Published:Updated:

ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு!

ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு!

மகசூல்

தென் மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் இன்றளவும் சிறுதானியங்கள்தான் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. பசுமைப்புரட்சி வந்த பிறகு, அனைத்துப் பயிர்களுக்குமான பாரம்பர்ய ரகங்கள் ஒழிக்கப்பட்டு வீரிய ரகங்கள் புகுத்தப்பட்டன. அவற்றில் சிறுதானியங்களும் தப்பிக்கவில்லை. ஆராய்ச்சி மையங்கள் மூலம், சிறுதானிய வகைகளில் வீரிய ஒட்டு ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அவற்றைத்தான் தற்போது பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும் பாரம்பர்ய நாட்டு ரகங்களை மட்டுமே சாகுபடி செய்யும் விவசாயிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால்சாமி. இவர் தன் மனைவி ராஜேஸ்வரியோடு இணைந்து ‘காட்டுக்கம்பு’ என்று சொல்லப்படும் நாட்டுரகக் கம்பை மானாவாரியாகச் சாகுபடி செய்து வருகிறார்.

சாத்தூரிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓ.மேட்டுப்பட்டி எனும் கிராமம். இங்குதான் உள்ளது, கோபால்சாமியின் மானாவாரி நிலம். நிலத்தின் அருகிலேயே வீட்டுடன் கூடிய தொழுவமும் உள்ளது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார், கோபால்சாமி.

ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு!

“பரம்பரை விவசாயிகள் நாங்க. நான் ரெண்டாம் வகுப்புக்கு மேல படிக்கலை. அப்பாவுடன் சேர்ந்து ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். முழுக்க மானாவாரி விவசாயம்தான். கம்பு, சோளம், குதிரைவாலி, கொள்ளு, உளுந்து, பாசி, மக்காச்சோளம்னு சாகுபடி செய்வோம். ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் குப்பையை (மட்கிய தொழுவுரம்) மட்டும்தான் போட்டு விவசாயம் செய்றோம். எனக்கு மொத்தம் 5 ஏக்கர் கரிசல் மண் நிலம் இருக்கு. போனமுறை ஒரு ஏக்கர் நிலத்துல நாட்டுக்கம்பு, ரெண்டு ஏக்கர் நிலத்துல சோளம்னு சாகுபடி செஞ்சேன். இப்போ 5 ஏக்கர் நிலத்தையும் உழுது வெச்சு மழைக்காகக் காத்திருக்கேன்” என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், கோபால்சாமியின் மனைவி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு!

“நாங்க சாகுபடி செஞ்சது, நாட்டு ரகக் கம்பு. இதை இந்தப்பகுதியில காட்டுக்கம்புனு சொல்வாங்க. இதுக்கு ஒரு மழை கிடைச்சாப் போதும். சரசரனு வளர்ந்திடும். இந்தத் தட்டைகள் 8 அடியிலிருந்து 9 அடி உயரம் வரை வளரும். ஆனால், ஒடியாது, வளையாது. இது வறட்சியைத்தாங்கி வளரும். எல்லா வகையான மண்ணுலயும் வரும். இதுல நார்ச்சத்து அதிகமா இருக்கு. அந்தக் காலத்துல கம்பங்கூழ் குடிச்சுட்டுதான் வேலைக்குப் போவாங்க. நாங்க வாரத்துக்கு ரெண்டு நாள் கம்பை உரல்ல போட்டுக் குத்தி , சோறு சமைச்சு சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கோம். இந்த நாட்டுக்கம்புல ஒரு தட்டையில் 45-50 கதிர்கள் வரை இருக்கும்” என்ற ராஜேஸ்வரி மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

ஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு!

“ஒரு ஏக்கர் நிலத்துல சாகுபடி செஞ்சதுல 612 கிலோ கம்பு கிடைச்சது. இதுல 75 கிலோ கம்பை வீட்டுத் தேவைக்காவும் விதைக்காகவும் எடுத்து வெச்சுருக்கோம். மீதி 537 கிலோ கம்பையும் ஒரு கிலோ 70 ரூபாய்னு வியாபாரிகள்கிட்ட விற்பனை செஞ்சுட்டோம். அந்த வகையில 37,590 ரூபாய் வருமானமாகக் கிடைச்சது. அதுல எல்லாச்செலவும் போக, 26,000 ரூபாய் லாபமா நின்னது. அறுவடை முடிஞ்சதும் கம்பந் தட்டைகளை நிலத்தில் போட்டு மட்க வெச்சு உரமாக்கிடுவோம். கம்புச் சாகுபடி செஞ்சா உழவைத் தவிர எந்த வேலையும் கிடையாது. எந்தப் பராமரிப்புமே செய்யாம கணிசமான வருமானம் கட்டாயம் கிடைக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு

ராஜேஸ்வரி,
செல்போன்: 97902 91225

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்..!

ரு ஏக்கர் பரப்பில் நாட்டுக்கம்புச் சாகுபடி செய்வது குறித்து ராஜேஸ்வரி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

நாட்டுக்கம்புச் சாகுபடிக்கு கரிசல் மண் உகந்தது. தென் மாவட்டங்களில் உள்ள மானாவாரிப் பகுதிகளுக்குக் கம்புச் சாகுபடி செய்ய ஐப்பசி மற்றும் கார்த்திகைப் பட்டங்கள் ஏற்றவை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் ஆடி மாதத்தில் 4 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பிச் சட்டிக்கலப்பை கொண்டு உழ வேண்டும். புரட்டாசி மாதத்தில் டில்லர் கொண்டு ஓர் உழவு செய்து நிலத்தைக் காயவிட வேண்டும். ஐப்பசி மாதம் முதல் மழை பெய்ததும் நிலத்தில் களைகள் முளைக்கும். டில்லர் மூலம் களைகள்மீது உழுது 5 கிலோ விதைக்கம்பைப் பரவலாக வீசி விதைக்க வேண்டும். விதைத்த 5-ம் நாளுக்கு மேல் முளைப்பு தெரியும். 15-ம் நாளுக்கு மேல் சீரான இடைவெளி இருக்குமாறு நாற்றுகளைக் கலைத்து நடவு செய்ய வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் தேவைப்பட்டால் மட்டும் களை எடுக்கலாம்.

40-ம் நாளுக்கு மேல் பூத்து 60-ம் நாளுக்கு மேல் பால் பிடித்து, 90-ம் நாளுக்கு மேல் கதிர்கள் முற்றத் துவங்கும். 110-ம் நாளுக்கு மேல் கதிர்கள் பச்சை நிறத்திலிருந்து வெளிர் நிறத்துக்கு மாறும். 120-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம். கதிரிலிருந்து மணிகளை உதிர்த்து வாயில் போட்டு மென்றால், ‘கடக்... கடக்’ எனச் சத்தம் வரும். இதுதான் அறுவடைக்கான பருவம். அறுவடை செய்யும்போது, கம்பந்தட்டைகளில் நன்றாக விளைந்த கதிர்களைப் பிரித்தெடுத்து விதையாகப் பயன்படுத்தலாம்.