட்சம் 40 நபர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்படிப் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு, ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரப்படும். அதில் ஒரு ஏக்கர் நிலத்தில் அந்தப் பகுதியில் வழக்கமாகச் செயல்படுத்தும் வேளாண் யுக்திகளைக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும். இன்னொரு ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்ய வேண்டும். இந்த இரண்டு நிலங்கள் முதலும், கடைசியுமாக இருக்கும். இவற்றுக்கு இடையில் உள்ள மூன்று ஏக்கர் நிலம், பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும். இதுதான் இரண்டு நிலங்களையும் பிரித்து வைக்கும். இடையிலுள்ள இந்த மூன்று ஏக்கர் நிலத்தைப் பயிற்சியாளர்கள் சோதனைக்களமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தினமும் காலையில் மூன்று மணி நேரம், பயிற்சியாளர்கள் வயலில் இருக்க வேண்டும். கேள்வி கேட்கும் முறைப்படிதான் பயிற்சி வழங்கப்படும். தினமும் பயிற்சியாளர்கள் வயலில் உள்ள பூச்சிகளைப் பற்றிக் குறிப்பெடுப்பார்கள். பூச்சி, பயிரின் எந்தப் பகுதியில் அமர்ந்திருந்தது, இலையைச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததா அல்லது மற்ற பூச்சியைச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததா என ஒவ்வொரு செயல்பாட்டையும் வைத்து விளக்கம் அளிக்கப்படும். இப்படிப் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள், ‘வழிகாட்டும் பயிற்றுநர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பயிற்சி, கர்நாடக மாநிலத்தில் நடந்தபோது நான் கலந்துகொண்டேன்.

இந்த வழிகாட்டும் பயிற்றுநர்கள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பார்கள். அதற்காகத் தொடங்கப்பட்ட திட்டம்தான் உழவர் வயல்வெளிப் பள்ளி.

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி?

உழவர் வயல்வெளி பள்ளி என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் இது. வழிகாட்டும் பயிற்றுநர்கள், அவர்கள் பணிசெய்யும் பகுதிகளில் முப்பது முதல் நாற்பது விவசாயிகளை ஒருங்கிணைப்பார்கள். உழவர்களுக்கு வயல்வெளிதானே பல்கலைக்கழகம். எனவே உழவர்களின் வயலையே பாடசாலையாக்கி, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பார்கள். இதற்காக அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் நிலத்தைப் பரிசோதனை வயலாகத் தேர்ந்தெடுத்து, அதில் ஐ.பி.எம் முறை விவசாயம் செயல்படுத்தப்படும். 40 நபர்கள் உள்ள ஒரு குழுவை ஆறு நபர்கள் கொண்ட சிறுசிறு குழுக்களாகப் பிரிப்பார்கள்.

இந்தக் குழுக்கள் தினமும் காலை ஏழு மணிக்கு வயலில் இருக்க வேண்டும். ஏனெனில் அதிகாலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரியன் மறையும் போதும்தான் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பயிற்சியில் முதல் முறையாக வயல்வெளி ஆய்வில் ஈடுபடக் கற்றுக்கொடுப்பார்கள். வயலில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து பத்து செடிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் அனைத்துப் பாகங்களிலும் உள்ள பூச்சிகளை ஆராய்வார்கள். மண்ணை ஆய்வு செய்வார்கள். செடியில் தீமை செய்யும் பூச்சிகள் இருந்தால் அதனால், என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்வார்கள்.

இந்தக் குழுக்கள் வயல்வெளி ஆய்வை முடித்த பிறகு, அருகிலுள்ள வகுப்புகள் நடக்கும் இடத்தில் அமர்ந்து சார்ட் பேப்பரில் செடி, அதில் பூச்சி அமர்ந்திருந்த இடம், பூச்சிகளின் படங்கள், பாதிப்பு என அனைத்தையும் படமாக வரைவார்கள். அதை வைத்து விவாதிப்பார்கள். அதன் பிறகு, அந்த வாரம் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை எழுதுவார்கள்.

முக்கியமாக, வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சி, தீமை செய்யும் பூச்சி, மண்ணின் தன்மை, காலச் சூழ்நிலை, பயிரின் வளர்ச்சி நிலை என அனைத்தையும் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவார்கள். அதுதான் உழவர் வயல்வெளி பள்ளியின் முக்கியப் பயிற்சி. முக்கியமாக, இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் உழவர்களுக்குப் பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு எதிரான மனநிலையை உருவாக்குவதுதான் இதன் நோக்கம்.

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி?

வயலில் உள்ள பூச்சிகள் எல்லாமே தீமை செய்யும் பூச்சிகள் என்ற மனநிலைதான் விவசாயிகளிடம் உருவாகியிருக்கிறது. அதனால்தான், பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கிறார்கள். ஆனால், நன்மை செய்யும் பூச்சிகளும் வயலில் இருக்கின்றன. பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன என்பதை இந்தப் பயிற்சி வகுப்பின் மூலமாக அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்கிறார்கள். இதுவரை நாம் பார்த்தது, கேட்டது அனைத்தும் தவறானது என்பதை அவர்கள் வயல் ஆய்வின் மூலமாகத் தெரிந்து கொள்கிறார்கள். பூச்சிக் கொல்லி தெளிப்பதன் மூலமாக விளைபொருள்களில் நச்சு சேர்கிறது. மண்ணில், நீரில், காற்றில் நச்சுக் கலக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். இறுதியில் அனைத்து சிறு குழுக்களும் இணைந்து, தங்களது முடிவுகள் பற்றிக் கடுமையாக விவாதிப்பார்கள். இறுதியில், ஐ.பி.எம் முறை செயல்படுத்தும் வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்காமல்... பூச்சிகளைப் பூச்சிகள்கொண்டே கட்டுப்படுத்தும் முறைகள், பொறிப் பயிர்கள் மூலமாகக் கவர்ந்து அழிக்கும் முறைகளை மேற்கொள்வார்கள். விவசாயிகளாகவே இந்த முடிவை எடுக்க வைக்கும் வகையில் பயிற்சியளிப்பதுதான் வயல்வெளிப் பள்ளியின் நோக்கம்.

பயிற்சியின்போது, விவசாயிகள் வழக்கமான முறையில் செயல்படுத்தும் சாகுபடி முறையும் செயல்படுத்தப்படும். பயிற்சியின் இறுதியில், ஐ.பி.எம் முறை விவசாயத்துக்கும், வழக்கமான விவசாய முறைக்குமான வரவு, செலவு, பூச்சிக்கொல்லிப் பயன்பாடு போன்றவை ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படும். இரண்டு முறைகளையும் சீர்தூக்கிப் பார்க்கும் விவசாயிகள், ஐ.பி.எம் முறைதான் சிறந்தது என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதன் பிறகு, அதைத் தங்கள் வயலில் செயல்படுத்தத் தொடங்குவார்கள்.

உழவர் வயல்வெளிப் பள்ளி என்ற திட்டம் உலகில் 32 நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு, அதன் முடிவுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த உழவர் வயல்வெளிப் பள்ளியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள்... பருத்தி, நெல் பயிர் செய்யும் பகுதிகளில் உள்ள வேளாண்மை அலுவலர்களை அணுகினால், தங்கள் பகுதியில் இந்தத் திட்டம் நடைபெறுவது குறித்துத் தெரிந்து கொள்ளலாம். நீர்வள, நிலவளத் திட்டத்திலும் உழவர் வயல்வெளிப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாட்டை இரண்டு பூச்சிகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று தென்னையைத் தாக்கும் வளைய வடிவிலான வெள்ளை ஈ. மற்றொன்று மக்காச்சோளத்தைத் தாக்கும் இலையுதிர்காலப் படைப்புழு. இவை இரண்டுமே அயல்நாட்டுப் பூச்சிகள். ‘வெள்ளை ஈ தாக்குதலைத் தடுக்கத் தயவு செய்து பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டாம்’ எனத் தென்னை வளர்ச்சி வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. பூச்சிக்கொல்லி தெளித்தால் இந்த ஈக்கு எதிரான ஒட்டுண்ணிகள் வளர்வது தடுக்கப்படுகிறது எனக் காரணம் சொல்லப்பட்டுள்ளது. கேரளாவில் இதைக் கடுமையாகப் பின்பற்றுகிறார்கள். அதனால், அவர்களது தென்னை மரங்களில் தாக்குதல் குறைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பூச்சிக்கொல்லி தெளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும்.

படைப்புழுத் தாக்குதலைத் தவிர்க்க, ‘கலப்புப் பயிர்ச் சாகுபடி’ முறைதான் சிறந்தது என ஆப்பிரிக்க நாடுகளில் நிரூபித்துள்ளார்கள். எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும்போது, நிலைத்த நீடித்த, நஷ்டமில்லாத விவசாயத்தைச் சாத்தியமாக்கலாம்.

- வளரும்

தொடர்புக்கு

நீ.செல்வம், செல்போன்: 94435 38356

- ஆர்.குமரேசன்,  படம்: வீ.சக்தி அருணகிரி