Published:Updated:

கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...

கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...

நாட்டு நடப்பு

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோதாவரி டாங்கே (Godavari Dange) என்ற பெண்மணியை, ‘சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியக’த்தின் (International Fund For Agricultural Development-IFAD) சிறப்புத் தூதுவராக நியமித்துள்ளது, அமெரிக்க அரசு. சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியகத்தில் 20 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

கோதாவரி டாங்கே, கடந்த ஏழு ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றிப் பல சர்வதேசக் கருத்தரங்குகளில் உரையாற்றி வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கோதாவரி டாங்கேவிடம் பேசினோம்.

“மஹாராஷ்டிர மாநிலம் ஓஸ்மனாபாத் பகுதியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். எனக்கு மூன்று சகோதரிகள். ஏழாம் வகுப்பு வரைதான் படித்தேன். எனக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. இருபது வயதுக்குள் இரு குழந்தைகளுக்குத் தாயானேன். அந்தச் சமயத்தில் எனது கணவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டார். அதன் பிறகு, வாழ விருப்பமின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு திருப்பமாக ஒரு சுய உதவிக்குழுவில் இணைந்தேன்.

கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரேமா கோபாலன் என்பவரின் தலைமையில் இயங்கும் ‘ஸ்வயம் சிக்க்ஷன் பிரயோக்’ (SSP-SWAYAM SIKSHAN PRAYOG) என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கியது நான் இருந்த மகளிர் சுய உதவிக்குழு. அந்தத் தொண்டு நிறுவனம் செயல்படுத்திய ‘பெண் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்ட’த்தில் சேர்ந்து, வேளாண் விளைபொருள்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்பு மற்றும் முறைகள், விலை நிர்ணயம், கூலி ஆள்களை நியமித்தல், நிதி நிர்வாகம், கடன் பெறும் வழி, கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன். தொடர்ந்து அடிப்படைக் கல்வி அறிவு அவசியம் என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன்.

அதற்குப்பிறகு, சுற்று வட்டாரக் கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வழி வகைகளை ஆராய்ந்தேன். வறட்சி வாட்டி வதைத்தபோது, தண்ணீர்த் தேவை அதிகம் இல்லாத காய்கறி மற்றும் பயறு வகைகளை இனம் கண்டு, அவற்றைப் பயிரிட ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி அளித்தேன். அதனால், நல்ல மாற்றம் ஏற்பட்டது. விவசாயப் பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவை குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஓர் அமைப்பை நிறுவினேன். தற்போது 5,000 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். தொடர்ந்து ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கிச் செயலராகப் பணியாற்றுகிறேன். எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 4,500 பெண் விவசாயத் தொழில் முனைவோர் உருவாக்கப் பட்டுள்ளனர்.

கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...

எனது தலைமையில், விஜயலக்ஷ்மி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மஞ்சரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களைத் தொடங்கியுள்ளேன். 10 பெண்களை நிர்வாக இயக்குநர்களாகக் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இரு நிறுவனங்களும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு, நியூயார்க் நகரில் நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கலந்து கொண்டேன். கடந்த ஏழு ஆண்டுகளில் 16 நாடுகளில் நிகழ்ந்த மகளிர் மேம்பாடு குறித்த சர்வதேசக் கருத்தரங்கங்களில் பங்கு கொண்டுள்ளேன். மைசூரில் உள்ள சமூகச் சேவை அமைப்பு ஒன்று எனக்கு 3 லட்சம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியுள்ளது. அமெரிக்கா அரசு, சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியகத்தின் சிறப்புத் தூதராக என்னை நியமித்துள்ளது” என்ற கோதாவரி டாங்கே நிறைவாக,  “நான் கற்ற நடைமுறைக்குச் சாத்தியமான அறிவுதான் எனக்குத் தன்னம்பிக்கை ஊட்டிச் சாதிக்க வைத்தது. நான் கற்றுக்கொண்டவற்றை அடித்தட்டு மக்களுக்குப் போதிப்பதே என் வாழ்க்கை லட்சியம்” என்றார் உறுதியுடன்.

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்