Published:Updated:

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
News
கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான கொல்லிமலை பூமியில் இதுவரை பசுமைப்புரட்சி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சர்யமான உண்மை.

ஆம்... இன்றுவரை அந்தப் பூமியில் ‘ஆதித்தமிழர் வேளாண்மை’தான் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கொல்லிமலைப் பகுதிதான், பழைமைப்புரட்சி விவசாயம் நடக்கும் அந்த மாசில்லா பூமி. கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட சிறுதானியப்பயிர்களை மானாவாரி முறையில் காலங்காலமாகச் சாகுபடி செய்து வருகிறார்கள் கொல்லிமலையில் உள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்.

நாமக்கல் நகரிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கொல்லிமலை. கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொல்லி மலைக்குச் செல்ல மலைப்பாதையில் 26 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதால், மலைப்பாதைப் பயணம் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

சோளக்காடு எனும் கிராமத்தில் செயல்படுகிறது, பழங்குடி மக்கள் சந்தை. முழுக்க முழுக்கக் கொல்லைமலையில் விளையக்கூடிய விளைபொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கொல்லிமலையில் உள்ள 14 நாடுகளில் 250 கிராமங்கள் உள்ளன. அவற்றில் சேலூர் நாடு எனும் நாட்டுக்குட்பட்ட கிராமம், குழிப்பட்டி.

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இக்கிராமத்தில் சாலையோரம் இருந்த சிறுதானிய வயலில் ஒரு ஆணும் பெண்ணும் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர்களும் தங்களைச் செல்வராஜ், செல்லம்மா என்றும் நாங்கள் கணவன் மனைவி என்றும் நம்மிடம் அறிமுகமாகிக் கொண்டனர். சிறுதானியச் சாகுபடி குறித்துச் செல்வராஜிடம் பேசினோம்.

“இந்த மலையில எங்க குடும்பத்துக்கு ரெண்டு ஏக்கர் நெலம் இருக்கு. எங்க பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து பட்டம் தவறாமல கேழ்வரகு, தினை, வரகு, சாமைனு சிறுதானிய வெள்ளாமைதான் செய்றோம். போன பட்டத்துல வரகு, சாமை ரெண்டையும் போட்டிருந்தோம். இந்தப்பட்டத்துல குதிரைவாலி, கேழ்வரகுனு விதைச்சுருக்கோம். மொத்தம் 4 மாச வெள்ளாமை. கதிரு பிடிச்சு தலைசாயத் தொடங்கிடுச்சு. இன்னும் 10 நாள்ல அறுவடை செய்யலாம். முழுக்க முழுக்க மானாவாரி விவசாயம்தான். இதுவரைக்கும் எந்த ரசாயன உரத்தையும் வயல்ல போட்டதில்ல. தொழுவுரத்தை வண்டி வெச்சு நெலத்துக்குக் கொண்டு போக இங்க வசதி கிடையாது. அதனால, ஒவ்வொரு அறுவடை முடிஞ்சதும், மாடுகளை நெலத்துல மேய விடுவோம். நெலத்துலயே மாத்தி மாத்திப் பட்டிபோட்டு அடைச்சுடுவோம். ரெண்டு மாசம் மாடுங்க போடுற சாணம், மூத்திரம் ரெண்டும் நெலம் முழுசும் மண்டிக்கிடக்கும். அப்புறமா குட்டைக்கலப்பை போட்டு உழுதுவிடுவோம். ஏற்கெனவே அறுவடை செஞ்ச பயிரோட அடிக்கட்டையும் மண்டிக்கிடக்குற சாணமும் சேர்ந்து மண்ணை வளமாக்கிடும். அடுத்து விதைச்சு விடுவோம். மழை கிடைச்சுடுச்சுன்னா பயிர் ‘தளதள’னு வளர்ந்து வரும். அதே வேகத்துல களைச்செடிகளும் வளரும். அப்பப்போ களைகளை எடுத்து மாடுகளுக்குப் போட்டுடுவோம். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது. காட்டுச்செடிகள் இயற்கையா வளர்ற மாதிரிதான் இங்க சிறுதானியப் பயிரும் இயற்கையா வளருது” என்றார்.

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

தொடர்ந்து பேசிய செல்லம்மா, “மாடுகளைப் பட்டியடைச்ச நிலத்தை உழுது... வைகாசி மாசத்துல ஒரு ஏக்கர் நிலத்துல 3 கிலோ குதிரைவாலி விதையையும் 3 கிலோ கேழ்வரகு விதையையும் அடுத்தடுத்து விதைச்சு விடுவோம். விதைச்ச இருபதாம் நாள்லயும் முப்பதாம் நாள்லயும் களையெடுப்போம். அடுத்தடுத்து கிடைக்கிற மழையில பயிர் செழிப்பா வளர்ந்து வந்துடும். விதைச்ச 140 நாள்ல இருந்து 150 நாளுக்குள்ள அறுவடைக்கு வந்துடும்.  இங்க மலைக்குக் கீழ்ப்பகுதியில இருக்குற அளவுக்குப் பறவைங்களால பயிருக்குப் பாதிப்பு இருக்காது. ஏன்னா, மலையில நிறைய பழமரங்கள் இருக்குறதால, தானிய நெலத்துக்குள்ள அதிகமா பறவைகள் வராது. அப்படியிருந்தும் கிளி, மைனா, மயில் மாதிரியான பறவைகள் நெலத்துக்குள்ள வரும். அதையெல்லாம் நாங்க விரட்டமாட்டோம். அதுகளுக்குப் போக மீதிதான் எங்களுக்கு.

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

முதல்ல கேழ்வரகை அறுவடை செஞ்சு பாறைமேட்டுல காய வெச்சுத் தாம்பு பிடிச்சு தூத்தி மூட்டைப் பிடிப்போம். அடுத்த ரெண்டு மூணு நாள்ல குதிரைவாலியை அறுவடை செஞ்சு அதே மாதிரி காயவெப்போம். காய்ஞ்சதுக்கப்புறம் குச்சி வெச்சு அடிச்சா தானியம் பிரிஞ்சு வந்துடும். அதை மூட்டை பிடிச்சு வெச்சுடுவோம்.

ஒரு ஏக்கர் நிலத்துல 200 கிலோ அளவுக்குக் கேழ்வரகும், 75 கிலோ அளவுக்குக் குதிரைவாலியும் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கிட்டு, மீதியைப் பழங்குடி மக்கள் சந்தைக்குக் கொண்டுபோய் விற்பனை செய்வோம். இப்போதைக்கு ஒரு கிலோ கேழ்வரகை 30 ரூபாய்க்கும், குதிரைவாலியை 60 ரூபாய்க்கும் விற்பனை பண்றோம். இந்த விலைக்குத்தான் நாங்க விற்கிறோம். இயற்கை பொருள் விற்பனை செய்ற கடைக்காரங்க இங்க வந்து மொத்தமாக வாங்கிட்டுப் போய் இன்னும் கூடுதல் விலைக்கு விக்கிறாங்க. அதனால, விற்பனைக்குப் பிரச்னையில்லை. இந்த வருஷம் கொஞ்சம் மழை கிடைச்சுருக்கறதால, அதிகமான பரப்புல சிறுதானியம் போட்டிருக்காங்க” என்றார்.

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

செல்லம்மாவை இடைமறித்துப் பேசிய செல்வராஜ், “30 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் மலை முழுக்க ஏகத்துக்கும் சிறுதானியத்தைப் பயிர் செய்வாங்க. பஸ் வசதியெல்லாம் இல்லாத அந்தக் காலத்துல தானியங்களை மூட்டை கட்டி தலையில சுமந்து மலை மேல ஏறி இறங்கி... எருமைப்பட்டி, முள்ளுக்குறிச்சி, சேந்தமங்கலம்னு அடிவாரத்துல இருக்குற கிராமச் சந்தைகளுக்குக் கொண்டுபோய் விற்பனை செஞ்சுட்டு, வீட்டுக்குத் தேவையான துணிமணி, தீப்பெட்டி, உப்பு, தின்பண்டங்கள்னு வாங்கிட்டு கூட்டமா ஊர் திரும்புவோம்.

ஆனா, இப்ப அந்தக் கஷ்டம் இல்லை. பஸ், வேன்ல ஏத்தி கொண்டுபோய்ப் பக்கத்துலயே விற்பனை செஞ்சுடுறோம். போக்குவரத்துக்கு பைக், கார், பஸ், வேன்னு வசதிகள் வந்திடுச்சு. குழந்தைகள் படிச்சுட்டு வெளியூர்ல வேலை பார்க்கிறாங்க. ஆனா, என்ன நவீனம் வந்தாலும் விவசாயத்துல மட்டும் நாங்க நவீனத்தை அனுமதிக்கிறதில்லை” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு

சிவக்குமார்,
செல்போன்: 94866 91324
.

- ஜி.பழனிச்சாமி,  படங்கள்: நா.ராஜமுருகன்

கொல்லிமலை இயற்கை அங்காடி

கொல்லிமலையில் சிறுதானியச் சாகுபடியை மேம்படுத்தி, சிறுதானியங்களை மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்தும் விதமாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், ‘வல்வில் ஓரி ஆண்கள் சுய உதவிக்குழு’ சார்பில், ‘கொல்லிமலை இயற்கை விளைபொருள்கள் அங்காடி’ ஒன்றைக் கொல்லிமலையில் உள்ள சிறுநகரமான செம்மேடு பேருந்து நிலைய வளாகத்தில் அமைத்துள்ளது. அந்த இயற்கை அங்காடியின் விற்பனையாளர் மலர்விழியிடம் பேசினோம்.

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

“6 வருஷமா இந்த இயற்கை அங்காடி செயல்படுது. கொல்லிமலையில் இருக்குற 10 சுய உதவிக்குழுக்கள்கிட்ட இருந்து சிறுதானியங்களையும், மதிப்புக்கூட்டிய பொருள்களையும் கொள்முதல் செஞ்சு இங்க பேக் பண்ணி விற்பனை செய்றோம். சாமை, தினை அரிசி, வரகு, குதிரைவாலி, சாமை உப்புமா கலவை, சாமை தோசைக்கலவை, சாமை பஜ்ஜி கலவை, தினை பாயசம் கலவை, தினை லட்டு, ராகி மால்ட், ராகி முறுக்கு மாதிரியான உணவுப்பொருள்களை இங்க விற்பனை செய்றோம். அதோட மலையில விளையுற மிளகு, கிராம்பு, ஏலக்காய், கருமொச்சை, செம்மொச்சை, மல்லி, காபித்தூள்னும் விற்பனை செய்றோம்” என்றார் உற்சாகத்துடன். 

கொல்லிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர், சிவக்குமார். அவரிடம் பேசியபோது, “நபார்டு வங்கி உதவியுடன் கொல்லிமலை வேளாண் பல்லுயிர் வள உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், கொல்லிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கொல்லிமலையில் மூன்றாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

இதில் 500 மலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் மூலமாகக் கொல்லிமலையில் விளையும் அனைத்து விளைபொருள்களையும் சந்தைப்படுத்துகிறார்கள். மேலும், பால் உற்பத்தியை மேம்படுத்தும் விதமாகக் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் வங்கிக்கடன் வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதோடு, சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாகச் சிறுதானிய உணவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன” என்றார் நம்பிக்கையுடன்.

14 நாடுகள்

வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர்நாடு, சேலூர் நாடு, தேவனூர்நாடு, ஆலந்தூர் நாடு, குண்டனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு ஆகியவை கொல்லிமலைப்பகுதியில் உள்ள 14 நாடுகள் ஆகும்.

கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி!

தாம்படித்தல்

கொல்லிமலை விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த கதிர்களைக் கதிரடிக்க, இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. பாரம்பர்ய முறைப்படி தாம்படித்தல் மூலம் தானியங்களைப் பிரிக்கிறார்கள். களத்தில் கொட்டிப் பரப்பிய தானியக்கதிர்கள் மீது மாடுகள் பூட்டி, வட்டமாக திரும்ப திரும்ப ஓட்டுகிறார்கள். சில மணித்துளிகளில், கதிர்களிலிருந்து தானியங்கள் பிரிய, அந்தக்குவியலைக் காற்றில் தூற்றி, சுத்தமாகும் தானியங்களை மூட்டை பிடிக்கிறார்கள். இதற்கு ‘தாம்படித்தல்’ என்று பெயர். நெல் அறுவடையில் இதை மாடுகட்டி போரடித்தல் என்பார்கள்.